Primary tabs
-
6.4 மொழிநடை
மொழிநடை என்பது படைப்பாளன் தம் படைப்பில் கையாளும் எழுத்து நடை, பேச்சு நடை இவற்றையே குறிக்கும். கதையைக் கூறும் எழுத்து நடை, கதைமாந்தர் உரையாடும் பேச்சு நடை இவை இரண்டையும் ஒரு நாவலின் இரு கால்கள் எனலாம். நடை என்பது ஓர் ஆசிரியரின் தனித் தன்மையை வெளிப்படுத்த வல்லது.
நடை என்பது காலத்திற்குக் காலம் மாறுபடும் தன்மையைக் கொண்டது. ரங்கராஜுவின் இந்நாவல் விடுதலைக்கு முன்னர் எழுதப்பட்டு இருப்பதால் இக்கால இலக்கிய நடையிலிருந்து சற்று வேறுபட்டுள்ளது.
பிறமொழிச் சொற்கலப்பு, இவருடைய நடையில் மிகுதியாக உள்ளது. நாடகம் போன்று பாத்திரங்களின் கூற்றுக்களாக இந்நாவலாசிரியர் உரையாடல்கள் அமைத்துள்ளார். துப்பறியும் நாவல் என்பதால் இயற்கை வருணனை இந்நாவலில் இடம் பெறவில்லை. வினாநடையே இவருடைய இப்படைப்பு முழுவதும் காணப்படுகிறது.
வருணனைகளையும், நனவோடை உத்திகளையும் மொழிநடையில் ஆசிரியர் அழகாகப் படைத்துள்ளார். மேல்நாட்டுத் துப்பறியும் நாவல்களைப் போன்று மர்மங்கள் நிறைந்ததாகவும், விறுவிறுப்பாகவும் இந்நாவலைப் படைத்துள்ளார் ஆசிரியர்.
ஆசிரியர் ரங்கராஜு தன்னுடைய மொழிநடையில் உவமைகளை உரையாடலுக்குத் தகுந்தாற் போல் கையாண்டுள்ளார். நாவலில் பல இடங்களில் உவமைகள் பயின்று வந்துள்ளன.
‘அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழத்தைக் காண்பிப்பதைப் போல்' (ப. 4)
‘எரிகிற நெருப்பில் கெரோஸின் எண்ணெய்
வார்த்தது போல் என்னைக் கண்டவுடனே பூபதி
முதலியார் பேரிலிருந்த கோபத்தையெல்லாம் சேர்த்து
வைத்து என்னைத் தாறுமாறாய்த் திட்டினார்' (ப.70)இவ்வாறு சொல்ல வரும் கருத்திற்கு ஏற்ப நாவலாசிரியர் ரங்கராஜு உவமைகளைப் பயன்படுத்தி உள்ளார். உவமைகளின் பயன்பாடு கருத்துக்களை எளிமையாகப் புரிந்து கொள்ள உதவும்.
நெடுங்காலமாக மக்களின் அனுபவங்களைச் சுருக்கமாகக் குறித்து வரும் சொற்றொடர்களே பழமொழிகளாகும்.
ரங்கராஜுவும் தமது நடையில் சொல்ல வேண்டிய கருத்துக்களைச் சிறப்புறச் சொல்வதற்கு உறுதுணையாகப் பழமொழிகளைக் கையாண்டுள்ளார். விசாலாட்சி, லீலாவதியைப் பற்றி அவளிடமே கூறும் போது,
“அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் என்பதைப் போல் நீ முன்னிருந்த நிலைமைக்கும் இப்போது அடைந்திருக்கும் பதவிக்கும் எவ்வளவோ வித்தியாசந்தான்.” (ப.38)
இன்ஸ்பெக்டர் - கோவிந்தனிடம்,
“நான் அவமானமடைவதைக் கண்டு நீர் துக்கிக்க வேண்டாம். ஆடு நனைகிறதென்று ஓநாய் வருத்தப்பட்டதைப் போலிருக்கிறதே நீர் சொல்வது !” (ப. 134)
என்று கூறுகிறார். இவ்வாறு நடையில் பழமொழிகளைக் கையாளும் போது அப்பகுதி மேலும் சுவையுள்ளதாகிறது.
இந்நாவலில் அடுக்குத் தொடரும் ஆங்காங்கே பயின்று வந்துள்ளது. பாத்திரங்களின் போக்கையும், உணர்வையும் புலப்படுத்தும் இடங்களில் அடுக்குத் தொடரைப் பயன்படுத்துவது ஆசிரியரின் சித்திரிப்பை மேலும் செம்மையாக்குவதாக உள்ளது.
‘லீலாவதி போதும் போதும் அம்மட்டோடு நிறுத்து' (ப.154)
‘இரண்டு மூன்று தரம் திரும்பத் திரும்ப வாசித்தாள்' (ப.7)
இவ்வாறு இவருடைய நடையில் அடுக்குத் தொடர்களும் பயின்று வந்துள்ளன.
ரங்கராஜு சில அறநெறிக் கருத்துக்களையும் பாத்திரங்களின் உரையாடல்களில் பயன்படுத்தியுள்ளார்.
‘அருளிலார்க்கவ்வுலகமில்லை, பொருளிலார்க் கிவ்வுலகமில்லை மறந்தீர்கள் போலிருக்கிறது' (ப.23)
‘மன வீதி உண்டானால் இடவீதி உண்டு' (ப.21)
‘ஈஸ்வராக்கினையை மீறி நடக்க எவராலும் முடியாது' (ப.41)
இவ்வாறு ஆங்காங்கே அறநெறிக் கருத்துக்களை ஆசிரியர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வருணனை நடை என்பது கற்பனைக்கு இடம் கொடுக்கின்ற முக்கிய இலக்கிய உத்தியாகும். இயற்கை வருணனைகள் இந்நாவலில் அவ்வளவாக இடம் பெறவில்லை. கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதிலேயே ஆசிரியர் கவனம் செலுத்தி உள்ளார். ஆகையால் வருணனைகள் குறைந்த அளவே காணப்படுகின்றன.
பாத்திர வருணனை
பூபதி முதலியாரின் படத்தை வைத்துக் கொண்டு லீலாவதி அவரை வருணிப்பதைக் காண முடிகிறது. அப்பகுதி பின்வருமாறு :
‘என்ன தேஜஸ் ! என்ன அழகு ! என்ன கண்கள்' (ப.19)
நிகழ்ச்சி வருணனை
துப்பறியும் நாவலில் பொதுவாகச் சில குழப்பங்களை ஆசிரியர்கள் படைப்பதுண்டு. அக்குழப்பங்களுக்கு உரிய தெளிவுகளை ஆசிரியர் நிகழ்ச்சி வருணனை மூலம் விளக்கியுள்ளார்.
பூபதி முதலியார் லீலாவதியிடம், சுந்தர முதலியார் அவளைப் பற்றி வருணிப்பதாகக் கூறுகிறார். இதைக் கேட்டு லீலாவதி மகிழ்ச்சி அடையும் நிகழ்ச்சியை ஆசிரியர்,
‘ஏனென்றால் தான் விதைத்த விதை முளைத்து வீரியமாய் வளர்ந்து மரமாகிப் பூத்துக் காய்த்து விட்டதென்றும், அதில் பழுக்கும் பழங்களை ருசிபார்க்கும் காலம் சமீபித்து விட்டதென்றும் அவள் சந்தோஷித்தாள்' (ப.20)
இவ்வாறு ஆசிரியர் வருணனை செய்துள்ளார். நிகழ்ச்சி வருணனைகளும் ஓர் ஆசிரியரின் நடைக்கு அழகூட்டும் என்பதற்கு இப்பகுதி சான்று.
உணர்ச்சி வருணனை
ஒரு கொலையும், அக்கொலையைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களுமே இந்நாவலின் கதைக்கரு என்பதால் உணர்ச்சிகளின் வெளிப்பாடு இந்நாவல் முழுவதும் காணப்படுகிறது. விசாலாட்சியை லீலாவதி கொடுமைப்படுத்தும் போது அவளின் எதிர்ப்பு உணர்ச்சி வெளிப்படுகிறது.
விசாலாட்சி லீலாவதியிடம்,
‘மற்றவர்களைப் போல் எனக்கு உன் துஷ்ட வார்த்தைகளைச் சஹித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அடபோ! சீ ! நீயோ நீ கெட்ட கேடோ ! உன்னிடத்தில் இப்படியெல்லாம் துயரப்படவா என் தாய் என்னை விட்டுப் போனாள்?' ( ப.39) என்று கேட்கிறாள்.
பூபதி முதலியார் லீலாவதியின் உண்மை சொரூபம் தெரிந்த பின்பு, அவளிடமே,
‘விஷப்பாம்பே, கெடுமதி பூண்ட நஞ்சுடைய உன் கைகளால் என்னைத் தீண்டாதே !' என்று உணர்ச்சி பொங்கக் கூறுகிறார்.(ப.25)
இவ்வாறு இந்நாவலில் உணர்ச்சி பொங்க வரும் உரையாடல்களை ஆசிரியர் அழகாக வடித்துள்ளார்.
பிறமொழிச் சொற்களையும், பேச்சு வழக்குச் சொற்களையும் கையாண்டுள்ளார்.
பிறமொழிச் சொல்லாட்சிகள்
நாவலை முழுவதும் இலக்கிய நடையில் படைப்பது படிப்பவர்க்குக் கடினம். இடைஇடையே பேச்சு வழக்குகளும், பிறமொழிச் சொற்களும் பயின்று வருவது படிப்பவருக்கு இயல்பாக அமையும். ரங்கராஜுவும் பிறமொழிச் சொற்களை நாவலில் மிகுதியாகக் கலந்துள்ளார்.
ஜல்தி, க்ஷணம், மாச்சரியம், துஷிதம், மகஜர், பந்தோபஸ்து.
இவ்வாறு பல பிறமொழிச் சொற்கள் இந்நாவலில் பயின்று வந்துள்ளன. மேலும் ஆங்கில வார்த்தைகளும், வாக்கியங்களும் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளன.
‘அநேக டேய்சுக் (Days) கப்பால் இந்த டர்ட்டி வில்லேஜில் (Dirty Village) தங்களைப் பார்த்தது ரொம்ப பிளசெராய் (Pleasure) இருக்கிறது.' (ப.79) என்று ஆங்கில மொழிச் சொற்களைக் கலந்தும் ஆசிரியர் நடையைக் கையாண்டுள்ளார்.
பேச்சுவழக்குச் சொற்கள்
பேச்சு வழக்குச் சொற்களையும் இந்நாவலில் காணமுடிகின்றது.
‘நானாடி லோல்பட்டவள்?' (ப.39)
‘வேலைக்காரக் கழுதைக்கு வந்த ராங்கியைப் பார்த்தாயா?' (ப.39)
என்பன இதற்குச் சான்றுகள்.
6.4.7 மொழிநடையில் ஆசிரியர் கூற்று
இந்நாவலில் கதைமாந்தர்கள் கதையை நடத்திச் சென்றாலும், ஆசிரியர் பேசுவது போல இரண்டிடங்களில் கூற்றுக்கள் அமைந்துள்ளன.
‘முளையிலேயே கையால் எடுத்து எறியாவிட்டால் பின்னாடி கோடாலி கொண்டு வெட்டி எறிய வேண்டி வரும் என்பதை வாசகர்கள் கவனிப்பார்களாக' (ப.42)
இவ்வாறு ஆசிரியர் நாவலின் இடையே தன்னுடைய கருத்தைக் கூறியுள்ளார். மற்றொரு இடத்தில் ஆங்கிலமும், தமிழும் கலந்த நடையில் மக்கள் பேசுவதை வெறுக்கும் விதமாகத் தன்னுடைய கருத்தைப் படைத்துள்ளார்.
‘இப்போது சாதாரணமாய்க் கொஞ்சம் ஆங்கிலேய பாஷை வாசித்தவர்கள் எல்லோரும் தங்களுக்கு அந்தப் பாஷை தெரியுமென்று மற்றவர்களுக்குக் காட்ட வேண்டுமென்னும் எண்ணத்துடன் இப்படியே பேசுவது வழக்கமாயிருக்கிறது. இது அருவருப்பான காரியம். பேசினால் முழுவதும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் அல்லது முழுவதும் தமிழில் பேச வேண்டும்.' (ப.79-80) என்ற ஆசிரியரின் கூற்று சிந்தனைக்குரியது.