தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.4 பட்டுக்கோட்டையாரும் திரைப்படமும்


  • சமூகச் சுரண்டல் எதிர்க்கப்பட வேண்டும் எனத் திரைப்படத்தின் மூலம் எடுத்துச் சொன்னவர் பட்டுக்கோட்டையார்.

    இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் பாடல் எளிமை, மக்கள் பிரச்சினைகளைக் கூறுதல் ஆகியவற்றால் ‘மக்கள் கவிஞர்’ என அனைவராலும் பட்டுக்கோட்டையார் அழைக்கப்பட்டார் எனக் கண்டோம். மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த துறையாகிய திரைப்படத்திலும் பல பாடல்களைப் பாடினார்.


    மக்களின் வாழ்வில் ஒரு பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் துறை திரைப்படத்துறையாகும். இந்த ஊடகத்தின் மூலம் சொல்லப்படும் கருத்துகள் யாவும் மக்கள் தங்களின் வாழ்க்கைக்குரியதாக எடுத்துக் கொள்ளக்கூடியனவாக இருக்கின்றன. திரைப்படத்தில் காதலிப்பதைப் போலக் காதலிப்பதும் அதில் சொல்லப்படும் செய்திகளைத் தங்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்பதும் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாக மாறிவரும் சூழலில் வர்க்கச் சிந்தனை பொதுவுடைமைச் சிந்தனை ஆகியவற்றைத் திரைப்படத்தில் சொல்லமுடியும் என்பதை நடைமுறைப் படுத்தியவர் பட்டுக்கோட்டையார். இத்தகைய பாடல்களைப் பின்னர்க் காண்போம்.

    உழைப்பை மதித்துப் பலனைக் கொடுத்து
    உலகில் போரைத் தடுத்திடுவோம்
    அண்ணன் தம்பியாய் அனைவரும் வாழ்ந்து
    அருள் விளக்கேற்றிடுவோம்.

    (பட்டுக்கோட்டையார் பாடல்கள், ப.264)

    என்ற பாடலில், உலகளாவிய அன்புணர்வோடும், உண்மை உணர்ச்சியோடும் திரையுலகின் வழியாக உரத்த குரலை எழுப்பினார்.

    திரைப்படத்தில் அந்தந்தக் கதைச் சூழ்நிலைகளில் அவர் பாடிய பாடல்கள் பல சூழல்களுக்கும் பொதுவானவை.

    ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே - அவன்
    ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
    ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே

    (படம்: தங்கப்பதுமை, 1959)


    குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்
    குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்

    (படம்: பாசவலை, 1956)

    ஆகிய பாடல்கள் திரைப்படத்துறையில் பெரிய வரவேற்பைப் பெற்றன.

    திரைப்படத்தில் காதல் பாடல்கள் மிக எளிமையாக, அதே நேரம், உணர்வுகள் மடைதிறந்த வெள்ளம்போல் அமைந்து வெளிப்படுகின்றன.

    பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா? - இல்லே
    பயித்தியமாய்ப் பாடியாடி நடிக்கணுமா
    துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா - சொல்லு
    சோறு தண்ணி வேறுஏதும் இல்லாம கெடக்கணுமா?

    (படம்: புதையல், 1959)

    என்ற பாடலில் நகைச்சுவைப் பாத்திரமான காதலன் காதலியிடம் கெஞ்சுவது, காதலுக்காகத் தான் என்னவெல்லாம் செய்வேன் என்று சொல்வது எல்லாம் அற்புதமாக வெளிப்பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 12:45:53(இந்திய நேரம்)