தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4:2-விமலையார் இலம்பகம்

  • 4.2 விமலையார் இலம்பகம்

    சீவக சிந்தாமணியில் எட்டாம் உட்பிரிவாக விமலையார் இலம்பகம் இடம் பெற்றுள்ளது. இவ்விலம்பகத்தில் 106 விருத்தப் பாடல்கள் அமைந்துள்ளன.

    4.2.1 கதைச் சுருக்கம்

    சீவகன், பலவகை மாலைகளையும், வெற்றி வேலையும் உடையவன். அவன் தம்பி நந்தட்டன், ‘சீவகன் ஒரு மாமணி. அவனைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்’ என்று நண்பன் பதுமுகனிடம் கூறினான். பிறகு ஏமமாபுரத்திலிருந்து குதிரை மீதேறி, சீவகன் தன் தோழர்களும், மறவர்களும் புடை சூழ, தன் தாய் விசயை தங்கியிருக்கும் காட்டிலுள்ள தவப் பள்ளிக்குச் சென்றான். அங்கு விசயை வைகறையில் கண்ட கனவு நனவாகும்படி நேரில் மகனைக் கண்டாள். சீவகன் தன் தாயின் காலில் விழுந்து வணங்கினான். விசயை தாயன்பு மீதூர்ந்தவளாக ஆனந்தம் கொண்டாள். பின்னர் தன் மகனுக்கு அரசர்கள் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளையும், பகைவரை வெற்றி கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் தெளிவாக எடுத்துக் கூறினாள்.

    விசயை, தன் நாட்டைக் கைப்பற்றிய கட்டியங்காரனைக் கொல்லத் தாய்மாமன் கோவிந்தனைத் துணையாகக் கொள்ளும்படி மகனைப் பணித்தாள். பின்னர்ச் சீவகன், விசயையைத் தன் மாமனாகிய கோவிந்தனின் இருப்பிடத்திற்கு அனுப்பினான். பின்பு, சீவகன் தன் தோழர்களுடன் புறப்பட்டு ஏமாங்கத நாட்டிலுள்ள இராசமாபுரத்தை அடைந்து, நகர்ப் புறத்தேயுள்ள ஒரு சோலையில் தங்கினான். மறுநாள் காலையில் சோலையிலேயே நண்பர்களை இருக்கச் செய்து விட்டுத் தான் மட்டும் வேற்றுருவில் நகருக்குள் சென்றான்.

    அந்நகரத்தின் சாகர தத்தன் என்னும் வணிகனின் மகள் விமலை ஆவாள். அவள் பந்தாடுவதில் வல்லவள். அவளது அழகும், விளையாட்டும் சீவகனது மனத்தை மயக்கின. சீவகனும் அவளை மறக்க முடியாதவனாய், அவள் தந்தையின் கடையருகே வந்து நின்றான்.

    சீவகன் கடையருகே வந்தவுடன், விலையாகாமல் நெடுநாள் தேங்கிக் கிடந்த பொருட்கள் எல்லாம் விலை போயின. அது கண்ட தத்தன் சீவகனை நோக்கி, அன்போடு வரவேற்றான். “முன்பு ஒரு சோதிடன், உன் மகளுக்குரிய கணவன், உன் கடைக்கு வலிய வருவான். அப்படி அவன் வலிய வந்ததும் உன் கடையில் விற்காது கிடந்த பழஞ்சரக்கெல்லாம் விற்று முதலாகும்” என்று அவள் பிறந்த போதே பயனைக் கணித்துக் கூறியிருந்தான். இன்று நீ என் கடையருகே வந்து நின்றதும் என் இருப்பெல்லாம் விற்றுத் தீர்ந்தன. எனவே நீதான் அச்சோதிடன் கூறிய, என் மகள் விமலைக்கேற்ற கணவனாவாய்” என்று கூறி அவனைத் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்று விமலையைத் திருமணம் செய்து கொடுத்தான். சீவகன் விமலையோடு கூடி இரண்டு நாள் இன்புற்று இருந்து, பின் தன் தோழர்களை அடைந்தான்.

    கதை மாந்தர்கள்

    இவ்விலம்பகத்தில் விசயை, சீவகன், கோவிந்தன், தம்பி நந்தட்டன், நண்பன் பதுமுகன், சாகர தத்தன், கமலை, விமலை, சோதிடன் ஆகியோர் கதை மாந்தர்களாக இடம் பெற்றுள்ளனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 11:01:32(இந்திய நேரம்)