தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-5.4-உத்திகள்

  • 5.4 உத்திகள்

    நாவலின் சிறப்புக்குக் காரணமாக அமைவது அதனுள் பொதிந்து கிடக்கும் திறன்மிகு கூறுகளேயாகும். நாவலில் சொல்லப்படுகிற கருத்துகள் அழகுறச் சொல்லப்பட வேண்டும். அகிலனின் பொன்மலர் நாவலில் தலைப்பு, தொடக்கம், முடிவு, கருப்பொருள், வருணனை, பின்நோக்கு ஆகிய உத்திகள் அமைந்துள்ள தன்மைகளை இனிக் காண்போம்.

    5.4.1 தலைப்புப் பொருத்தம்

    படைப்பின் தலைப்பு ஆசிரியரின் கலைநுட்ப வெளிப்பாட்டின் ஒரு கூறாகும். கதையின் தலைமைப் பண்பைச் சுட்டும் வகையில் தலைப்பு அமையுமானால், அது படைப்பின் தரத்தை உயர்த்தும்.

    ‘பொன்மலர் நாற்றம் உடைத்து' என்று நாம் எத்தனையோ முறை கேள்விப்பட்டிருக்கிறோம். பொன்னால் ஆன மலருக்கு நறுமணம் இருந்து விட்டால் எப்படி இருக்கும்? இருந்தால்தானே? என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் எளிதிலே வாடாமல் பொன்னிறம் பெற்று நெடுந்தூரம் மணம் வீசும் தாழம்பூவையே பொன்மலர் என்கிறார் நாவலாசிரியர் அகிலன்.

    மணம் நிறைந்த பொன்மலர் போன்ற டாக்டர் சங்கரி இன்றைய உலகத்தில் பெண்ணுக்குள்ள சக்தியை நன்குணர்ந்தவள். பணத்தின் அருமை, அதன் வலிமை, அதன் பெருமை யாவும் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவ்வாறே அதன் சிறுமைகளையும், கொடுமைகளையும் அறிந்து கொண்டவள் அவள். எனவே இந்நாவலுக்குப் பொன்மலர் என்ற தலைப்பு மிகவும் பொருத்தமுடையது.

    5.4.2 வருணனை

    புலன்களால் உணர்ந்தவற்றைச் சொற்களால் வடித்துக் காட்டுவதே வருணனையாகும். பொன்மலரில் சங்கரியை வருணிக்கும் போது,

    “நடுத்தர உயரம், தாழம்பூவின் நிறம், செதுக்கி வார்த்த செம்பொற் சிலை போன்ற உடல் வனப்பு, வட்டமான முகம், அதில் தாழை மடல் போன்ற விழிகள்”

    என நாவலின் உட்பொருளோடு வருணித்திருக்கும் அகிலனின் திறம் பாராட்டுதற்குரியது. இது போன்ற பல வருணனைகள் இந்நாவலில் உள்ளன.

    5.4.3 பின்நோக்கு உத்தி (Flash back)

    கதையாசிரியர்கள் கதையைத் தொடங்கி அதில் போராட்டச் சூழலை உருவாக்கிய பிறகு, பின்நோக்கு உத்தி முறையில் கடந்த கால நிகழ்ச்சிகளை விரித்துக் கூறுவதும் ஒரு உத்தியாகும்.

    இந்நாவலில் டாக்டர் சங்கரியிடம், ராஜேசுவரி குருமூர்த்தி பற்றிய செய்திகளைக் கூறுவது பின்நோக்கு உத்தி முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:21:04(இந்திய நேரம்)