தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-6.1-மோகன சுந்தரம்

  • 6.1 மோஹன சுந்தரம்

    பொழுதுபோக்கு நாவல்களில் இவரது நாவல்களே அதிகமான பதிப்புகளாக வெளிவந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது புதினங்களில் மிக்க புகழ்பெற்று விளங்கும் மோஹன சுந்தரம் என்னும் புதினத்தைப் பற்றி இப்பாடத்தில் காணலாம்.

    புதினத்தின் கருப்பொருள்

    நாவலாசிரியர் ரங்கராஜு மர்மங்களும், சிக்கல்களும் நிறைந்த கருப்பொருளைத் தெளிவாகக் கையாண்டுள்ளார். கொலையாளி யார் என்று விசாரிக்கும் போது ஒவ்வொருவர் மீதும் சந்தேகம் ஏற்படுவதும், பிறகு சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதும் சிறப்புடையதாகும்.

    பொழுதுபோக்கிற்காக எழுதப்படும் நாவல்களில் வீரம் பலவீனத்தை வெல்வதாகவும், அறிவு வன்முறையை வெல்வதாகவும், தீமை அழிந்து நன்மை வெற்றி பெறுவதாகவும் மட்டுமே கதைக்கரு அமையும். இந்நாவலில் திருவல்லிக்கேணி கோவிந்தனின் அறிவாற்றல் வெற்றி பெறுவதாகக் காட்டப்பட்டுள்ளது.

    6.1.1 கதைச் சுருக்கம்

    சுந்தர முதலியார் ஐம்பது வயதைக் கடந்தவர். மனைவியை இழந்தவர். மகள் விசாலாட்சியுடனும், தங்கை மகன் பூபதி முதலியாருடனும் வாழ்ந்து வருகிறார். மோஹன சுந்தரம் அண்ட் கம்பெனியின் இரு பங்குதாரர்களில் இவரும் ஒருவர்; வசதி படைத்தவர். விசாலாட்சி இசை கற்க வேண்டும் எனத் தன் தந்தையிடம் வேண்டுகிறாள். முதலியாரும் பத்திரிகையில் விளம்பரம் செய்கிறார். தன் அழகின் மூலம் செல்வர் ஒருவரை மணக்க வேண்டும் என வாழ்ந்து வரும் லீலாவதி இவ்விளம்பரத்தைக் காண்கிறாள். அவள் பொய்யான நற்சான்றுப் பத்திரங்களுடன் வேலைக்குச் சேருகிறாள். பூபதி முதலியாரும், சுந்தர முதலியாரும் அவள் மீது தனி அன்பு செலுத்துகின்றனர்.

    ஒரு நாள் வாய்த்தகராறு முற்றி, பூபதி முதலியாரை வீட்டை விட்டு வெளியேறும்படி சுந்தர முதலியார் கூறுகிறார். சொத்துகள் கிடைத்தவுடன் பூபதி முதலியாரை மணந்து கொள்வதாக லீலாவதி கூறுகிறாள். மிரட்டலினால் லீலாவதியைச் சுந்தர முதலியார் மணக்கச் சம்மதிக்கின்றார். ஆனால் இத்திருமணத்தை வெறுக்கிறாள் விசாலாட்சி.

    திருமணத்திற்குப் பிறகு சுந்தர முதலியாரின் போக்கு மாறுகிறது. லீலாவதி, விசாலாட்சிக்குப் பல கொடுமைகளைச் செய்து வருகிறாள். இறுதியில் விசாலாட்சியை வீட்டைவிட்டு வெளியேறும்படி கூறுகிறாள் லீலாவதி. இதனால் விசாலாட்சி தானே வீட்டை விட்டு வெளியேறுவதாகத் தன் தந்தையிடம் கூறி வெளியேறுகிறாள். இச்சம்பவத்தால் சுந்தர முதலியார் பித்துப் பிடித்தவர் போல் ஆகிவிடுகிறார். அலுவலகத்திற்குச் சென்று விசாலாட்சியைத் தேட ஆட்களை அனுப்புகிறார். இதற்கிடையே தன்னுடைய அலுவல்களையும் கவனித்துக் கொள்கிறார்.

    சுந்தர முதலியாரின் பிணம்

    மாலை ஏழு மணியளவில் மோஹன சுந்தரம் அண்ட் கம்பெனியின் அருகில் ஒரு அடையாளம் தெரியாத பிணம் கிடக்கிறது. இதைக் கண்ட போலிஸ்காரர் உடனே இன்ஸ்பெக்டருக்கு அறிவிக்கிறார். பிணத்தைக் கண்ட அனைவரும் இறந்தது சுந்தர முதலியாரென்று கூறுகின்றனர். அன்று வீட்டில் நடந்த சம்பவங்களால் புத்தி பேதலித்து இருந்த சுந்தர முதலியார்தான் தடுமாறி மாடியில் இருந்து விழுந்திருக்கலாம் என அனைவரும் எண்ணுகின்றனர். சுந்தர முதலியார் இறந்த தகவல் அக்கம்பெனியின் மற்றொரு பங்குதாரராகிய மோஹன முதலியாருக்கும், மருமகனான பூபதி முதலியாருக்கும் சொல்லப்பட்டது. இது தற்கொலையாக இருக்குமென்றே இன்ஸ்பெக்டர் முதலாக அனைவரும் நினைக்கின்றனர்.

    மொட்டைக் கடிதம்

    சுந்தர முதலியாரின் இறுதிச் சடங்கு நடக்கும் வேளையில் மோஹன முதலியாருக்கு மொட்டைக் கடிதம் ஒன்று வருகிறது. அதில் சுந்தரமுதலியார் இறப்பு தற்கொலை அல்ல! கொலை என்று எழுதியிருக்கிறது. இதைக் கண்ட மோஹன முதலியார் உடனே திருவல்லிக்கேணி துப்பறியும் கோவிந்தனை அழைக்கிறார். தன் நண்பரின் சாவில் உள்ள மர்மத்தைக் கண்டறியும்படி வேண்டுகிறார்.

    துப்பறியும் கோவிந்தன்

    இதே போன்று ஒரு மொட்டைக் கடிதம் இன்ஸ்பெக்டருக்கும் கிடைக்கிறது. அவர் இதற்குரிய விசாரணையைப் பின்னர் நடத்தலாம் எனவும் கூறுகிறார். பூபதி முதலியார் துப்பறியும் கோவிந்தனை அணுகி விசாலாட்சியைக் கண்டுபிடித்துத் தருமாறு வேண்டுகிறார். தன் தந்தையின் இறுதிச் சடங்கிற்கு விசாலாட்சி வராததால் அவள்மீது பலருக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.

    துப்பறியும் கோவிந்தன் முதலில் சுந்தர முதலியார் தவறி விழுந்ததாகக் கூறப்படும் மாடியை ஆராய்கிறார். பிணம் கிடந்த இடத்திற்கு நேராக அம்மாடியில் சிவப்பு மண்படிந்த காலணிகளின் அடையாளம் காணப்படுகிறது. முன்கால் காலணியின் அடையாளம் முழுவதும், பின்கால் காலணியின் முனைமட்டும் காணப்படுகிறது. இவ்விரண்டு அடையாளங்களையும் குறித்துக் கொள்கிறார். சுந்தர முதலியாரின் அலுவலகத்திற்குச் சென்று அவருடைய பெட்டியை ஆராய்கிறார். மேனேஜரிடம் நட்பாகப் பேசி அலுவலகச் செய்திகளையும், முதலியாரின் வீட்டு விஷயங்களையும் தெரிந்து கொள்கிறார். அப்பொழுது கோபால்சாமிநாயுடு என்னும் ஏஜெண்டு பணத்தைக் கையாடல் செய்த விஷயத்தைத் தெரிந்து கொள்கிறார். பிறகு மோஹன முதலியாரிடம் சென்று “எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. ஆகையால் கண்டுபிடிப்பது கடினம்” எனக்கூறி விலகி விடுகிறார்.

    சுப்பராயன் சாட்சியம்

    இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் தனக்கு வந்த மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் விசாரணை செய்யப் போவதாகக் கூறுகிறார். கம்பெனியின் இரவு நேரக் காவலன் சுப்பராயனை விசாரிக்க, நடந்தவற்றை அவன் கூறுகின்றான். இறந்த அன்று சுந்தர முதலியார் பூபதி முதலியாருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், இருவருக்குமிடையே தகராறு மூண்டதாகவும் அவன் கூறுகின்றான். இதைக் கேட்ட மோஹன முதலியார், பூபதி முதலியாரை விசாரிப்பதற்காக இன்ஸ்பெக்டருடன் பூபதி முதலியாரின் இல்லத்திற்கு விரைகின்றார்.

    அந்நேரத்தில் கோவிந்தன் பூபதி முதலியாரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். இன்ஸ்பெக்டர் பூபதி முதலியாரிடம் கொலை நடந்த அன்று நிகழ்ந்த விவரங்களைக் கூறுமாறு கேட்கிறார். ஆனால் அவரோ அன்று நடந்தவை குடும்ப ரகசியங்கள் என்று கூறிச் சொல்ல மறுக்கிறார். ஆனால் தான் இறங்கி வரும்போது வேறொருவர் படியேறிச் சென்றதாகவும், அவர் யாரெனக் கவனிக்கவில்லை எனவும் கூறுகிறார். பூபதி முதலியாரைக் கண்காணிக்க இரு காவலர்களை நியமிக்கிறார் இன்ஸ்பெக்டர்.

    விளம்பரம்

    விசாலாட்சியைப் பற்றிய விளம்பரம் வெளிவந்ததைக் கண்ட ராமதாஸ் என்பவர் கோவிந்தனைக் காண வருகிறார். கொலை நடந்த அன்று விசாலாட்சியைக் கண்டதாகக் கூறுகிறார். தற்கொலை செய்து கொள்ள அவள் துணிந்ததாகவும், அதனை அவர் தடுத்ததாகவும் கூறுகிறார். விசாலாட்சி தனக்கு அனுப்பிய கடிதத்தை அவர் கோவிந்தனிடம் கொடுத்தார்.

    கோவிந்தனின் சந்திப்புகள்

    பின்னர் ஏஜெண்டாகிய கோபால்சாமி நாயுடுவைத் தேடிக் கொண்டு கோவிந்தன் சென்றார். கோபால்சாமி, கோவிந்தனை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டுத் தப்பிவிடுகிறார். காவலர் ஒருவர் உதவியினால் கோவிந்தன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். விசாலாட்சியைத் தேடிக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார். கோபாலன் என்பவனைச் சந்திக்கிறார். கோபாலனைப் பின் தொடர்ந்து அவனுக்குத் தெரியாமல் மரகதத்தைச் சந்திக்கிறார்.

    அவள் இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியில் வடக்குத்தியான் வீட்டிற்கு விசாலாட்சி வந்ததாகக் கூறினாள். அவளுடன் இரண்டு ஆண்கள் இருந்ததாகவும் கூறுகிறாள். யாருக்கும் தெரியாமல் கடிதம் எழுத அவள் காகிதம் கொடுத்ததாகக் கூறினாள்; கடிதத்தைத் தபாலில் தான் போட்டதாகவும் கூறினான். விசாலாட்சியை நள்ளிரவில் அழைத்துக் கொண்டு அவர்கள் சென்றார்கள் என்றும் கூறினாள்.

    கோவிந்தனின் திருச்சிப் பயணம்

    கோபால்சாமி நாயுடுவின் சொந்த ஊரான திருச்சிக்குச் செல்கிறார் கோவிந்தன். ஏஜெண்டுகள் வழக்கமாகத் தங்கும் கிருஷ்ணமாச்சாரி ஹோட்டலுக்குச் சென்று ஆராய்கிறார். கோபால்சாமியைக் கையும் களவுமாகப் பிடிக்கிறார். அவரைச் சில நாட்கள் பைத்தியமாக நடிக்க வேண்டும் என வேண்டுகிறார்; கோபால்சாமியைச் சென்னை மருத்துவமனையில் சேர்க்கிறார்.

    பின்னர் விசாலாட்சியையும், குதிரை வண்டியையும் தேடிக் கொண்டு செல்கிறார். இறுதியாக ஒரு வீட்டின்முன் விசாலாட்சி உலாவுவதைக் காண்கிறார். பூபதி முதலியாருக்கு விசாலாட்சி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டதாகத் தந்தி அனுப்புகிறார்.

    விசாலாட்சி ராமதாஸின் இல்லத்தில் தங்குகிறாள். கொலையாளியை ஏழு நாட்களுக்குள் கண்டுபிடித்துத் தருவதாகக் கோவிந்தன் கூறுகிறார். ராமதாஸின் இல்லத்தில் பூபதி, ராமதாஸ், கோவிந்தன் முதலியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அங்கு லீலாவதி வருகிறாள். தான் சுந்தர முதலியாரைக் கொன்றதாகக் கூறுகிறாள். இன்ஸ்பெக்டர் அவளைக் கைது செய்து கொண்டு செல்கிறார்.

    தந்தியின் நகல்கள்

    கோவிந்தனோ மோஹன முதலியார் கொலை செய்ததை நிரூபிக்கத் தன்னிடம் சாட்சியம் இருப்பதாகக் கூறுகிறார். இறப்பதற்கு முன் சுந்தர முதலியார் அவருக்குக் கொடுத்த தந்தியின் நகல்களையும் காட்டுகிறார். மேலும் கொலை நடந்த மாடியின் அறையில் உள்ள காலணிகளின் அடையாளமும், மோஹன முதலியாரின் காலணியின் அடையாளமும் ஒன்றுபடுவதாகக் கூறுகிறார் கோவிந்தன். மேலும் இவர் கொலை செய்ததைப் பனையேறி ஒருவன் பார்த்ததாகவும், அவனே மொட்டைக் கடிதம் எழுதியதாகவும் கூறுகிறார்.

    கோவிந்தனின் ஆற்றல்

    கம்பெனியில் அடமானம் வைத்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மோஹன முதலியார் கையாடல் செய்ததைச் சுந்தர முதலியார் கண்டுபிடித்ததால் அவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டுகிறார். தான் பணத்தைக் கையாடல் செய்ததற்கு யார் சாட்சி என்று கேட்கிறார். அதற்கு கோவிந்தன், சுந்தர முதலியாரே அதற்குச் சாட்சி என்கிறார். அனைவரும் திகைக்கின்றனர். கோவிந்தன் அழைத்தவுடன் சுந்தர முதலியார் உயிரோடு அங்குப் பிரவேசம் ஆகிறார். கோவிந்தன், மோஹன முதலியார் சுந்தர முதலியாரைக் கொல்லவில்லை என்றாலும் அவர் பாலு முதலியாரைக் கொன்றதாகக் கூறுகிறார். தான்செய்த கொலை நிரூபிக்கப்பட்டதை உணர்ந்த மோஹன முதலியார் விஷமருந்தி விடுகிறார்.

    சுந்தர முதலியாரின் கூற்று

    சுந்தர முதலியார் நடந்தவைகளைக் கூறுகிறார். விசாலாட்சி வீட்டை விட்டு வெளியேறிய அன்று புத்தி பேதலித்த நிலையில் தான் அலுவலகம் சென்றதாகவும், அன்று மதியம் அடமானம் வைத்த பெட்டியைக் கேட்டுப் பாலுமுதலியார் வந்ததாகவும், மோஹன முதலியார் வந்த பிறகு விசாரித்துத் தருவதாகத் தான் கூறியதாகவும் கூறுகிறார். அடமானம் வைத்த பெட்டியின் மதிப்பு ரூ.60 லட்சம் என்றும், அக்கம்பெனியினர் தன்னை ஏமாற்றியதாகவும் பாலு முதலியார் கூச்சலிட்டார் என்றும், போலீஸை அழைப்பேன் என்றவுடன் அவர் வெளியேறி விட்டதாகவும் கூறுகிறார். உடனே கணக்கு வழக்குகளை எடுத்துப் பார்க்கும் போது மோஹன முதலியாரும், கோபால்சாமியும் செய்த கையாடல்களைத் தான் அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார்.

    அப்பொழுது விசாலாட்சியைப் பற்றிய கடிதத்தை ஒருவன் கொண்டு வந்ததாகவும், ஆனால் அறையை விட்டு வெளியே வரும்போது பின் மண்டையில் பலத்த அடி விழுந்ததால் தான் மயங்கிவிட்டதாகவும் சொல்கிறார். சூட்டுக்கோலால் தன்னைத் தாக்க வரும்போது தக்க சமயத்தில் கோவிந்தன் வந்து காப்பாற்றியதாகவும் கூறுகிறார். இவ்வளவு நாள் கோவிந்தன் தன்னைத் தன் வீட்டில் வைத்துக் கவனித்துக் கொண்டதாகவும் கூறுகிறார். கோவிந்தனின் சொற்படிதான் அங்கு வந்ததாகவும் கூறுகிறார். பிறகு கோவிந்தன் சுந்தரமுதலியார் அடைத்து வைக்கப் பட்டிருந்த இடத்திற்குச் சென்று விவரத்தைக் கூறுகிறார்.

    கொலை நடந்த அன்று பிரேதத்தைப் பரிசோதனை செய்ததில் பாலு முதலியார் என்று பெயரெழுதிய காகிதம் பிரேதத்தின் சட்டையில் இருந்ததாலும், இறந்தது பாலு முதலியார் என்று அறிந்து கொண்டதாகக் கூறுகிறார். பாலு முதலியார் என்பவன் பிடாரிபுர நகைத் திருட்டில் தொடர்புடையவன் என்ற பழைய செய்தி நினைவிற்கு வர எல்லாவற்றையும் ஆராய்ந்ததாகவும் கூறுகிறார். அவனுடைய சகோதரன் சீதாராம முதலியைப் பின் தொடர்ந்ததில் சுந்தர முதலியாரைக் கண்டு பிடித்ததாகவும் கூறுகிறார். மோஹன முதலியார் தான் உண்மையான குற்றவாளி என முன்பே தெரிந்து கொண்டாலும், சாட்சியங்களுக்காகவே இவ்வளவு நாள் தாமதித்ததாகவும் கூறுகிறார் கோவிந்தன். தான் அருந்திய விஷத்தால் மோஹன முதலியார் இறந்து விடுகிறார். அங்கு லீலாவதியைக் கண்ட சீதாராம முதலி அவளைக் கொன்று விடுகிறான்.

    திருமணம்

    லீலாவதியின் இறுதிச் சடங்கைச் சுந்தர முதலியாரே நடத்துகிறார். கோவிந்தனின் புத்திக் கூர்மையினால்தான் தன் குடும்பம் காப்பாற்றப் பட்டதாகக் கூறுகிறார். ஒரு சுபமுகூர்த்தத்தில் பூபதி முதலியாருக்கும், விசாலாட்சிக்கும் திருமணம் இனிதே நடைபெறுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:22:09(இந்திய நேரம்)