தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6:0-பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை

    தனிப் பாடல்களாக இருந்த சங்கத் தமிழ், கதைபொதி பாடல்களாக வளர்ந்து, தொடர்நிலைச் செய்யுள்கள், காப்பியம், புராணம் என்பனவாக விரிந்தது. புராணத்திற்கும், காப்பியத்திற்கும் மிகுதியான வேறுபாடுகள் இல்லை எனலாம். பெருங்காப்பிய இலக்கணங்களில் பெரும்பாலானவற்றைத் தனக்குரியதாகக் கொண்டு பழமையான வரலாற்றின் அடிப்படையில் அமைந்த நூல் புராணம் எனப்படும். சமயக் கருத்துகளை வலியுறுத்தவே காப்பியங்களும், புராணங்களும் எழுந்தன. கி.பி. 2-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய சமயப் போராட்டங்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் நிலவின. இடைக்காலத்தில் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு) தோன்றியது பக்தி இயக்கம். இவ்வியக்கம் தமிழிற்குப் பல பக்தி இலக்கியங்களைத் தந்தது. அவற்றுள் சைவ இலக்கியங்களின் சாரமாகத் திகழ்வது சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணமாகும். இந்நூல் இறைவனுக்கும் மக்களுக்கும் தொண்டு செய்த 63 சைவ அடியார்களான நாயன்மார்கள் சிறப்பையும், அவர்களின் வரலாற்றையும், தொண்டின் சிறப்பையும் விளக்குகின்றது. சைவத் திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாகப் போற்றப்படுகின்றது.

    சுந்தரரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட இந்நூலில், பக்தியின் பெருமை, மக்களின் வாழ்க்கை முறை, ஆட்சி முறை, தமிழ்நாட்டின் திருத்தலங்கள் ஆகிய பல செய்திகள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. தமிழில் தோன்றிய மற்ற காப்பியங்களில் வெளிப்படையாகக் காணமுடியாத ஒரு தனிச் சுவையாகப் பக்திச் சுவையைக் கொண்டும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டும் பாடப்பட்டதே இந்நூல் எனலாம். இத்தகு சிறப்பினைக் கொண்ட புராண நூலைத் தேசிய இலக்கியம் என்று ஆன்றோர்கள் பாராட்டியுள்ளனர். இப்பெரிய புராணத்தில் இலைமலிந்த சருக்கத்தில் கண்ணப்ப நாயனார் புராணம் விளங்குகின்றது. இப்பகுதியில் திண்ணனாரின் தோற்றம், பக்திச் சிறப்பு, வழிபாட்டு முறை, இறைவனுக்குக் கண்ணை அப்பிக் கண்ணப்பராதல் முதலான பல செய்திகளைக் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 12:25:42(இந்திய நேரம்)