தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.3 குடும்பம்

  • குடும்பத்துக்கு இன்றியமையாது வேண்டப்படும் சகோதரர் ஒற்றுமை, பெரியோரிடத்து நடக்கும் முறை முதலியன இளம் பருவத்திலேயே ஒவ்வொருவரும் பயில வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இச் சதகம். கூடப் பிறந்தவர் அடையும் துயர் தமது துயர், அவர்கள் கொள்சுகம் தம் சுகமெனக் கொண்டும், அவர் புகழும் பழியும், தமக்குற்ற புகழும் பழியும் போலக் கொண்டும் வாழ வேண்டும் என்று சகோதரர் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. (4)

    குடும்பத்தில் எப்படிப் பொருள் சேர்க்க வேண்டும், எப்படிச் செலவழிக்க வேண்டும் என்றும் குடும்பம் எப்படி நடத்த வேண்டும் என்றும் கூறும் ஒரு பாடலைப் பாருங்கள்.

    புண்ணிய வசத்தினால் செல்வமது வரவேண்டும்
    பொருளை ரட்சிக்க வேண்டும்
    புத்தியுடன் அது ஒன்று நூறாகவே செய்து
    போதவும் வளர்க்க வேண்டும்
    உண்ண வேண்டும் பின்பு நல்ல வஸ்த்ராபரணம்
    உடலில் தரிக்க வேண்டும்
    உற்ற பெரியோர் கவிஞர் தமர் ஆதுலர்க்குதவி
    ஓங்கு புகழ் தேட வேண்டும்
    மண்ணில் வெகு தர்மங்கள் செய்ய வேண்டும் (7)

    (ரட்சித்தல் = பாதுகாத்தல்; வஸ்த்ராபரணம் = ஆடைகளும் அணிகளும்; தமர் = தம்மவர், உறவினர்; ஆதுலர் = வறியவர்)

    4.3.1 இல்லறம்

    நல்லறமாக இல்லறத்தை நடத்துபவன் தந்தை, தாய், குருவை, இட்ட தெய்வங்களை, சன்மார்க்கம் (நல்லொழுக்கம்) உள்ள மனைவியை, தவறாத சுற்றத்தை, ஏவாத (குறிப்பறிந்து நடக்கும்) மக்களை, தனை நம்பி வருவோர்களைச் சிந்தை மகிழ்விக்க வேண்டும் என்று கூறி, தொடர்ந்து.

    தென்புலத்தோர் வறிஞரைத்
    தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்
    தேனுவைப் பூசுரர் தமைச்
    சந்ததஞ் செய்கடனை என்றுமிவை பிழையாது
    தான் புரிந்திடல் இல்லறம் (95)

    (தென்புலத்தோர் = முன்னோர்; துணைவர் = உடன் பிறந்தோர்; தேனு = பசு; பூசுரர் = அந்தணர்; அதிதி = விருந்து; சந்ததம் = எப்போதும்; செய்கடன் = கடமை; பிழையாது = தப்பாமல்)

    என்கிறது இச்சதகம். இத்தகைய இல்லறம் நடத்துவோருக்குத் துறவிகளும் ஈடாக மாட்டார்கள் என்றும் வலியுறுத்துகிறது.

    ‘ஒன்றற்கு ஒன்று அழகு செய்வன’ என்ற பாடலில் வாழ்மனை தனக்கழகு குலமங்கை என்றும், குலமங்கை வாழ்வினுக்கழகு சிறுவர் என்றும், சிறுவர்க்கு அழகு கல்வி என்றும், கல்விக்கழகு மாநிலம் துதி செய்கின்ற குணமென்றும், குணமதற்கு அழகு பேரறிவு என்றும், பேரறிவுக்கு அழகு தூயதவம் மேன்மை, உபகாரம், விரதம், பொறுமை, பெரியோர்களைத் தாழ்தல், பணிவிடை புரிதல், சீலம் நேசம், கருணை முதலியவையாம் எனக் குடும்பத்தின் சிறப்புப் பேசப்படுகிறது.

    4.3.2 மனைவியின் சிறப்பு

    மனைவி எப்படி இருக்க வேண்டும் அவளுடைய சிறப்புகள் என்னென்ன என்பதை விவரிக்கிறது ஒரு பாடல். (2)

    கணவனுக்கினியளாய் ம்ருதுபாஷியாய் மிக்க
    கமலை நிகர் ரூபவதியாய்க்
    காய்சின மிலாளுமாய் நோய் பழியிலாத தோர்
    கால்வழியில் வந்தவளுமாய்
    மணமிக்க நாணம் மடம் அச்சம் பயிர்ப்பென்ன
    வருமினிய மார்க்கவதியாய்
    மாமி மாமர்க்கிதம் செய்பவளுமாய் வாசல்
    வருவிருந் தோம்புபவளாய்
    இணையின் மகிழ்நன் சொல்வழி நிற்பவளுமாய் வந்தி
    யெனப் பெயரிலாத வளுமாய்

    (ம்ருதுபாஷி = இன்சொல் உடையவள்; கமலை = திருமகள்; ரூபவதி = அழகி; கால்வழி = பரம்பரை; இதம் = அன்பு; மகிழ்நன் = கணவன்; வந்தி = மலடி)

    இருக்க வேண்டுமாம்.

    4.3.3 நன்மக்கட்பேறு

    இல்லறம் நடத்தி மக்களைப் பெறுதல் எல்லோர்க்கும் இயல்பு. ஆனால் நன்மக்களைப் பெறுபவன் புண்ணியவான் என்று கூறி நன்மக்களின் இயல்பைச் சுட்டுகிறது ஒரு பாடல் (3).

    தம் குலம் விளங்கப் பெரியோர்கள் செய்து வரும் தான தருமங்களை அவன் செய்து வரவேண்டும். தானங்கள் செய்தும், தந்தை, தாய், குருமொழி மாறாது வழிபாடு செய்தும் வரவேண்டும். இங்கித (இணக்கமான) குணங்களும், வித்தையும், புத்தியும், ஈகையும், சன்மார்க்கமும் (நல்லொழுக்கம்) இவையெல்லாம் உடையவனே புதல்வன் என்று சொல்லத் தகுந்தவன். இவனை ஈன்றவனே நல்ல புண்ணியம் செய்தவன் என்கிறது அப்பாடல் (3).

    நன்மாணாக்கர் இயல்பு பற்றிப் பேசும் பாடல்

    வைதாலும் ஓர் கொடுமை செய்தாலுமோ சீறி
    மாறாதிகழ்ந்தாலுமோ
    மனது சற்றாகிலும் கோணாது நாணாது
    மாதா பிதா எனக்குப்
    பொய்யாமல் நீயென்று கனிவொடும் பணிவிடை
    புரிந்து பொருள் உடல் ஆவியும்
    புனித உன் தனதெனத் தத்தம் செய்து இரவு பகல்
    போற்றி மலரடியில் வீழ்ந்து
    மெய்யாகவே பரவி உபதேசம் அது பெற
    விரும்புவோர் சற்சீடராம் (6)

    (சற்சீடர் = உண்மையான சீடர்)

    என அமைகிறது அப்பாடல்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 15:29:16(இந்திய நேரம்)