தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கதைமாந்தர் படைப்பு

  • 5.2 கதைமாந்தர் படைப்பு

    நாவலின் சிறப்பு ஆசிரியன் உருவாக்கும் பாத்திரத்தின் பண்பு, உயிரோட்டம், எண்ணிக்கை இவற்றைப் பொறுத்தும் சிறக்கும். மேலும் கதைமாந்தர் என்பவர் சமுதாயத்தில் காணப்பெறும் பல்வேறுபட்ட பண்புகளின் சின்னமாவர். அத்தகைய பாத்திரங்கள் தலைமை மாந்தர், துணைமாந்தர், சார்புநிலை மாந்தர் எனப் பாகுபடுத்தப் பட்டுள்ளன.

    5.2.1 தலைமை மாந்தர்

    தலைமை மாந்தர் என்பவர் குறிப்பிட்ட புதினத்தில் அதிகமாகச் செயல்படுகிறவராகவும், அச்செயல்களால் தொடர்பினை ஏற்படுத்துபவராகவும் இருப்பார். இந்நாவலில் சங்கரி, திருமூர்த்தி, திருஞானம் ஆகியோர் தலைமைப் பாத்திரங்கள் வரிசையில் இடம் பெறுகின்றனர்.

    சங்கரி

    இருபத்து ஐந்து வயது நிரம்பிய சங்கரி அன்பு, தயை, கடமை, உதவி புரியும் பண்பு, மனஉறுதி ஆகிய பண்புகளைப் பெற்றவள். பொன்னுக்குரிய கடினமும், மலருக்குள்ள மென்மையும் ஒருங்கே பெற்றவள்.

    சங்கரியின் சொல்லும், செயலும் படிப்போரைத் திகைக்க வைக்கின்றன. ஏனெனில் அவள் நல்லவர்களோடு நல்லவளாயும், பொல்லாதவர்களோடு பொல்லாதவளாயும் செயல்படுகிறாள்.

    அவள் திருமூர்த்தி கொடுக்கும் பணத்தைப் (ஆயிரம் ரூபாய்) பத்திரப்படுத்தும் நிலையில் பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவளாக உள்ளாள்.

    பணத்தின் அருமை, அதன் வலிமை, அதன் பெருமை யாவும் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவளின் இயல்புகளை, “பேச்சுக்களும், செயல்களும் மட்டும் கண்டு முகம் சுளிக்காதீர்கள். உள்ளே எரியும் தணலை மறந்துவிட்டு வெறும் சாம்பல் என்று நினைக்காதீர்கள்” என்ற கூற்றிலிருந்து அறியலாம்.

    திருமூர்த்தி

    காமாட்சியின் கணவனான திருமூர்த்தி வாட்ட சாட்டமான உருவமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவன். வெளித் தோற்றத்தில் அமைதியானவன் போலக் காணப்பட்டாலும் அவனது விழிகள் அவனது அமைதியற்ற தன்மையினைப் பறைசாற்றின. குறிப்பிட்ட சில மணிநேரங்களிலேயே பணம் புரட்டிடும் வித்தையில் கைதேர்ந்தவன்.

    அவன் மூலதனம் இல்லாதவர்களுக்கு மூலதனம் அளித்து அவர்களால் பணம் சம்பாதித்து அவர்களைத் தன் வலைக்குள் வைத்து ஆட்டி வைப்பவன்.

    அவன் இயற்கையாகவே எதையும் குறுக்கு வழியில் விரைவாக முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுபவன் அவன் என்பது, “திருமூர்த்தியை நான் தனிநபராகக் கருதவில்லை. திருட்டுக் கூட்டத்தின் பிரதிநிதிகளில் அவர் முக்கியமானவர்” என்னும் சங்கரியின் கருத்தின் மூலம் வெளிப்படுகிறது.

    தன் பணத்தின் மீது நம்பிக்கை கொண்டவன்; புகழினை விரும்பிப் பணத்தைக் கொடுத்துப் புகழ் தேடுபவன்.

    இறுதியில் அவன் தன் சட்ட விரோதச் செயலினால் தன் புகழுக்கு இழுக்கு நேர்ந்திடுமோ என்ற பயத்தில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்கிறான். திருமூர்த்தி என்பவன் நீதிக்குப் புறம்பான செயல்களைப் புரிபவன், பிறரை ஏமாற்றி அதில் இன்புறும் வஞ்சக நெஞ்சினன். பெண்மையைத் துரும்பாக நினைப்பவன்.

    திருஞானம்

    சங்கரியின் உறவினனான திருஞானம், குடும்ப நிலையை உணர்ந்தவன். அவன் தன் படிப்புச் செலவுக்காகக் காலையில் வீடு வீடாகச் சென்று பத்திரிக்கை போட்டும், பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தும் பணம் தேடுகிறான்.

    அவன் கூர்ந்து நோக்கி ஆராயும் மனம் படைத்தவன் என்பது சங்கரி குருமூர்த்தியுடன் பழகுவதைக் கண்டிக்கும் போது புலப்படும். “குருமூர்த்தியிடம் பழகுவதில் கவனம் தேவை, எது உண்மை, எது போலி என்று உரைத்துப் பார்த்துத் தெரிந்து கொள்” என்ற கூற்று இதற்குச் சான்று.

    திருஞானம் சங்கரியைக் காதலியாக ஆக்கிக் கொள்ள விரும்பினான். ஆனால் அவளிடம் கூறவில்லை. கட்டாயப்படுத்தவும் இல்லை. இருப்பினும் அவளை யாரேனும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதில் அக்கறையுடன் இருந்தான்.

    திருஞானம் இரகசியத்தைக் காப்பவன். அவன் உளவுத்துறை அதிகாரியாய் வந்த இடத்தில் சங்கரியைக் கண்டதும், கல்லூரி நட்பை அவன் உரிமையாய் எடுத்துக் கொள்ளவில்லை.

    சங்கரியின் உயர்வுக்குக் காரணம் திருஞானத்தின் ஊக்கமும், அறிவுரையும் தாம் எனலாம்.

    நாவல் முழுதும் இடம்பெறும் திருஞானம், சங்கரியின் நல்லெண்ணத்திற்குப் பாத்திரமானவன். திருஞானம் தன்னிலை வழுவாத தகைமையன் ஆவான்.

    5.2.2 துணைமாந்தர்

    தலைமை மாந்தருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் துணைமாந்தர் ஆவர். “இவ்வகைப்பட்ட மாந்தர் ஆங்காங்கே முதன்மை நிலை பெறுவர். தனி நிலையில் புதினக் கட்டமைப்பில் ஏதேனும் பயனுள்ள பங்கு பெறுபவராகவும் அமைவர்” என்பார் அகிலன்.

    இந்நாவலில் குருமூர்த்தி, முனியம்மாள், இராஜேசுவரி ஆகியோர் துணை மாந்தர்களாக அமைகின்றனர்.

    குருமூர்த்தி

    சங்கரியின் அன்பிற்குரிய கதாபாத்திரம் குருமூர்த்தி. அவனிடம் இருந்த பணம் அவனை விடாமுயற்சியும், நம்பிக்கையும் உடையவனாகத் திகழச் செய்தது. ஓராண்டுக் காலம் திருச்சியில் படிப்பின் போது சங்கரியை விடாமுயற்சியுடன் தொடர்ந்து அவளுக்கு இனியவன் ஆனான்.

    பணம்தான் குருமூர்த்தியின் காலத்தையும், இடத்தையும், சூழலையும், வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது என்பதைத் திருஞானம் சங்கரியிடம், கூறும் “நீ பழகுகிற குருமூர்த்தியின் உலகம் உனக்குத் தெரியாது” என்பது வாயிலாக அறிகிறோம்.

    திருமூர்த்தியின் சிறிய குழந்தையின் பெயர்சூட்டு விழாவின் போது தான் திருமூர்த்தியும் குருமூர்த்தியும் இரட்டையர்கள் என்பதும், குருமூர்த்தி பர்மாவில் யாரோ ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்பதும் சங்கரிக்கு தெரிய வருகிறது.

    மிகவும் குறுகிய காலமே கதையில் வந்தாலும் இப்பாத்திரம் சங்கரியுடன் தொடர்புடையதாயும், நாவலுக்குத் திருப்பு முனையாகவும் அமைகிறது.

    முனியம்மாள்

    தாய்மையின் சிறப்பிற்கு இலக்கணமாகத் துணைமாந்தர் வரிசையில் வரும் பாத்திரப் படைப்பு முனியம்மாள் பாத்திரமாகும். சங்கரியிடம் தாயின் பரிவைக் காட்டிப் பணிவிடை செய்பவள் முனியம்மாள்.

    “வீட்டு முகப்பில் வழிமேல் விழிவைத்துக் கொண்டு வேலைக்காரி முனியம்மாள் காத்திருந்தாள்” என்னும் வரி தாய்மைக்குரிய பண்பை வெளிக்காட்டுகிறது. இவள் வளர்ப்புத் தாயாக சங்கரிக்கு அமைகிறாள்.

    களைப்பு மிகுதியாக இருந்த சங்கரியின் நெற்றியில் கை வைத்துப் பார்த்து விட்டு, “மிளகும் பூண்டும் தட்டிப் போட்டு ரசம் வைத்துள்ளேன், பேசாமல் சாப்பிட்டுவிட்டுப் படுத்துத் தூங்குங்க” என்கிறாள். இதில் தாய்மையின் அக்கறை, கண்டிப்பு, அன்பு வெளிப்படுகிறது.

    சங்கரியின் வீட்டுக் கதவை யாரோ இரவில் தட்ட, முனியம்மாள் “டாக்டர் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அவர்களை இப்போ பார்க்க முடியாது” என்று கூறுமிடத்தில் கண்டிப்பு மிகுந்த தாயைக் காணமுடிகிறது.

    அவள் கிளம்பும் போது, “இந்த இரவு வேளையில் தனியாகச் செல்ல வேண்டாம், நானும் உடன் வருகிறேன்” என்று கூறும்போது தாயாகவே மாறிவிடுகிறாள்.

    திருஞானம் வந்த விவரத்தை முனியம்மாள் கூற, சங்கரி உடனே உள்ளே அனுப்புமாறு கூற முனியம்மாளுக்கு வியப்பு ஏற்படுகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு “ஐயாவுக்கும் சேர்த்துச் சமையல் செய்துடட்டுமா” என்னும் இடத்தில் இவளின் புத்திக் கூர்மை வெளிப்படுகிறது.

    துணைமாந்தர்களில் சிறப்பிடம் பெறும் பெண்பாத்திரம் முனியம்மாள் எனலாம்.

    ராஜேசுவரி

    திருமூர்த்தியின் தங்கையான ராஜேசுவரி, இருபது வயது நிரம்பிய நாகரிகப் பெண். தன் அண்ணன் திருமூர்த்திக்கு நேர்மாறான நல்ல குணம் கொண்டவள். எதையும் வெளிப்படையாகப் பேசும் அப்பாவிப்பெண். இதனால்தான் சங்கரி குருமூர்த்தியும், திருமூர்த்தியும் இரட்டையர்கள் என்பதையும், குருமூர்த்தி இறந்த செய்தியையும் அறிய முடிந்தது.

    மேலும் திருஞானம் ராஜேசுவரியின் வாயிலாக, திருமூர்த்தி சட்ட விரோதமான செயல்களைச் செய்கிறான் என்பதை அறிய முடிகிறது. அவளின் வெளிப்படையான பேச்சினால் தான் பல உண்மைகள் வெளியாகின்றன.

    இந்நாவலைப் படிக்கும் வாசகர்களின் சந்தேகங்கள் இராஜேசுவரியின் வாயிலாகத் தீர்க்கப்படுகின்றன.

    5.2.3 சார்புநிலை மாந்தர்கள்

    சார்புநிலை மாந்தர்கள் ஏதோசில இடங்களில் மட்டுமே பங்கு பெறுவர். இவர்களின்றியும், நாவல் முதன்மைத் துணைமாந்தர்களைக் கொண்டு முடிவுறும். எனினும் இவர்களும் நாவலின் இயக்கத்திற்குக் காரணமானவர்களே.

    இதில் குமுதா, காமாட்சி, குழந்தை ராதா, ரங்கன் ஆகியோர் சார்புநிலை மாந்தர்களாக இடம் பெறுகின்றனர்.

    குமுதா

    நாவலின் இடைப்பட்ட காட்சியில் சிறிது நேரம் வந்து போகும் அன்பும் ஆதரவும் அற்ற அபலைப் பெண் குமுதா. முரட்டு சுபாவம் உள்ளவள் என்று திருமூர்த்தியால் குற்றம் சாட்டப்பட்டவள்.

    பெற்றோர் இல்லாத குமுதா திருமூர்த்தியை நம்பி வந்தாள். அவனது முப்பது நாள் அன்பில் வாழ்ந்ததற்கு அடையாளமாகக் கர்ப்பிணி ஆனவுடன் அவனது அன்பில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தாள்.

    டாக்டர் சங்கரி, திருமூர்த்தியின் வற்புறுத்தலின் பேரில் குமுதாவைப் பார்க்க வருகின்றாள். அவளிடம் குமுதா, தான் உடனடியாகச் செத்துப் போவதற்கு மருந்து கொடுங்கள் என்றும், இனிச் சித்திரவதைப்பட முடியாது என்றும் மன்றாடுகிறாள்.

    “சாவு சீக்கிரம் வரவேண்டும்;
    சிரமமில்லாமல் வரவேண்டும்”

    என்ற சொற்கள் அவளின் மனநிலையை உணர்த்தும்.

    “பிறர் கேலிக்கு ஆளாகாமல் என்னைக் காத்துக் கொள்ள நீங்கள் மருந்து கொடுங்கள்” என்று வேண்டியவளுக்கு ஆறுதலாக, ருக்மணி அம்மாள் நடத்தும் சிறிய பள்ளியில் குமுதாவை ஒப்படைத்தாள் சங்கரி.

    டாக்டர் சங்கரியால் குமுதாவிற்கும், அவளது குழந்தைக்கும் ஒரு வழி பிறக்கிறது. ஆண் ஆதிக்கச் சமுதாயத்தில் கொடுமைக்கு உள்ளாகும் பெண் இனத்தின் அடையாளச் சின்னமாக உருவாக்கப்பட்டுள்ள பாத்திரம் குமுதா. இப்பாத்திரம் மூலமாக, தலைமைப் பாத்திரமாகிய சங்கரியின் இரக்கப்பண்பினையும், போர்க்குணத்தையும் புலப்படுத்தும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

    காமாட்சி

    அநீதி, அக்கிரமங்கள் போன்றவற்றைத் தொழிலாகக் கொண்ட திருமூர்த்தியின் மனைவி காமாட்சி. வேலை செய்யாமல், வீட்டிற்குள் கூட நடமாடாமல் சோபாவும் தானுமாக வாழும் செல்வச் செழிப்பு மிக்க பெண்மணி. பிரசவத்திற்காக லட்சுமி நர்ஸிங் ஹோமில் சேர்ந்து டாக்டர் சங்கரியின் மேற்பார்வையில் இருந்தவள். நாவலின் தொடக்கக் காட்சிகளில் வருபவள்.

    நாவலின் முதன்மை மாந்தர்கள் சந்தித்துக் கொள்ளக் காரணமாய் இப்பாத்திரம் அமைகிறது.

    குழந்தை ராதா

    காமாட்சியின் ஐந்து வயதுப் பெண் ராதா. சிறிது நேரமே சில காட்சிகளில் வந்து செல்லும் குழந்தை ராதாவின் முகம் டாக்டர் சங்கரியின் மனத்தைக் கவர்ந்து விடுகிறது. அக்குழந்தையே திருமூர்த்தியின் குடும்பத்தோடு சங்கரி நெருங்கிப் பழக வாய்ப்பினை ஏற்படுத்தியது.

    ரங்கன்

    குப்பத்தில் குடியிருக்கும் ஏழை இளைஞன் ரங்கன். தன் மனைவிக்குப் பிரசவம் பார்த்த டாக்டர் சங்கரியிடம் நன்றியுள்ளவனாகத் திகழ்கிறான். ரங்கன் தன்னால் முடிந்தது என்று சிறிது பணத்தை டாக்டர் சங்கரியிடம் அளிக்க, அதனைத் தனது இரக்கப் பண்பினால் ஏற்க மறுக்கிறாள். மேலும் அவனுக்கு உதவ நினைத்து, அவனுக்கு ஓட்டுநர் வேலை அளிக்கிறாள்.

    ரங்கன் திருமூர்த்தியின் சதித் திட்டத்தை அழிப்பதில் டாக்டர் சங்கரிக்கு உதவுகிறான்.

    இவ்வாறு நாவலில் இடம் பெறும் ஒவ்வொரு கதைமாந்தரும் முக்கியம் என்றே கருதப்படும் வகையில் அவர்களை அகிலன் உருவாக்கியுள்ளார்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1

    பொன்மலர் புதினத்தின் கதைக்கரு குறித்து எழுதுக.

    2

    தலைமை மாந்தர் யார்? யார்?

    3

    குருமூர்த்தியின் பண்பு நலன் யாது?

    4

    சார்புநிலை மாந்தர் குறித்து எழுதுக.

    5

    அகிலனின் புதினங்கள் எவை?

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2017 16:58:23(இந்திய நேரம்)