Primary tabs
4.4 இலக்கியச் சிறப்பு
காப்பிய இலக்கண மரபுப்படி அமைந்த முதல் காப்பியம் சீவக சிந்தாமணி. இது விருத்தப்பாவில் அமைந்துள்ளது. வருணனைக்குப் பொருத்தமான பாவாக அது விளங்குகிறது.
விமலையார் இலம்பகத்தில் சீவகன் ஏமாங்கத நாடு செல்லும் போது காட்டினைக் கடந்து சென்றான். அங்குக் காணப்பட்ட இயற்கையழகைத் திருத்தக்க தேவர் சுவைபட வருணித்துள்ளார்.
பெரிய மலைகளில் மலையாடுகள் தம் கால்களால் மிதித்த மணிகள் பலவும் செந்துகள்களாயின. அத்துகள்கள் மலையிலிருந்து கொட்டுவது, விண்ணுலகமே உளுத்துக் கொட்டுவதாய்த் தோன்றியது. இப்படி விழுந்த அந்த மணிகளின் செந்துகள்கள் படிந்த மரங்கள் கற்பகத் தருவை ஒத்துத் தோன்றின.
அண்ணலங் குன்றின்மேல் வருடைபாய்ந் துழக்கலின்
ஒண்மணி பலவுடைந் தொருங்கவை தூளியாய்
விண்ணுளு வுண்டென வீழுமா நிலமிசைக்
கண்ணகன் மரமெலாங் கற்பக மொத்தவே
(பாடல் - 11)(வருடை = மலையாடு; உழக்கல் = மிதித்தல்; தூளி = துகள்; உளுவுண்டென= உளுத்தது போல )
மணிகளின் செந்துகள் படிந்த மரம், கற்பக மரத்திற்கு ஒப்பாயிற்று.