தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2:1-சிலப்பதிகாரம்

  • 2.1 சிலப்பதிகாரம்

    தமிழ் மொழியில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இந்நூலின் ஆசிரியர் இளங்கோ அடிகள் ஆவார். இது சமண சமயக் காப்பியம். இந்தக் காப்பியம் சங்க காலத்திற்கும் தேவாரக் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுந்தது.

    காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்து, குலவொழுக்கப்படி திருமணம் செய்து, இல்லறம் நடத்திய கோவலன் கண்ணகி வாழ்க்கை வரலாற்றை விளக்குவது இந்நூல். இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை மூன்று காண்டங்களில் முப்பது காதைகளில் விரிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.

    2.1.1 காப்பிய அமைப்பு

    சிலப்பதிகாரக் காப்பிய நிகழ்ச்சிகள் முறையே சோழ, பாண்டிய, சேர நாடு என்னும் மூன்று நாடுகளில் மூவேந்தரின் தலைநகரங்களிலும் நடந்த நிகழ்ச்சிகளாம். எனவே இக்காப்பியம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களாக வகுத்துக் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று காண்டங்களில் முப்பது காதைகள் அமைந்துள்ளன. (காண்டம் = பெரும் பிரிவு; காதை = சிறு பிரிவு)

    பெயர்க்காரணம்

    இந்தக் காப்பியத்தின் கதை சிலம்பினைக் காரணமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயரிடப்பட்டது.

    காப்பிய நோக்கம்

    காப்பியத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் இடம் பெறுகின்றன. கோவலனும் கண்ணகியும் வானவர் உலகு (வீடு) செல்வதும் காட்டப்படுகிறது. எனினும் காப்பியத்தில் இளங்கோவடிகளின் நோக்கம் அறமே எனலாம். தம்மை அறவுணர்வு உந்த, தாமும் மக்களிடம் அறவுணர்வை விழிப்புறச் செய்ய இளங்கோவடிகள் பாடியது சிலப்பதிகாரம்.

    2.1.2 காப்பியச் சிறப்பு

    சிலப்பதிகாரம் தோன்றுவதற்கு முன்னிருந்த தமிழிலக்கியம் அகத்திணை, புறத்திணைப் பாடல்களே. அவை தனிமனித உணர்ச்சிகளைப் பொதுமையில் நின்று உணர்த்தின. ஆனால் ஒருவரது வாழ்க்கையை முழுமையாகப்    பார்த்து, உயர்ந்த உண்மைகளைக் காட்டி, மனித சமுதாயத்தை வழி நடத்திச் செல்லும் முதல் இலக்கிய முயற்சியாக, பெருங்காப்பியமாக, அமைந்தது சிலப்பதிகாரம் ஆகும்.

    காப்பியத் தலைவி

    காப்பிய இலக்கணப்படி பெருங்காப்பியம் தன்னேரில்லாத தலைவனைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆனால் சிலம்பில் கண்ணகி தன் நிகரில்லாத தலைவியாகப் போற்றப்படுகின்றாள்.

    முத்தமிழ்க் காப்பியம்

    இளங்கோ அடிகள் இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் பயன்படுத்தியுள்ளார். அதனால் சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் எனப் போற்றப்படுகிறது.

    மூன்று நீதிகள் அல்லது உண்மைகள்

    சிலப்பதிகாரம் இவ்வுலக மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் மூன்று உண்மைகளைக் கருப்பொருளாகக் கொண்டு அமைந்துள்ளது. அந்த மூன்று உண்மைகள் எவை என அறிந்து கொள்வோமா? அவையாவன :

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;
    உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது ;
    ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது

     

    (பிழைத்தல் = தவறு செய்தல்; கூற்று = எமன்; உரைசால் = புகழ்மிகுந்த; உருத்து = சினந்து)

    இவை சிலப்பதிகார நூல் முழுமையும் விரவி வந்துள்ளதைக் காணலாம்.

    காப்பியப் பெருமை

    சிலப்பதிகாரக் காலத்தில் வழக்கிலிருந்த தமிழர்தம் பண்பாடு, சமய நெறிகள், பழக்க வழக்கங்கள், கலைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள இக்காப்பியம் பெரிதும் துணைநிற்கும். சிலப்பதிகாரக் காப்பியத்தின் பெருமையைக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்” எனப் பாராட்டியுள்ளார்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    காப்பியம் என்றால் என்ன?
    2.
    சிலப்பதிகாரக் கதை நிகழ்ச்சிகள் நடந்த நாடுகள் எவை?
    3.
    சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள் எவை?
    4.
    பாரதியார் சிலப்பதிகாரத்தை எவ்வாறு பாராட்டுகிறார்?
    5.
    சிலப்பதிகாரக் காப்பியத்தின் தனிச்சிறப்பு என்ன?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 18:35:54(இந்திய நேரம்)