தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வாழ்வியல்

  • 4.4 வாழ்வியல்

    வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல உண்மைகளை ஆங்காங்கே சொல்லிச் செல்கிறார் அம்பலவாணக் கவிராயர்.

    அவை (கூட்டம்) மெச்சப் பேசுவோர் பதின்மரில் ஒருவர். அவை புகழப் பாடுவோர் நூற்றில் ஒருவர். மனம் கவரும் வகையில் முறையாகச் சொற்பொழிவு செய்பவர் ஆயிரத்தில் ஒருவர். இவற்றின் அருமை அறிவோர் பதினாயிரத் தொருவர். இதய மகிழ்வால் மற்றவர்க்கு ஈகின்றவர்கள் இலட்சத்திலே ஒருவர். மூன்று காலமும் அறிந்த மெய்த்தூயர் (தூய்மையானவர்) கோடியில் ஒருவராம் என்கிறது ஒரு பாடல் (59).

    இதற்கு இது வேண்டும் என்ற பாடலில்

    தனக்கு வெகு புத்தியுண்டாகிலும் வேறொருவர்
    தம்புத்தி கேட்க வேண்டும்
    தானதிக சூரனே யாகினுங் கூடவே
    தள சேகரங்கள் வேண்டும்
    கனக்கின்ற வித்துவானாகினுந் தன்னினும்
    கற்றோரை நத்த வேண்டும்.


    காசினியை ஒரு குடையில் ஆண்டாலும் வாசலில்
    கருத்துள்ள மந்திரி வேண்டும்
    தொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும்
    சுதி கூட்ட ஒருவன் வேண்டும்

    (தளசேகரம் = படை பலம்; கனக்கின்ற = மிகப் பெரிய கல்வியறிவுடைய; நத்து = சென்று சேர்)

    என்று, இச்சமுதாயத்தில் மற்றவர் தயவின்றி யாரும் வாழ இயலாது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் (36).

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதைச் சொல்லும் பாடலில்,

    செத்தை பல கூடி யொரு கயிறாயின் அது கொண்டு
    திண் கரியையும் கட்டலாம்

    மனமொத்த நேயமொடு கூடியொருவர்க் கொருவர்
    வாழின் வெகு வெற்றி பெறலாம் (32)

    என்று வாழும் வழியைக் காட்டுகிறார்.

    செயற்கு அருஞ்செயல் என்ற பாடலில்

    நீர்மேல் நடக்கலாம் எட்டியும் தின்னலாம்
    நெருப்பை நீர் போற் செய்யலாம்
    நெடிய பெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்
    நீளரவினைப் பூணலாம்.
    பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்
    பட்சமுடன் உண்ணலாம்

    (நீள்அரவு = நீண்ட பாம்பு; பட்சம் =அன்பு, விருப்பம்; எட்டி = கசப்பான ஒரு காய்)

    என்பன போன்ற செயற்கரிய செயல்கள் எல்லாம் செய்ய முடியும் ஆனால் ‘புத்தி சற்றும் இல்லாத மூடர் தம் மனத்தைத் திருப்பவே எவருக்கும் முடியாது காண்’ (15) என்று அடித்துச் சொல்கிறார் அம்பலவாணக் கவிராயர்.

    4.4.1 நிலையாமை

    நிலையாமையைச் சொல்லாத புலவர்கள் யாருமில்லை. ஆனாலும் அம்பலவாணக் கவிராயர் எப்படிச் சொல்கிறார் என்று பார்ப்போம்.

    இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழி போன்றது. புதல்வர், கிளை, மனை, மனைவி இவையெல்லாம் கானல் நீர். உயிரோ வெட்ட வெளிதனில் வைத்த தீபம். எனவே வீண்பொழுது போக்காமல் ஆண்டவனை நேயமொடு வழிபட அவனிடமே அருள் வேண்டி நிற்க வேண்டும் என்கிறார்.

    காயமொரு புற்புதம் வாழ்வு மலைசூழ் தரும்
    காட்டில் ஆற்றின் பெருக்காம்
    கருணைதரு புதல்வர் கிளை மனை மனைவிஇவையெலாம்
    கானல் காட்டு ப்ரவாகம்
    மேயபுய பல வலிமை யிளமை அழகு இவையெலாம்
    வெயில் மஞ்சள், உயிர் தானுமே
    வெட்ட வெளிதனில் வைத்த தீபமெனவே கருதி
    வீண்பொழுது போக்காமலே
    நேயமுடனே தெளிந்து அன்போடுஉன் பாதத்தில்
    நினைவு வைத்து இரு போதிலும்
    நீர் கொண்டு மலர் கொண்டு பரிவு கொண்டர்ச்சிக்க
    நிமலனே யருள் புரிவாய் (19)

    (காயம் = உடம்பு; புற்புதம் = நீர்க்குமிழி; பெருக்கம் = வெள்ளம்; கிளை = சுற்றம்; மனை = வீடு; ப்ரவாகம் = வெள்ளம்)

    4.4.2 சினமும் பாவமும்

    கோபத்தின் கொடுமையையும், வறுமையின் கொடுமையையும் இச்சதகம் விரிவாகச் சொல்லுகிறது. கோபமே பாவங்களுக்கெல்லாம் தாய் தந்தை, கோபமே குடி கெடுக்கும், கோபமே ஒன்றையும் கூடி வரவொட்டாது, கோபமே துயர் கொடுக்கும், கோபமே பொல்லாதது, கோபமே சீர்கேடு, கோபமே உறவு அறுக்கும், கோபமே பழி செய்யும், கோபமே பகையாளி, கோபமே கருணை போக்கும், கோபமே ஈனமாம், கோபமே ஒருவரையும் சேர விடாமல் தடுத்து ஒருவனைத் தனிமைப்படுத்தும்; கோபமே மறலி (எமன்) முன் கொண்டு போய் நிறுத்தி, தீய நரகக்குழியினில் தள்ளுமாம். அதனால் ஆபத்தெலாம் தவிர்த்து என்னை ஆட் கொண்டருளும் அண்ணலே என்கிறது இச்சதகம். (87)

    வறுமையின் கொடுமை பற்றிப் பேசும் பாடலைப் பாருங்கள்.

    மேலான சாதியில் உதித்தாலும் அதிலென்ன
    பெருவித்தை கற்றுமென்ன
    மிக்க அதிரூபமொடு சற்குணமிருந் தென்ன
    மிக மானியாகி லென்ன
    பாலான மொழியுடையனா யென்ன ஆசார
    பரனாயிருந்து மென்ன
    பார்மீது வீரமொடு ஞான வான்ஆய் என்ன
    பாக்கிய மிலாத போது
    வாலாயமாய்ப் பெற்ற தாயும் சலித்திடுவள்
    வந்த சுற்ற மும்இகழுமே
    மரியாதை யில்லாமல் அனைவரும் பேசுவார்
    மனைவியும் தூறு சொல்வாள் (37)

    (பெருவித்தை = பெரிய கல்வி; அதிரூபம் =அழகானவடிவம்; ஆசார பரன் = ஒழுக்கமுடைவன்; பாக்கியம் = செல்வம்; வாலாயமாய் = வழக்கமாய், இயல்பாகவே; தூறு = குறை)

    என்று வறுமையுற்றவனுக்கு ஏற்படும் துன்பங்களைச் சுட்டிக் காட்டுகிறது.

    4.4.3 தத்துவம்

    தத்துவத் திரயம் (முப்பொருள்) என்னும் தலைப்பில் உள்ள பாடல் சைவ சித்தாந்தத் தத்துவத்தை விவரிப்பதாக உள்ளது. ஐம்பூதங்கள் பற்றியும் ஞான இந்திரியம் ஐந்து பற்றியும், கன்ம இந்திரியம் ஐந்து பற்றியும் மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என்ற நான்கு அந்தக் கரணங்கள் பற்றியும் குறிப்பிட்டு, ஓதினோர் இவை ஆன்ம தத்துவமெனச் சொல்வர் என்கிறார். தொடர்ந்து வித்தியா தத்துவம், சிவதத்துவம் ஆகியவற்றையும் விளக்குகிறார். (89) ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் சிவபெருமானாகிய அறப்பளீசுரரின் பெருமைகளைச் சுட்டிக் காட்டி ‘மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே’ என்று பாடுகிறார் அம்பலவாணக் கவிராயர்.

    ஆதாரமாய் உயிர்க்குயிராகி எவையுமாம் அமல - (5)

    என்றும்

    ஐயா, புரம் பொடிபடச் செய்த செம்மலே (6)

    என்றும்

    ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்தருள் செய்
    அமல (12)

    என்றும்

    சுரர் பரவும் அமலனே (15)

    (சுரர் = தேவர்)

    என்றும்

    அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே (27)

    என்றும்

    அரி பிரமர் தேடரிய அமலனே (32)

    என்றும்

    மதனவேள் தனை வென்ற அண்ணலே (43)

    என்றும் சிவபெருமான் சிறப்புகளைக் குறிப்பிட்டுப் பாடுகிறார் அம்பலவாணக் கவிராயர்.

    4.4.4 பிற செய்திகள்

    அறப்பளீசுரரை ஒவ்வொரு பாடலிலும் விளித்து முறையிடுவது போல் பல்வேறு நீதிகளையும், செய்திகளையும் எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர். குடும்பம், ஒற்றுமை, அரசர் முதலானோர் சிறப்பு, கோபம், வறுமை ஆகியவற்றின் கொடுமை என்று பல செய்திகளைக் குறிப்பிடுவதோடு நில்லாமல் வேறு பல செய்திகளையும் சொல்லக் காணலாம்.

    சோமுகா சுரனை வதைத்தமரர் துயர் கெடச்
    சுருதி தந்தது மச்சமாம்
    சுரர் தமக்கு அமுது ஈந்தது ஆமையாம்

    என்று தொடங்கித் திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிப்பிடுகிறது ஒரு பாடல். (98)

    பிறைசூடி உமைநேசன் விடை ஊர்தி நடமிடும்
    பெரியன் .......

    திருமாலின் அவதாரங்கள்

    என்று தொடங்கி சிவபெருமான் பெருமைகளை விவரிக்கிறது ஒரு பாடல். (99)

    சித்திரை மாதம் பதின்மூன்று தேதிக்கு மேல் பரணியிலும், வைகாசியில் பௌர்ணமி கழிந்த நாலாம் நாளிலும், ஆனியில் தேய்பிறை ஏகாதசியிலும், ஆடியில் ஐந்தாம் நாள் ஆதிவாரத்திலும் (ஞாயிற்றுக்கிழமை), ஆவணி மூல நாளிலும் மழை பொழிந்தால் நன்மையான விளைவுகள் பெறலாம் என்று மழைநாள் குறிப்பும் சொல்லப்படுகிறது. (79)

    பிறந்த நாளோடு வருகிற வார பலமும், மனை கோலுவதற்கு உரிய மாதமும், புதிய ஆடை உடுக்கும் நாட்களின் பலனும் போன்ற சோதிடக் குறிப்புகளும் சொல்லப்படுகின்றன. (61, 67, 77) சகுனம் பார்த்தல் அதற்குரிய பலன் பற்றி மூன்று பாடல்கள் விவரிக்கின்றன. (62, 63, 64)

    நீதி இலக்கியத்தின் நோக்கமும் பயனும் மக்களை உயர்ந்த உத்தமர்கள் ஆக்குவதுதானே. எனவே, நிறைவாக, உத்தமராவோர் யார் என்று இச்சதகம் சொல்லுகிறது என்பதைப் பார்ப்போமா.

    செய்ந்நன்றி மறவாத பேர்களும் ஒருவர் செய்
    தீமையை மறந்த பேரும்
    திரவியம் தர வரினும் ஒருவர் மனையாட்டி மேற்
    சித்தம் வையாத பேரும்
    கைகண்டெடுத்த பொருள் கொண்டு போய்ப் பொருளாளர்
    கையிற் கொடுத்த பேரும்
    காசினியில் ஒருவர் செய் தருமங் கெடாதபடி
    காத்தருள் செய்கின்ற பேரும்
    பொய்யொன்று நிதிகோடி வரினும் வழக்கு அழிவு
    புகலாத நிலை கொள்பேரும்
    புவிமீது தலை போகும் என்னினும் கனவிலும்
    பொய்மை உரையாத பேரும் (16)

    (பேர் = மனிதன்)

    என்றிவர்களெல்லாம் உத்தமர்கள் என்கிறார்.

    தம்மை ஆதரித்த மதவேள் என்னும் வள்ளலைப் பற்றி ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

    மதவேள் என்னும் வளோண் செல்வர் எப்படிப்பட்ட கருணை வள்ளல் என்பதைக் குறிப்பிடும் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது.

    பருகாத அமுது ஒருவர் பண்ணாத பூஷணம்
    பாரில் மறையாத நிதியம்
    பரிதி கண்டு அலராத, நிலவு கண்டு உலராத
    பண்புடைய பங்கேருகம்
    கருகாத புயல் கலைகள் அருகாத திங்கள் வெங்
    கானில் உறையாத சீயம்
    கருதரிய இக்குணமனைத்தும் உண்டான பேர்
    காசினியில் அருமையாகும்

    (பூஷணம் = ஆபரணம்; பரிதி = சூரியன்; பங்கேருகம் = தாமரை; கருகாதபுயல் = கருமை நிறம் பெறாமலே மழை பொழியும் மேகம்; சீயம் = சிங்கம்; காசினி = உலகம்)

    என்று குறிப்பிட்டுள்ளார் (97).

    அத்தகைய அரியவராம் மதவேள் புகழ், கல்வி, சீர் இதயம், ஈகை, வதனம் (சிரித்தமுகம்), திடமான வீரம் இவை பெற்றுக் கற்பகத் தருவைப் போன்றவர் என்று கூறுவதிலிருந்து அவர் சிறப்பும், ஆசிரியருக்கு அவர் மேல் உள்ள ஈடுபாடும் புலனாகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 15:31:08(இந்திய நேரம்)