Primary tabs
-
6.3 உத்திகள்
நல்ல உத்தி நுணுக்கங்கள் இல்லையென்றால் நாவல் சிறப்பாக அமையாது எனலாம். பொதுவாகக் கதை சொல்லும் முறையையே உத்தி என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆசிரியரின் வெற்றிக்கும் தோல்விக்கும் கதை நுட்பத் திறன்களே காரணமாக அமைகின்றன.
கதைத் தலைப்பு அக்கதைப் பொருளின் அடிப்படையிலோ, பாத்திரங்களின் பெயராலோ அல்லது இடப் பெயராகவோ அமைவது உண்டு. கதைத் தலைப்பு கதையின் உள்ளீட்டை ஒருவாறாகச் சுருக்கித் தருவதாக இருக்க வேண்டும் என்பர் ஆய்வாளர்கள்.
இந்நாவலின் தலைப்பு கதையின் இயக்கத்திற்கு முக்கியக் காரணமாக அமையும் இரு பாத்திரங்களின் பெயராலேயே வழங்கப்பட்டுள்ளது. இந்நாவலில் மோஹன முதலியாரும், சுந்தர முதலியாரும் நண்பர்கள். இருவரும் இணைந்து நடத்தும் கம்பெனியில் நடக்கும் கொலையும், அதை அடுத்த சம்பவங்களும் தான் கதையாகும்.
இந்நாவலுக்கு, கொலை செய்தவரும், கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படுபவரும் என இரண்டு பாத்திரங்களின் பெயர்கள் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது மிகவும் பொருந்துகிறது எனலாம்.
தொடக்கம்
ஒரு நாவலின் தொடக்கம் வாசகர்களுக்குத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
இந்நாவலில் கதையின் தொடக்கம் உரையாடலாக அமைந்துள்ளது. விசாலாட்சி தன்தந்தையிடம் உரையாடும் காட்சியில் இந்நாவல் தொடங்குகிறது.
முடிவு
எதிர்பாராத முறையில் முடிவு அமைந்தால் சுவையும், நிறைவும் ஏற்பட வாய்ப்பு மிகுதி. இந்நாவலில் சுபமான முடிவே தரப்பட்டுள்ளது.
பூபதி முதலியாருக்கும், விசாலாட்சிக்கும் திருமணம் நடைபெறுவதாகக் கதை இனிதே முடிவடைகிறது. பொய் தோற்கிறது; உண்மை வெல்கிறது என்பதைக் கதையின் முடிவு காட்டுகிறது.
கதையின் வளர்ச்சிக்கு உரையாடல்கள் தூண்டு கோல்களாகின்றன. இவ்வுரையாடல்களால் கதையோட்டம் சிறந்து காணப்படுகிறது. கதை மாந்தர் தமக்குத் தாமே பேசிக் கொள்வதின் மூலம் அப்பாத்திரத்தின் பண்பை அறிந்து கொள்ள முடியும். லீலாவதி, பூபதி முதலியார் மீது கொண்டுள்ள காதலைத் தனக்குத் தானே பேசிக் கொள்வதில் வெளிப்படுத்துகிறாள்.
துப்பறியும் நாவல் என்பதால் வினாவாக அமைந்த உரையாடல்களே மிகுந்து காணப்படுகின்றன. துப்பறிய வந்த கோவிந்தனிடம் வடக்குத்தியான், ‘நீ யார்? எங்கே வந்தாய்? எப்படி வந்தாய்?' என்று பல கேள்விகளைக் கேட்கிறார். இவ்வாறு உரையாடல்களும் இந்நாவலுக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.
6.3.3 பின்நோக்கு உத்தி (Flash back)
கதையின் முன்னால் நடந்த நிகழ்ச்சிகளைப் படைப்பிலக்கியத்தின் இடையில் புகுத்துவது பின்நோக்கு உத்தி ஆகும். இது கதையில் கட்டுக்கோப்பையும், படிப்போரிடம் ஆர்வத்தையும் உருவாக்கிச் செல்லும்.
சுந்தர முதலியார் தான் கடத்தப்பட்டதையும் கோவிந்தன் வந்து காப்பாற்றியதையும் கூறுவது பின்நோக்கு உத்தி முறையே ஆகும். ராமதாஸ் விசாலாட்சியைக் கண்டதாகக் கோவிந்தனிடம் கூறுவதும் இவ்வகையானதே.