Primary tabs
4.3 இலம்பகத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிகள்
விமலையார் இலம்பகத்தில், விசயை, சீவகனுக்குக் கூறிய அறவுரைகளும், சீவகன் தெருவில் சென்ற காட்சியும், விமலை சீவகனைக் காணுதலும், திருமணமும் முக்கிய நிகழ்ச்சிகளாக இடம்பெற்றுள்ளன.
விசயை, தன்னைக் காண வந்த அன்பு மகனைச் சீராட்டி, பாராட்டினாள். நூல் வல்லார் கூறுகின்ற அரசர்கள் கைக்கொள்ள வேண்டிய நெறி முறைகளையும், வெற்றி வாழ்வினைப் பெறக் கைக்கொள்ள வேண்டிய நெறிகளையும் எடுத்துக் கூறினாள். மேலும், "உன் மாமன் கோவிந்தனோடு சேர்ந்து, அவன் சொற்படி நடந்து, நம்மோடு நிலைபெற்று இருக்கின்ற பகையையும் பகைவரையும் வெல்வாயாக” என்று கூறினாள் விசயை.
சீவகன் உடனே, “என் மீது வைத்த அன்பினால் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் மாமனின் இருப்பிடம் சென்று தங்கியிருங்கள்" என்றும், “நான் ஏமாங்கத நாடு சென்று, பகையழித்து வெற்றியுடன் வருகின்றேன்" என்றும் கூறிப் புறப்பட்டான்.
மாமன் மற்றுன்
சீர்தோன்ற வேமலருஞ் சென்றவன் சொல்லி னோடே
பார்தோன்ற நின்ற பகையைச்செறற் பாலை யென்றாள்.
(பாடல் -43)(மாமன் மலரும் = மாமன் மனம் மகிழும்; செறற் பாலை = கொல்லத் தக்காய்)
அரசர்கள் கைக்கொள்ள வேண்டிய நெறிகள்1) இறையாக வந்த செல்வத்தை ஆறில் ஒரு பங்கு பெருக்குதல்
2) பழம் பகையை மனத்தில் இருத்துதல்
3) பகைவரை, அவர் பகைவரோடு மோத விடுதல்
4) பல பகைவர்கள் இருப்பின் அவர்களைப் பிரித்துத் தம்மிடம் சேர்த்துக் கொள்ளுதல்.வெற்றி வாழ்வைப் பெறும் நெறிகள்
1) பல்வகை வெற்றிகளை உண்டாக்குதல்
2) மேல்நிலையை அடைதல்
3) மெலியவரை வலியவராக்குதல்
4) கல்வி, அழகு உண்டாகச் செய்தல் முதலான செயல் புரிவதால் பல நாடுகள் கிடைக்கும். இறையாகப் பெரும் பொருள் வந்து சேரும். உலகில் கிடைக்காதது ஒன்றுமில்லை என்று நினைத்தல்.சீவகன் குதிரை மேலேறி மலை, காடு, வயல், அருவி கடந்து ஏமாங்கத நாடு அடைந்தான். பிறகு இராசமாபுர நகரின் வளம் காணும் பொருட்டு, அழகிய வடிவங்கொண்டு வெளியே சென்றான். அத்தெருவிலே நின்று கொண்டிருந்த பெண்களின் அழகு, துறவிகளையும் இல்லறத்திலே ஈடுபடத் தூண்டும் தன்மையுடையதாக இருந்தது. அவ்வழி வந்த சீவகனின் அழகினைக் கண்ட பெண்கள். இவன் முருகனோ? மன்மதனோ? யார் என்றே தெரியவில்லையே? தெரிந்தால் கூறுங்கள் என்று வருத்தப்பட்டனர். அத்தெருவின் ஒரு புறத்தில் விமலை பந்தாடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது பந்து, தெருவின் ஓரத்தில் ஓடிச் சென்றது. அப்பந்தை எடுக்கச் சென்ற போது, அவள் சீவகனைக் கண்டாள். இருவரும் கண்களால் கலந்து, காதல் நோயால் அவதியுற்றனர்.
மின்னின் நீள்கடம் பின்னெடு வேள்கொலோ
மன்னும் ஐங்கணை வார்சிலை மைந்தனோ
என்ன னோஅறி யோம்உரை யீர்எனா.... (பாடல் - 60)(நெடுவேள் = முருகன்; என்னனோ = யார் தான் என்று)
விமலை, மான்போலும் மருளும்நோக்குடைய கண்களை உடையவள். தேவமகளைப் போன்ற அழகுடையவள். பால் போலும் இனிய மொழி பேசுபவள். பெண்மைக்கு அழகுதரும் நீங்காத நிறங்கொண்டவள். மார்பிலே மந்தார மாலையினை அணிந்தவள். ஒரே நேரத்தில் ஐந்து பந்துகளை விடாமல் பந்தடிக்கும் திறனுடையவள்.
மானொடு மழைக்க ணோக்கி வானவர் மகளு மொப்பாள்
பானெடுந் தீஞ்சொ லாளோர் பாவைபந் தாடு கின்றாள்
(பாடல் - 63)மலை தன்னுடைய அழகிய கைகளிலே ஐந்து பந்துகளைக் கொண்டு ஆடினாள்.
1) மேலே எழும்பியும் முறை தவறிக் கீழே விழுதலின்றியும் ஓடுகின்ற பந்து, கூடச் சென்று ஆடும் போது மாலைகளுக்குள் சென்று மறைந்த பந்து கைகளுக்கு வந்து சேரும்.
2) கருங் கூந்தலுக்குப் பின்புறம் சென்று மறைந்த பந்து, அழகுடைய முகத்தின் முன்னே வரும்.
3) தலைக்கு மேலே சென்ற பந்து, மார்பில் அணிந்த மாலைக்கு நேரே வந்து சேரும்.
4) இன்னும் தலை மாலைக்கு மேலே உயரப் போன பந்து, கை விரல்களுக்கு இடையிலும் வந்து சேரும்.
5) இடையில் மாலை தொடுத்தும், குங்குமம் அணிந்தும் படிப்படியாக உயரும்படி பந்தினை அடித்தும், தன்னைச் சுற்றி வட்டமாக வரும்படி பந்தினை எறிந்தும் மயில் போலப் பொங்கியும், வண்டும் தும்பியும் தேன் உண்ணாமல் பாட, வலிமையோடு பந்தாடினாள் விமலை.அங்கை யந்த லத்த கத்த ஐந்து பந்த மர்ந்தவை
மங்கை யாட மாலை சூழும் வண்டு போல வந்துடன்
(பாடல் - 65)(அங்கை அம் தலத்த = அழகிய உள்ளங்கையினிடத்தில்)
இப்பகுதியில், விமலை பந்தாடிய விதம் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது. பாடலின் சந்தம் (ஓசை) பந்தாடும் அசைவுகளை உணர்த்துவது போல் உள்ளது அல்லவா?
சீவகனும் விமலையும் தம்முள் மாறி மாறிக் காதல் நோயால் அவதியுற்றனர். விமலையின் அழகினைப் பார்த்துத் திகைப்புடன், அவள் தந்தை சாகர தத்தன் கடையருகில் சீவகன் நின்றான். அப்போது விற்காமல் தேங்கிக் கிடந்த பழஞ் சரக்குகளெல்லாம் ஆறு கோடிப் பொன்னுக்கு மேல் இலாபத்துடன் விற்று விட்டது. இதனைக் கண்ட விமலையின் தந்தை சாகர தத்தன், சீவகனைக் கண்டு மகிழ்ந்தான். அவனைத் தன் மாளிகையில் இருத்தி, இந்த இல்லம் இனி இருப்பிடம் என்று கூறினான். “எனக்கும் என் வாழ்க்கைத் துணைவி கமலைக்கும் பிறந்த அழகுப் பெண்ணே விமலை என்பாள். அவள் பிறந்த பொழுது அவளின் எதிர்கால வாழ்வைக் கணித்துக் கூறினான் ஒரு சோதிடன். "பன்னிரண்டாம் வயதில் இம்மங்கைக்குரிய மணவாளன், உன் கடையின் அருகே வருவான். அப்போது தேங்கிய பொருட்கள் எல்லாம் விற்று விடும்" என்பதே அவன் கணித்துக் கூறிய செய்தியாகும்" என்றான்.
திருமல்க வந்த திருவேயெனச் சேர்ந்து நாய்கன்,
செருமல்கு வலோய்க் கிடமால் இதுவென்று செப்ப
(பாடல் - 86)மங்கைக் குரியான் கடையேறும்வந் தேற லோடும்
வங்கந் நிதிய முடன்வீழுமற் றன்றி வீழா
தெங்குந் தனக்கு நிகரில்லவ னேற்ற மார்பம்
நங்கைக் கியன்ற நறும்பூ வணைப்பள்ளி யென்றான்.
(பாடல் - 89)(திருமல்க = செல்வம் பெருக; திருவே = செல்வமே; நாய்கன் = வணிகன்; செரு = போர்; வலோய்க்கு = வேலினை உடைய உனக்கு)
“சோதிடன் கூறிய செய்தி, இன்று நடந்ததால் நீயே என் மகளுக்குக் கணவனாவாய், இவளைத் தழுவி இன்பநலம் பெறுக" என்றும் கூறினான் சாகர தத்தன். புதுமனையில் இருத்தி மங்கல இசை முழங்கத் திருமணம் புரிவித்தான். இருவரும் ஒன்று கூடிய அன்பால் இரு உடலும் ஓர் உயிரும் ஆனார்கள். பின் சீவகன் விமலையுடன் இரண்டு நாட்கள் கூடியிருந்து, பின் சோலையில் தங்கியிருந்த தன் தோழர்களைக் காணவேண்டும் என்று கூறிப் பிரிந்து சென்றான்.
இப்பகுதி, விமலைக்குத் திருமணம் நடந்த விதம் பற்றி உணர்த்துகின்றது.