தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.5 தொகுப்புரை

  • 4.5 தொகுப்புரை

    கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் அருணாசலக் கவிராயர் மகன் அம்பலவாணக் கவிராயர் அறப்பளீசுர சதகத்தை இயற்றியுள்ளார். 100 பாடல்களைக் கொண்டுள்ள இச்சதகம் கொல்லிமலையைச் சார்ந்த சதுரகிரி என்னும் சிவதலத்தில் வீற்றிருக்கும் அறப்பளீசுரரை முன்னிலைப்படுத்திச் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் இச்சதகத்தை ‘மதவேள்’ என்னும் வேளாண் செல்வர் ஒருவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி இயற்றினார்.

    ஆசிரியர் தான் கண்டு உணர்ந்தவற்றையும், உலகியலையும் தெளிந்து, மக்களுக்குப் பயன்படும் வகையில் நல்ல நீதிகளையும் அறவுரைகளையும் இந்நூலில் வழங்கியுள்ளார்.

    அரசர், வைசியர், வேளாளர், மந்திரி, சேனாதிபதிகள் ஆகியோரின் சிறப்புகள் எடுத்துரைக்கப்படுகின்றன. இல்லறச் சிறப்பு. ஒற்றுமையின் பெருமை, பிறவிக் குணம் மாறாமை, ஊழின் வலிமை பற்றி விவரிக்கப்படுகின்றன.

    சோதிடக் குறிப்புகளும், மருத்துவக் குறிப்புகளும் இந்நூலில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. நிலையாமை, வறுமையின் கொடுமை, கோபத்தின் கொடுமை முதலிய வாழ்வியல் உண்மைகள் சுட்டிக் காட்டப்படுகின்றன.

    ஒவ்வொரு பாடலிலும் ‘மதவேள்’ என்ற வேளாண் செல்வரைக் குறிப்பிடுகிறார். அறப்பளீசுரரின் (சிவபெருமான்) பெருமைகள் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடப்படுவதிலிருந்து ஆசிரியருடைய சைவசமயப் பற்று புலனாகின்றது.

    திருமாலின் பத்து அவதாரங்கள், புராணங்களின் வகைகள், 32 வகையான அறங்கள் என்று கூறும் நிலையில் இச்சதகம் கலைக்களஞ்சியத்தின் பயனைத் தருகிறது எனலாம். நல்ல சொற்கட்டு, சந்தம், கற்பனை, கவிதை நயம் போன்றவற்றைச் சதக நூல்களில் நாம் அதிகம் காண இயலாது. எனினும் வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டிய நீதிகளை எடுத்துரைக்கும் விதத்தில் சிற்றிலக்கியங்களில் அறப்பளீசுர சதகம் சிறந்து விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.

    1)
    அறப்பளீசுர சதகம் குடும்ப அமைப்புப் பற்றிக் கூறுவது என்ன?
    2)
    எதற்கு எது அழகு? இதை நூல் ஆசிரியர் எவ்வாறு அமைத்திருக்கிறார்?
    3)
    நல்ல புண்ணியம் செய்தவன் யார்?
    4)
    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை இந்நூல் எப்படிக் கூறுகிறது?
    5)
    கோபத்தின் விளைவுகளை ஆசிரியர் எவ்வாறு விளக்குகிறார்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 15:35:13(இந்திய நேரம்)