Primary tabs
6.3 இடம்பெறும் நிகழ்ச்சிகள்
நாயனாரின் வாழ்க்கையையும் அதில் ஏற்பட்ட மாற்றத்தையும் விரிவாகக் காணலாம்.
பொத்தப்பி எனும் மலைநாட்டில் உள்ள உடுப்பூர் என்னும் ஊரினை வேடர் குலத் தலைவன் நாகன் என்பான் ஆட்சி செய்து வந்தான். அவன் மனைவி தத்தையாவாள். அவர்களுக்கு நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறு இல்லாமல் இருக்கவே, முருகனுக்கு விழா எடுத்தனர். அம்முருகனின் அருளால் பிறந்தவனே திண்ணன். திண் என்று இருந்த காரணத்தால் தன் மகனுக்குத் தந்தையாகிய நாகன் திண்ணன் என்று பெயரிட்டான். வேடுவர் குல மரபிற்கு ஏற்ப வில், வேல், ஈட்டி, முதலான ஆயுதங்களைக் கற்றுத் தேர்ந்து கையில் ஏந்தியவன், திண்ணன், அவன் கரிய நிறமுடையவன். உரத்த குரலுடையவன். தலை மயிரைத் தூக்கிக் கட்டியவன். தலையிலே மயிற்பீலி அணிந்தவன். சங்கு மணிகளும், பன்றிக் கொம்புகளும் கோத்த மாலையும், புலித் தோலினால் செய்யப்பட்ட தட்டை வடிவமான வெற்றி மாலையினையும் மார்பிலே அணிந்தவன். இடையிலே புலித் தோல் ஆடையணிந்தவன், குறுவாளையும் வைத்திருப்பவன். கால்களில் வீரக் கழல் பூண்டு, தோல் செருப்பு அணிந்தவன். வேட்டையாடுவதற்கு நாயினைத் துணையாகக் கொண்டவன்.
தந்தை நாகனுக்கு வயது முதிர்ந்தது. அதனால் நாட்டுக்கு இடையூறு விளைவிக்கும் விலங்குகளை வேட்டையாட வேண்டி, தன் மகனை வேடர் தலைவனாக்கினான் நாகன். இதனைக் கண்ட தேவராட்டியும் நலம் சிறக்க எனக் கூறித் திண்ணனாரைப் பாராட்டி வாழ்த்திச் சென்றாள். ஒருநாள் நாணன், காடன் என்னும் இரு நண்பர்களோடு வேட்டைக்குச் சென்றார் திண்ணனார். காட்டில் திரிந்த வலிய பன்றியைத் தம் குறுவாளால் வீழ்த்தினார். அருகில் ஓடும் பொன்முகலி ஆற்றினையும் வானளாவி நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார். நண்பர்கள், “இம்மலையில், குடுமித் தேவர் இருக்கிறார். அவரைக் கும்பிடலாம் வா" என்றார்கள். திண்ணனாருக்கு மலையேறும் போதே புதுவிதமான இன்பமும், உணர்வும் உண்டாயின.
மலையேறிய திண்ணனார் பேருவகை கொண்டு ஓடிச் சென்று, காளத்தி நாதரைக் கட்டித் தழுவினார். ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். மேலும் கன்றை ஈன்ற பசுவைப் போலப் பிரிய மனமின்றிச் சுழன்று சுழன்று இறைவனிடமே நின்றார். பின்பு பொன் முகலியாற்றங் கரையினருகில் காடன், தீயில் இட்டு பக்குவப்படுத்திய பன்றி இறைச்சியினைத் தம் வாயினால், சுவையும் பதமும் பார்த்துப் பின் ஒருகையில் அதனை எடுத்துக்கொண்டு, மற்றொரு கையில் வில்லம்பு ஏந்தினார். இறைவனது திருமஞ்சனத்திற்காகப் பொன்முகலியாற்று நீரை வாயில் நிறைத்துக்கொண்டு, பூசனைக்காகப் பூங்கொத்துகளைத் தம் தலையில் செருகிக் கொண்டு, மலையுச்சிக்கு வந்தார். குடுமித் தேவரின் மேல் இருந்த சருகுகளைச் செருப்பணிந்த தம் பாதங்களால் விருப்பமுடன் தள்ளினார். தம் வாயிலிருந்த நீரால் திருமஞ்சனம் செய்தார். தம் தலையில் இருந்த மலர்களைத் திருமுடி மீது சார்த்தி, பன்றி இறைச்சியினைத் திருவமுதாகப் படைத்து மகிழ்ந்தார்.
குடுமித் தேவருக்கு இரவில் துணை யாருமில்லை என்று எண்ணி, இரவு முழுவதும் அவரே கையில் வில்லேந்திக் காவல் புரிந்தார். காலை புலர்ந்தது. திண்ணனார், காளத்தி நாதருக்குத் திருவமுது தேடிவரப் புறப்பட்டார்.
6.3.4 சிவபிரானின் அருள்வாக்குப் பெறல்
திண்ணனார் சென்றவுடன் வழக்கம் போல் சிவ கோசரியார் பூசை செய்ய வந்தார். மேலுள்ள இறைச்சி முதலானவற்றை நீக்கி ஆகம முறைப்படி பூசை செய்துவிட்டுச் சென்றார்.
திண்ணனார் முன் போலவே வேட்டையாடி விலங்குகளைத் தீயில் சுட்டு அமுதாக்கிப் படைத்திட வந்தார். தொடர்ந்து, சிவ கோசரியார் வழிபட்டுச் சென்றவுடன், திண்ணனார் வந்து அவற்றை நீக்கி வழிபடுவதும் தொடர்ந்தது. தினமும் சிவன் திருமேனி மீது இறைச்சி இருப்பது கண்டு சிவ கோசரியார் வருந்தினார். மனம் கசிந்து இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார். அவரது கனவில் சிவபிரான், நீ கூறும் மறைமொழிகள் அவன் அன்பு மொழிகளுக்கு ஈடாகாது, நீ வேள்வியில் தரும் அவியுணவைக் காட்டிலும் அவன் தரும் ஊனமுது இனியது என்றும் இந்நிகழ்ச்சியினை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக என்றும் கூறினார்.
அவனுடைய வடிவுஎல்லாம் நம்பக்கல் அன்புஎன்றும்
அவனுடைய அறிவுஎல்லாம் நமைஅறியும் அறிவுஎன்றும்
அவனுடைய செயல்எல்லாம் நமக்குஇனிய வாம்என்றும்
அவனுடைய நிலைஇவ்வாறு அறிநீஎன்று அருள்செய்தார்.(பெரி: க. பு.: 157)
என்றும் திண்ணனாரின் பக்திச் சிறப்பைச் சிவபிரான் கூறினார்.ஆறாம் நாள், திருக்காளத்திப் பெருமான் திண்ணனார் தம் மீது கொண்டுள்ள அன்பின் பெருமையைக் காட்ட, தமது வலக்கண்ணில் இருந்து உதிரம் பெருகச் செய்தார். இதனைக் கண்ட திண்ணனார் தாம் செய்வதறியாமல் திகைத்தார். பூசைக்காகக் கொண்டு வந்த பொருள்கள் சிதறின. தம் கையால் இரத்தம் கசிவதைத் துடைத்தாலும் நிற்கவில்லை. உடனே பச்சிலைகளைத் தேடிக் கொண்டுவந்து தடுத்துப் பார்த்தார். நிற்கவில்லை.
இந்த நிலையில் திண்ணனார் அடைந்த துயரத்தையும், தவிப்புகளையும் சேக்கிழார் உணர்ச்சி மிக்க கவிதையாய் வடித்திருக்கிறார்.
பாவியேன் கண்ட வண்ணம்
பரமனார்க்கு அடுத்தது என்னோ
ஆவியின் இனிய எங்கள்
அத்தனார்க்கு அடுத்தது என்னோ
மேவினார் பிரிய மாட்டா
விமலனார்க்கு அடுத்தது என்னோ
ஆவது ஒன்று அறிகி லேன்யான்
என்செய்வேன் என்று பின்னும்...(க.புராணம் : 174)
(பரமனார், அத்தனார், விமலனார் = சிவபிரானின் சிறப்புப் பெயர்கள்; மேவினார் பிரிய மாட்டா = சேர்ந்தவர்கள் பிரிய இயலாத பேரன்பு கொண்ட)
இனி என்ன செய்வது என்று சிந்தித்து நின்றார். அப்பொழுது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது. உடனே அம்பினால் தமது வலக்கண்ணை அகழ்ந்தெடுத்து, ஐயன் திருக்கண்ணில் அப்பினார். இரத்தம் நின்றுவிட்டது. இதைக் கண்டு மகிழ்ந்து ஆடினார். அடுத்து, சிவபிரான் தமது இடக்கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தார். அதைக் கண்ட திண்ணனார், ‘இதற்கு யான் அஞ்சேன், முன்பே மருந்து கண்டுபிடித்துள்ளேன். அதனை இப்பொழுதும் பயன்படுத்துவேன். எனது இன்னொரு கண்ணையும் அகழ்ந்தெடுத்து அப்பி ஐயன் நோயைத் தீர்ப்பேன்’ என்று எண்ணினார். அடையாளத்தின் பொருட்டு, காளத்தி நாதர் திருக்கண்ணில் தமது இடக்காலை ஊன்றிக் கொண்டு, மனம் நிறைந்த விருப்புடன் தமது இடது கண்ணைத் தோண்டுவதற்கென அம்பை ஊன்றினார். குடுமித் தேவர் நில்லு கண்ணப்ப! என்று மூன்று முறை கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார். மேலும், என்றும் என் வலப்பக்கம் இருக்கக் கடவாய் என்று பேரருள் புரிந்தார். இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவனருளில் மூழ்கித் திளைத்தார்.
இறைவனுக்கே தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் அன்று முதல் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.