Primary tabs
2.3 வழக்குரை காதை நிகழ்ச்சிகள்
கண்ணகி உணர்ச்சி பொங்க வழக்குரைத்து வெல்வதும், தோற்ற பாண்டிய மன்னன் உயிர் நீப்பதும் இக்காதை நிகழ்ச்சிகள் ஆகும்.
அரண்மனையில் பாண்டிய அரசி கோப்பெருந்தேவி தான் கண்ட தீய கனவினால் உள்ளங் கலங்கித் தன் தோழியிடம் கூறியது :
“தோழீ! கேள். நம் மன்னரது வெண்கொற்றக் குடை செங்கோலுடன் கீழே விழுந்தது. அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியின் ஓசை இடைவிடாது ஒலித்தது. எல்லாத் திசைகளும் அப்போது அதிர்ந்தன. அப்பொழுது சூரியனை இருள் சூழக் கண்டேன். இரவு நேரத்தில் வானவில் தோன்றக் கண்டேன். பகல் பொழுதில் விண்மீன்கள் மிக்க ஒளியோடு பூமியில் விழக் கண்டேன். இதெல்லாம் என்ன? அதனால் நமக்கு வரக்கூடிய துன்பம் ஒன்றுண்டு. அதனை நம்மன்னவர்க்குச் சென்று கூறுவேன்.”
இவ்வாறு கூறிய தேவி மன்னன் இருக்கும் அரசவை நோக்கிச் சென்றாள்.
(பின்னால் நிகழப் போகும் நிகழ்ச்சியைக் குறிப்பாக முன்னரே உணர்த்துவது நாடக உத்தியாகும். இங்குத் தேவி கண்ட கனவின் மூலம் பாண்டிய மன்னன் வீழ்ச்சி அடையப் போவது குறிப்பாக உணர்த்தப்பட்டது.)
இப்பகுதியை ஆசிரியர் கீழ்வருமாறு பாடுகிறார் :
ஆங்குக்
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி யின்குரல் காண்பென்காண் எல்லா
திசைஇரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீன்இவை காண்பென்காண் எல்லா
கருப்பம்
(வழக்குரை காதை : 1-8)(எல்லா = தோழி; கடைமணி = முறைவேண்டி வருவோர் ஒலிக்கும் பொருட்டு அரண்மனை வாயிலில் கட்டப்படுவதோர் பெரியமணி; கதிர் = சூரியன்; கருப்பம் = அறிகுறி)
கோப்பெருந்தேவியின் வருகை
அரசி மன்னனை நாடிச் சென்ற போது தோழியரும் உடன் வந்தனர். கண்ணாடி ஏந்தி வந்தனர் சிலர்; ஆடை, அணிகலன், ஏந்தினர் சிலர்; மணப்பொருள் ஏந்தி வந்தனர் சிலர்; மாலை, கவரி, அகிற்புகை முதலியன ஏந்தி வந்தனர் சிலர்; கூனராயும், குறளராயும், ஊமையராயும் உள்ள பணி செய்யும் இளைஞரோடு, குற்றேவல் செய்யும் மகளிர் அரசியைச் சூழ்ந்து வந்தனர்; முதுமகளிர் பலரும் ‘பாண்டியன் பெருந்தேவி வாழ்க!’ என உள்ளன்போடு வாழ்த்தினர்.
(கூனர், குள்ளர், ஊமையர் முதலிய குறைபாடு உடையோர் அரண்மனையில் பணிபுரிவது அக்காலத்து வழக்கமாகும்.)
இவ்வாறு தன் பரிவாரத்துடன் தேவியானவள் சென்று, தன் தீய கனவில் கண்டவற்றை எல்லாம் பாண்டிய மன்னனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். சிங்கம் சுமந்த அரசு கட்டிலின் மேல் வீற்றிருந்து, தென்னவர் கோமானாகிய பாண்டியன் தேவி கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவ்வேளையிலே கண்ணகி அரண்மனை வாயிலை அடைந்தாள்; அங்கிருந்த காவலனை நோக்கி, “வாயில் காவலனே! வாயில் காவலனே! நல்ல அறிவு அற்றுப் போன, தீய நெஞ்சத்தால் செங்கோல் முறையினின்றும் தவறிய கொடுங்கோல் மன்னனுடைய வாயில் காவலனே! பரல்களையுடைய இணைச் சிலம்புகளுள் ஒரு சிலம்பினை ஏந்திய கையை உடையவளாய், தன் கணவனை இழந்தாள் ஒருத்தி அரண்மனை வாயிலில் உள்ளாள் என்பதை உன் மன்னனிடம் சென்று அறிவிப்பாய்” என்று கூறினாள்.
வாயிலோயே வாயிலோயே
அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே
(வழக்குரை காதை : 24-29)(அறிவு அறை போதல் = அறிவு சமயத்தில் உதவாமல் போதல்; இறைமுறை = செங்கோன்மை)
வாயில் காவலன் மன்னனுக்கு அறிவித்தல்
வாயில் காவலன் கண்ணகியின் சினங்கொண்ட தோற்றம் கண்டு அஞ்சியவனாய் விரைந்து சென்று மன்னனை வணங்கி வாழ்த்தி நின்றான்.
“எம் கொற்கைப் பதியின் வேந்தனே வாழ்க! தென் திசையிலுள்ள பொதிகை மலைக்கு உரிமை உடையவனே வாழ்க! செழிய வாழ்க! தென்னவனே வாழ்க! பழி வருவதற்குக் காரணமான நெறியில் செல்லாத பஞ்சவனே வாழ்வாயாக !
குருதி பீறிடும் மகிடாசுரனுடைய பிடர்த்தலைப் பீடத்தின் மேல் நின்ற கொற்றவையோ என்றால் அவளும் அல்லள்; சப்த மாதர் ஏழு பேருள் இளையவளான பிடாரியோ என்றால் அவளும் அல்லள்; இறைவனை நடனமாடக் கண்டருளிய பத்திர காளியோ எனில் அவளும் அல்லள்; பாலை நிலக் கடவுளான காளியோ எனில் அவளும் அல்லள்; தாருகன் என்ற அசுரனின் அகன்ற மார்பைப் பிளந்த துர்க்கையும் அல்லள்; உள்ளத்திலே மிகவும் சினங்கொண்டவள் போல் தோன்றுகின்றாள்; அழகிய வேலைப்பாடமைந்த பொன் சிலம்பு ஒன்றினைக் கையிலே பிடித்துள்ளாள்; கணவனை இழந்தவளாம்; நம் அரண்மனை வாயிலில் உள்ளாள்,” என்றான்.
வாழிஎம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்சவ வாழி
அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண்டு அருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே
(வழக்குரை காதை : 30-44)(கொற்கை = சிறந்த முத்துகள் கிடைக்கும் கடற்கரைப் பட்டினம். செழியன், தென்னவன், பஞ்சவன் என்பன பாண்டிய அரசர்க்குரிய பெயர்கள்.
பழியொடு படராப் பஞ்சவ என்றது அன்று வரையிலும் அரசியல் நீதி தவறாது அரசாண்டவன் என்பதை உணர்த்தும்.
பசுந்துணி = வெட்டப்பட்ட துண்டம்; பிடர்த்தலை = பிடரியோடு கூடிய மகிடாசுரன் தலை; இறைவன் = சிவபெருமான்; அணங்கு = பத்திரகாளி; கானகம் உகந்தகாளி = பாலைநிலத் தெய்வம்; செற்றனள் = உட்பகை கொண்டவள்; செயிர்த்தல் = சினத்தல்)
இப்பகுதி கண்ணகி சினத்தாலும் உருவத்தாலும் மக்கள் தன்மையில் இருந்து வேறுபட்டு, கொற்றவை முதலிய தெய்வ மகளிரே போல் காணப்பட்டாள் என்பதை உணர்த்துகிறது.
2.3.3 அரசன் வினாவும் கண்ணகி விடையும்
தனது ஆணைப்படி, தன்முன் வந்து நின்ற கண்ணகியை நோக்கி அரசன் “நீர் ஒழுகும் கண்களுடன் எம்முன் வந்திருப்பவளே! இளையவளே! நீ யார்?” எனக் கேட்டான்.
“உண்மை தெளியா மன்னனே! சொல்லுகிறேன் கேள். தேவர்களும் வியக்கும்படி ஒரு புறாவினது துன்பத்தை நீக்கின சிபி என்னும் செங்கோல் மன்னனும்; தனது அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியை இடைவிடாது அசைத்து ஒலித்த ஒரு பசுவின் துயரைப் போக்க எண்ணி, அப்பசுவின் துன்பத்திற்குக் காரணமான தனது அரும்பெறல் மகனைத் தானே தனது தேர்ச் சக்கரத்திலிட்டுக் கொன்றவனான செங்கோல் வேந்தன் மநுநீதிச் சோழனும் அருளாட்சி செய்த பெரும் புகழை உடைய புகார் நகரம் என்னுடைய ஊராகும்.
புகார் நகரில் மிக்க புகழுடன் விளங்கும் பெருங்குடி வணிகனான மாசாத்துவான் என்னும் வணிகனது மகனாய்ப் பிறந்து, வாணிகம் செய்து வாழ்தலை விரும்பி, ஊழ்வினை காரணமாக உனது பெரிய நகரமாகிய மதுரையிலே புகுந்து, இங்கு அத்தொழிலுக்கு முதலாக என்னுடைய காற்சிலம்புகளுள் ஒன்றினை விற்பதற்கு வந்து, உன்னால் கொலைக்களப்பட்ட கோவலன் என்பான் மனைவி ஆவேன். என்னுடைய பெயர் கண்ணகி” என்றாள்.
தேரா மன்னா செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி(வழக்குரை காதை : 50-63)
(தேரா மன்னா = ஆராய்ச்சி இல்லாத அரசனே; புள் = பறவை. இங்குப் புறாவைக் குறிக்கும்; புன்கண் = துன்பம்; ஏசாச் சிறப்பு = பழி கூறப்படாத பழஞ்சிறப்பு)
இப்பகுதியில் அரசன் மீண்டும் தன்னை வினவுவதற்கு இடமின்றிக் கூறவேண்டிய அனைத்தையும் குறைபடாது கூறிக் கண்ணகி வழக்குரைக்கின்ற திறம் போற்றுதற்குரியது.
மன்னன் கூற்று
“பெண் அணங்கே ! கள்வனைக் கொல்வது செங்கோல் முறைமைக்கு ஏற்றது ஆகும். முறை தவறாத அரச நீதியே ஆகும்,” என்று மன்னன் விளக்கினான்.
கண்ணகி காட்டும் சான்று
அது கேட்ட கண்ணகி, “நல்ல முறையில் ஆராய்ந்து பார்த்துச் செயல்படாத கொற்கை வேந்தனே! என்காற் பொற்சிலம்பு மாணிக்கக் கற்களை உள்ளிடு பரல்களாக உடையது” என்றாள்.
(சிலம்பு ஒலிக்க வேண்டும் என்பதற்காக அதன் உள்ளே சிறு கற்களை இடுவார்கள். அக்கற்களைப் ‘பரல்’ என்றும் ‘அரி’ என்றும் குறிப்பிடுவார்கள். சிலம்பினுள் மாணிக்கப் பரலிடுதல் அரியதொரு நிகழ்ச்சி ஆதலாலும், பாண்டியன் அரண்மனைச் சிலம்பில் முத்துகளே பரல்களாக இருக்க வேண்டும் என்னும் துணிவு பற்றியும் கண்ணகி ‘என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே’ என்றாள்.)
சான்றினைப் பாராட்டுதல்
அது கேட்ட மன்னன் உண்மையை அறிவதற்குத் தகுந்த சான்று கூறிய கண்ணகியைத் தன்னுள் பெரிதும் பாராட்டி, “நல்லது. நீ கூறியவை நல்ல சொற்கள். எமது சிலம்பு முத்துகளை உள்ளிடு பரல்களாக உடையது.” என்றான்.
அக்காலத்தில் மன்னர்கள் நடுநிலை தவறாது முறையாக அரசாண்டனர். குடிமக்கள் தம்மை வந்து காண்பதற்கு எளியவராகவும், இனிமையாகப் பேசும் பண்பு உடையவராகவும் இருந்தனர். சான்றோர் கூறும் அறிவுரைகள் தம் காதுகளுக்குக் கசப்பாய் இருப்பினும் அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் பண்பு உடையவராகவும் இருந்தனர். இவ்வாறு முறை செய்து காப்பாற்றும் மன்னர்களை மக்கள் கடவுளாகப் போற்றினர்.
இப்பாடப் பகுதியில் பாண்டிய மன்னன் கண்ணகி கூறிய சான்றினைக் கொண்டு உண்மையை உணர்வதற்கு ஆர்வம் காட்டுதல் மன்னனது நடுநிலைமையை நமக்கு விளக்குகிறது. மேலும். பாண்டியன் கண்ணகி கூறிய கடுஞ்சொற்களால் சிறிதேனும் சினவாது அமைதியுடன் இருந்து, உண்மை அறிய விரும்பி விரைந்து செயல்பட்ட பண்பு அவன் சிறந்த பண்புடைய மன்னன் என்பதைக் காட்டுகிறது.
மன்னனது ஆணைப்படி கோவலனிடமிருந்து பெற்ற காற்சிலம்பினை ஏவலர் கொண்டு வந்து தர, அச்சிலம்பினை வாங்கித் தானே அதனைக் கண்ணகியின் முன் பாண்டியன் வைத்தான். உடனே கண்ணகி விரைந்து அச்சிலம்பினைக் கையில் எடுத்து மன்னன் முன்னிலையில் உடைத்தாள். அச்சிலம்பு உடைந்து அதனுள் இருந்த மாணிக்கக் கற்கள் சிதறுண்டு அரசனுடைய முகத்திலும் பட்டுக் கீழே விழுந்தன.
கண்ணகி அணிமணிக் காற்சிலம்பு உடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே(வழக்குரை காதை : 71-72)
பாண்டியன் நிலைமை
பாண்டிய மன்னன் அவ்வாறு சிதறிய மாணிக்கப் பரல்களைக் கண்டவுடன் தனது வெண்கொற்றக் குடை ஒருபக்கம் விழவும், பிடிதளர்ந்து தனது செங்கோல் ஒருபக்கம் சாய்ந்து நிற்கவும், “பொற்கொல்லனின் சொல்லைக் கேட்டு அதனை உண்மையென்று துணிந்த அறிவிலியாகிய யானும் ஓர் அரசன் ஆவேனோ? இப்பொழுது யானே கோவலனின் சிலம்பைக் கவர்ந்த கள்வன் ஆகின்றேன். குடிமக்களைப் பேணிக் காத்து வருகின்ற இத்தென்னாட்டின் பாண்டியர் ஆட்சிச் சிறப்பு என்னால் பிழைபட்டு விட்டதே; ஆதலால் என் ஆயுள் அழிவதாக” என்று கூறி மயங்கி அரசு கட்டிலினின்றும் வீழ்ந்தான்.
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுகவென் ஆயுள்என
(வழக்குரை காதை : 74-77)இவ்வாறு அரசன் தன் தவற்றை உணர்ந்ததும், தன்னுயிர் நீத்து நீதியை நிலை நிறுத்தினான்.
கோப்பெருந்தேவியின் நிலை
அரச மாதேவியின் உள்ளமும் உடலும் நடுங்கின. கணவனை இழந்த கற்புடைய மகளிர்க்கு அந்த இழப்பிற்கு ஈடாகக் காட்டுவதற்கு உலகில் யாதொன்றும் இல்லை. ஆதலால் தன் கணவனுடைய திருவடிகளைத் தொழுது வீழ்ந்தனள்; உயிர் துறந்தனள்.