தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-5.1-பொன்மலர்

  • 5.1 பொன்மலர்

    அகிலன் பல புதினங்களைப் படைத்திருந்தாலும், அவரது சமுதாயப் புதினங்களுள், பொன்மலர் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது.

    5.1.1 கதைச்சுருக்கம்

    அகிலனின் படைப்பான பொன்மலர் நாவலின் முதன்மைப் பாத்திரம் டாக்டர் சங்கரி. இருபத்தைந்து வயது நிரம்பிய இவள் பார்ப்பவரை வசீகரிக்கும் அழகு உடையவள். இவள் மயிலாப்பூரில் டாக்டர் பார்வதி உருவாக்கிய லட்சுமி நர்ஸிங் ஹோம் என்னும் பெண்கள் மருத்துவமனையில் பணிபுரிகிறாள்.

    சங்கரி

    அன்று டாக்டர் சங்கரி வழக்கத்திற்கு மாறாக மிகவும் தாமதமாக இரவு ஏழுமணிக்கு வீடு திரும்பினார். வீட்டு வேலைக்காரி முனியம்மாள் சங்கரிக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறாள். ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கச் சென்ற சங்கரியின் வீட்டுக் கதவை நள்ளிரவில் ஓர் இளைஞன் தட்டினான். தன் மனைவி பிரசவ வலியால் துடிப்பதாகவும்; அவளைக் காப்பாற்ற வேண்டும் என்றும் சொன்னான். சங்கரி அவனுடன் புறப்பட்டுச் சென்று, கடவுளை வேண்டிக் கொண்டு கடமையில் ஒன்றினாள். சில நிமிடங்களில் தாய்க்கும் சேய்க்கும் புத்துயிர் அளித்தாள்; வீடு சென்று ஓய்வு எடுத்துவிட்டு அடுத்தநாள் காலை மருத்துவ மனைக்குப் புறப்பட்டாள்.

    மருத்துவமனையில் அவளுக்காகப் பிரசவம் ஒன்று காத்திருந்தது. அப்பெண்ணின் பெயர் காமாட்சி. வசதி படைத்தவள். பிரசவம் முடிந்து பிறந்த பெண் குழந்தையைத் தந்தை திருமூர்த்தியிடம் செவிலிப்பெண் (நர்ஸ்) காட்டி வந்தாள். அப்போது சங்கரி திருமூர்த்தியைக் கண்டாள்; திடுக்கிட்டாள்.

    குருமூர்த்தி

    அன்று வேலைகள் முடிந்து வீடு வந்து சேர்ந்த சங்கரி கதவை உட்புறம் தாழிட்டுவிட்டு அலமாரியிலிருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள். தற்போதுள்ள திருமூர்த்தியின் உருவத்தில் பத்து வருடத்தினைக் கழித்தால் தோன்றும் உருவம் அப்புகைப்படம். அப்புகைப்படத்தில் இருப்பவன் பெயர் குருமூர்த்தி. திருச்சியில் மாணவியாக இருந்தபோது இவள் அழகில் மயங்கிய இளைஞர்களுள் குருமூர்த்தியும் ஒருவன். அவனிடம் இருந்த பணம் அவனுக்கு விடாமுயற்சியையும், நம்பிக்கையையும் தந்தது. எதிர்காலத்தின் இனிய கனவுகளை ஏற்படுத்திய அவனுக்காக அலங்கரித்த காலம் போய் இப்போது இவள் ஓர் உறுதியுடன் வாழ்கிறாள். மருத்துமனையில் அவளைச் சுற்றியிருப்போருக்காக வாழ்கிறாள்; அதில் அவள் மனநிறைவு காண்கிறாள்.

    மாலையில் மருத்துவமனையில் இருந்து கிளம்பும்போது ஐந்து வயதுக் குழந்தை ராதா காமாட்சியை அணைத்து நிற்கின்றாள். அக்குழந்தையின் சாயல் சங்கரியை மெய்ம்மறக்கச் செய்கிறது. அவள் அக்குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுகிறாள். வீடு வந்து சேர்ந்த பிறகும் குழந்தையின் முகம் அவள் மனதில் வந்து சென்றது. அப்போது தொலைபேசியின் மணி அடிக்கவே எடுத்துப் பேசிய சங்கரி மறுமுனையில் பேசிய திருமூர்த்தியின் குரலில் குருமூர்த்தியின் குரலைத்தான் கேட்டாள். குருமூர்த்தி இறந்த செய்தியையும் அவன் திருமூர்த்தியின் சகோதரன் என்பதையும் அப்போது அவள் அறியவில்லை.

    லஞ்சம்

    சங்கரியின் திறமையை எண்ணி அவளைக் குடும்ப டாக்டராக்கிய திருமூர்த்தி, அவளுக்கு ஆயிரம் ரூபாய் அளித்தான். நன்கொடை என்று எண்ணிய சங்கரி அது தனக்காக அளிக்கப்பட்டது என்று அறிந்தவுடன் தன் குறிப்புப் புத்தகத்தில் லஞ்சம் வாங்கிய கள்ளப்பணம் ஆயிரம் என்று எழுதினாள்.

    திருஞானத்தின் கடிதம்

    ஒருநாள் வீட்டில் சங்கரி புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது ஒரு துண்டுக் காகிதத்தில் திருஞானம் - திருச்சி என்பதைப் பார்த்தவுடன் முகமலர்ச்சியுற்று அவனை உள்ளே வரச் சொல் என்று முனியம்மாவிடம் கூறினாள். சங்கரியின் உறவினனான அவன் டெல்லியில் மருந்துக் கம்பெனியில் வேலை பார்ப்பதாகக் கூறினான். வெகுநேரம் உரையாடி விட்டு உணவு உண்டு பின் விடைபெறும் முன், அவன் ஒரு கடிதத்தை விட்டுச் சென்றதையும் சங்கரி கவனித்தாள். அக்கடிதம் அவளின் நிலையை எடுத்துரைத்தது.

    திருச்சியில் குருமூர்த்தியுடன் பழகிய நேரத்தில், திருஞானம் குருமூர்த்தியுடன் பழகுவதில் கவனம் தேவை என்றான். சங்கரிக்கு இதில் உடன்பாடு இல்லை. சங்கரியின் அப்பா இறந்தவுடன் தற்கொலைக்கு முயலமாட்டேன் என்று சத்தியம் வாங்கிய அவன் அங்கிருந்து நகர்ந்தான். “உனக்கு என்று ஒரு துணை வேண்டும்” என்றவனிடம் அவள் “எனக்கு யார் துணையும் தேவையில்லை” என்று மன உறுதியுடன் கூறினாள். அவன் இவ்வாறு அறிவுரை கூறி, சத்தியம் வாங்காமல் இருந்திருந்தால் கல்லூரித் தலைவியிடம் அடைக்கலம் புகுந்து அவள் இந்த நல்ல நிலையை அடைந்திருக்க மாட்டாள்.

    குழப்பம் தீர்ந்தது

    பிறந்த திருமூர்த்தியின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவின் போது திருமூர்த்தி குருமூர்த்தியோ என்ற சங்கரியின் குழப்பம் அவனின் தங்கை ராஜேசுவரியின் மூலம் நீங்கிற்று. அவள் குருமூர்த்தி இறந்த செய்தியை அறிந்து கொண்டாள். அவ்விழாவில் திரைப்படத் துறையினரும், பெரிய மனிதர்களும் கலந்து கொண்டனர்.

    குமுதா

    ஒருநாள் திருமூர்த்தி தொலைபேசியில் சங்கரியை விரைவாக வரவேண்டும் என்று கூறிவிட்டு நேரில் வந்து குமுதா வீட்டிற்கு அழைத்துச் சென்றான். குமுதா அன்பும் ஆதரவுமற்ற பெண். அவனால் சீரழிக்கப்பட்டுக் குழந்தைக்குத் தாயானவள். திருமூர்த்தி அவளைச் சாகடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவன். இதற்குச் சங்கரியைப் பங்காளியாய் ஆக்க எண்ணினான். இதனை அறிந்து கொண்ட சங்கரி அவனது விருப்பத்தை நிறைவேற்றுவதாகக் கூறினாள். அதற்காக அவளுக்குக் கார் வாங்கிப் பரிசளித்தான். குமுதா வீட்டிற்குச் சென்று வைத்தியம் பார்த்த சங்கரி மனத்தில் ஒரு திட்டம் தீட்டினாள். அதன்படி ருக்மணியம்மாள் தனது ஓய்விற்குப் பிறகு நடத்தும் குழந்தைகளுக்கான சிறிய பள்ளியில் குமுதாவை ஒப்படைத்தாள்.

    குமுதாவைக் காணாத திருமூர்த்தி சங்கரியிடம் தொலைபேசியில் கேட்க, “எல்லாம் கச்சிதமாய் முடிந்துவிட்டது. நீங்கள் பயப்பட வேண்டாம்” என்று உற்சாகத்தோடு கூறத் திருமூர்த்தி பேயறைந்தவன் போலானான்.

    திருமூர்த்தியும் சங்கரியும்

    திருமூர்த்தி சங்கரியைத் திரைப்படத் துறையில் நடிக்க வைத்து முன்பணமாக ஒருலட்சம் ரூபாய் வரை வாங்கலாம் என்று எண்ணினான். சங்கரி பெங்களூரில் நடக்கும் மாநாட்டிற்குச் செல்வதாகக் கூறியவுடன், தனது பங்களாவில் தங்க ஏற்பாடு செய்துவிட்டு மறுநாளே அவனும் அங்கு வந்து சேர்ந்தான். அடுத்து வரும் நாட்களில் மாநாட்டு வேலைகள் முடிந்து சங்கரி ஊர் திரும்ப ஆயத்தம் ஆனபோது, திருமூர்த்தி அவளுக்காகக் கடை கடையாக ஏறி இறங்கி வாங்க வேண்டியவற்றை வாங்கிய பின் பங்களாவிற்குத் திரும்பினான். தான் வாங்கி வந்த வைர வளையல்களை வலியச் சென்று தானே அவள் கையில் அணிவித்தான். பெங்களூரில் இருந்து வந்த சங்கரியைக் காணத் திருஞானம் காத்திருந்தான்.

    சங்கரி திருமூர்த்தியுடன் பழகுவதைத் தடுக்க ஏனோ திருஞானம் தயக்கம் காட்டினான். திருஞானம் தனக்கு வேலை இல்லை என்றான். அவள் ‘தான் திருமூர்த்தியிடம் கூறி வேலை வாங்கித் தருவதாகக்' கூறினாள்.

    திருஞானம் எந்த நோக்கத்திற்காகத் திருமூர்த்தியிடம் வேலைக்கு அமர்ந்தானோ அது திருமூர்த்தியின் தங்கை ராஜேசுவரியால் எளிமையாயிற்று. ஏனெனில் அவள் திருஞானத்திடம் அன்பு கொண்டாள்.

    சங்கரி திருச்சி சென்று வரும் செய்தி திருமூர்த்தியை உறுத்த, அதைப் பற்றித் திருஞானத்திடம் கேட்டான். தனக்கு எதுவும் தெரியாது என்றும், அங்கு சங்கரிக்கு உறவினர் எவரும் இல்லை என்றும் கூறினான். முனியம்மாவிடம் கேட்டான். அவள் தன் அம்மாவைக் காணச் சென்றுள்ளதாகக் கூறியவுடன் இவனது சந்தேகம் வலுப்பெற்றது. ஏனெனில் சங்கரியின் தாயார் இறந்து விட்டார் என்பதை அறிவான். காரணம் அறிய மோட்டார் சைக்கிளில் சென்றான். ஆனால் கார் பாதி வழியிலேயே திரும்பிவர, அவன் சந்தேகம் மேலும் வலுவடைந்தது.

    சங்கரியைப் பற்றித் தெரிந்து கொள்ளச் செய்த பல முயற்சிகளில் ஒன்றாக உல்லாசப் பயணமும் இடம் பெற்றது. அச்சமயம் சங்கரி திருமூர்த்தியின் முறை கேடான செய்கைகளைக் கூறிச் சாடினாள். அப்போது சங்கரி என்ற மகாசக்தி, அவனது இரத்தத் திமிர் அனைத்தையும் உறிஞ்சி உமிழ்ந்து விட்டதை உணர்ந்தான்.

    ஒரு முறை ‘சாரதாவுக்கு உடல்நிலை சரியில்லை; உடனே புறப்பட்டு வரவும்' என்னும் அவசரத் தந்தி திருச்சியிலிருந்து சங்கரிக்கு வர அவள் பதற்றத்தோடு புறப்பட்டாள். ஒரு குறிப்பு எழுதித் திருச்சி செல்லும் விஷயத்தைத் திருஞானத்துக்குத் தெரிவித்து அங்கு வரக் கூறியிருந்தாள். சாரதா சங்கரிக்கும், குருமூர்த்திக்கும் பிறந்தவள். சாரதாவைக் கண்டவுடன் சங்கரி “அம்மா இனி உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன் உன்னையும் அழைத்துச் செல்வேன்” என்றாள். இது திருஞானத்திற்குத் தெரியாது.

    திருச்சியில் திருஞானத்தைச் சந்தித்தவுடன் தன் இரகசியங்கள் அனைத்தையும் கூற நீண்ட கடிதம் எழுதினாள். ஏனெனில் திருஞானம் ஒரு உளவுத்துறை அதிகாரி என்பதைச் சங்கரி அறிந்திருந்தாள். மேலும் குமுதா என்ற பெண் கொலை செய்யப்படவில்லை, பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாள் என்பதையும், திருமூர்த்தியால் கொடுக்கப்பட்ட குழந்தையுடன் இருப்பதாகவும், அவன் பெரும் குற்றவாளி என்பதையும் தெளிவுபடுத்தி எழுதினாள்.

    இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சங்கரி, சாரதா, திருஞானம் மூவரும் காரில் வரும்போது அவர்களது காரை ஒரு கார் பின் தொடர்ந்து வருவதைக் கவனித்த சங்கரி தன் ஓட்டுநர் ரங்கனிடம் அதனைத் தவிர்க்குமாறு கூறினாள். அவன் சாமர்த்தியமாக ஓட்டிப் பின் தொடர்ந்த காரை விபத்துக்குள்ளாக்கினான். திருமூர்த்தி உளவு பார்க்க அனுப்பிய கார் அது.

    திருமூர்த்தியின் முடிவு

    விவரங்கள் அனைத்தையும் அறிந்த திருமூர்த்தி தான் மாட்டிக் கொண்டதை உணர்ந்தான். பின்விளைவுகளுக்குப் பயந்து அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி, உயிரை இழந்தான்.

    திருஞானமும் சங்கரியும்

    திருஞானத்துக்கு டெல்லிக்கு வரச் சொல்லி அழைப்பு வந்தவுடன், செல்வதற்குமுன் சங்கரியிடம் தான் அவளை விரும்புவதாகத் தெரிவித்தான்.

    இரவு திருஞானத்தை வழியனுப்ப விமான நிலையம் சென்ற சங்கரி தான் இருக்க வேண்டிய இடத்தில் ராஜேசுவரிக்கு இடம் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். விமானம் மேலே பறக்க ஏனோ அவள் உள்ளம் வானத்தில் சிறகடித்து விமானத்தோடு ஒன்றிப் பறந்தது.

    5.1.2 கதைக் கரு

    (1) பெண்மையின் மேன்மை

    (2)பெண்ணின் (சீரழியும்) நிலை குறித்த படைப்பாளரின் பரிவுணர்ச்சி

    (3) சமுதாயத்தில் பணக்காரர்களின் நிலை

    (4) பொருளாதாரச் சீரழிவு

    (5) கருப்புப் பணம், இலஞ்சம், கலப்படம்

    போன்ற இவற்றை உள்ளடக்கிய கதைக்கருவை இப்புதினம் கொண்டுள்ளது.

    அகிலனின் இந்த நாவல் சமுதாயத்தில் காணப்படும் சீரழிவுகளைத் தோலுரித்துக் காட்டும் எதார்த்தப் போக்கினைக் கதைக் கருவாகக் கொண்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:20:51(இந்திய நேரம்)