Primary tabs
-
5.4 அகராதிகளின் செயற்பாடு
கலைச் சொல் அல்லது துறை சார்ந்த சொல்லாக்க அகராதிகளுக்கும் பொது அகராதிகளுக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் உண்டு.
வழக்கிறந்த சொற்கள், இலக்கியச் சொற்கள், நடைமுறைச் சொற்கள் என்று சொற்களின் தொகுப்பாகப் பொது அகராதிகள் விளங்குகின்றன. மேலும், ஒரு சொல்லின் வரலாறு, பொருள் பற்றி அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன.
சொல்லாக்க அகராதிகள், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அல்லது துறையினர் நலன் கருதி உருவாக்கப்படுகின்றன. சான்றாக, அறிவியல் துறை அகராதிகள், பாட நூல்கள் எழுதுவோர், பேராசிரியர்கள், மாணவர்கள், அறிவியல் வல்லுநர்களின் பயன்பாட்டினுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சொல்லாக்கங்களைச் செய்திடவல்ல வல்லுநர்களின் கடும் உழைப்பினால் அகராதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் அரசியல், அறிவியல், பொருளியல், பண்பாட்டுச் சூழலுக்கேற்பச் சொல்லாக்கங்களில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப அகராதிகளில் இடம்பெறும் சொற்கள் மாறிக் கொண்டேயிருக்கும் தன்மையுடையன. எளிமை, சொற்செட்டு, நிலைபேறாக்கம் காரணமாகவும் சொற்களின் அமைப்பு மாற்றம் பெறத்தக்கது. எனவே அகராதியின் முந்தைய பதிப்பில் இடம் பெற்றிருந்த சில சொற்கள் முழுமையாக நீக்கப்பட நேரிடும். சில சொற்கள் சுருக்கப்படவோ அல்லது விரிவாக்கப்படவோ நேரிடலாம்.
துறைசார்ந்த கட்டுரைகளைத் தமிழில் எழுதிட முயலுவோர்க்குச் சொல்லாக்க அகராதிகள் கையேடாக விளங்குகின்றன.