Primary tabs
-
5.5 சொல்லாக்க அகராதிகளில் சில சிக்கல்கள்
சொல்லாக்க அகராதிகள், அடிப்படையில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குகின்றன. எனினும் சொல்லாக்கமானது வளர்ந்து வரும் துறையாதலாலும், நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாமையினாலும், சீர்மையான போக்கு இல்லை. இதனால் அகராதிகளைக் கையாளுகின்றவர்களுக்குக் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆட்சிச் சொல் அகராதியையும் பிறதுறைச் சிறப்புச் சொல் அகராதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்திட்ட மொழி ஆய்வாளர் இ.மறைமலை பின்வரும் சிக்கல்களைக் குறிப்பிடுகின்றார்:
(1)பல்பொருள் ஒரு சொல்(2)ஒருபொருள் பல சொல்(3)பொருள் மயக்கம்(4)நீண்ட தொடர்களைத் தவிர்த்தல்(5)மற்றும் - சொல்லாட்சி(6)இடைக்கோடு (Hyphen) பெறும் இடம்(7)ஒருங்கிணைவு இன்மை(8)சந்தி விதிகளும் சொல்லாக்கமும்(9)நிலைபேறாக்கம்(10)மொழிமாற்றம்5.5.1 பல்பொருளும் ஒரு பொருளும்
வேறுபட்ட பொருளுடைய பல ஆங்கிலச் சொற்களுக்கு ஒரே தமிழ்ச் சொல்லைத் தருவது குழப்பத்தையே தரும். எனவே வேறுபட்ட தமிழ்ச் சொல்லாக்கங்களை உருவாக்கிட வேண்டும்.
Fathom, Size, Measurement, Quantity, Scale, Dimension, Quota ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு ஆட்சிச் சொல்லகராதியில் அளவு என்ற சொல் தரப்பட்டுள்ளது. இப்போக்கு எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.
ஒரு ஆங்கிலச் சொல்லுக்குப் பல பொருள்களைத் தரும் பல சொற்களைப் பயன்படுத்தும் போக்கு தமிழ் ஆட்சிச் சொல்லகராதிகளில் உள்ளது.
சான்று :
Censor Board-தணிக்கைக் குழுDistrict Board-மாவட்டக் கழகம்Panchayat Board-ஊராட்சி மன்றம்Housing Board-வீட்டுவசதி வாரியம்இங்கு Board என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் குழு, மன்றம், கழகம், வாரியம் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. Board என்பது தனிச்சொல் அன்று. கூட்டுச் சொல்லின் ஒரு பகுதி என்பதால் பல வகையான சொல்லாக்கம் குழப்பத்தைத் தரவில்லை. எனினும் இத்தகைய சொல்லாக்கங்களில் சீர்மையைக் கையாள வேண்டும்.
சொல்லாக்கத்தின்போது, பொருளில் குழப்பம் தரும் சொற்களைக் கூடியவரையிலும் தவிர்த்தல் வேண்டும்.
Third Grade Draftsman என்ற பணிநிலைக்கு மூன்றாம் தர வரைவாளர் என்ற சொல்லாக்கம் ஆட்சிச் சொல் அகராதியில் காணப்படுகிறது. தமிழில் மூன்றாம் தரமானது என்றால் மட்டமானது என்று பொருள். எனவே பொருள் மயக்கம் தரும் அச்சொல்லைத் தவிர்க்க வேண்டும். தரம் என்ற சொல்லினை நீக்கிவிட்டு நிலை என்ற சொல்லைச் சேர்க்கும்போது மூன்றாம் நிலை ஆய்வாளர் என்று சொல்லாக்கம் பெறுகிறது. இச்சொல்லாக்கத்தின் பொருள் மயக்கம் இல்லை.
5.5.3 நீண்ட தொடர்களைத் தவிர்த்தல்
சொல்லாக்க நெறிமுறைகளைப் பின்பற்றாமல் சொல் விளக்கம் கூற முயலும்போது நீண்ட தொடர்கள் உருவாகி விடுகின்றன.
ஆட்சிச் சொல்லகராதியில் Rinse என்பதற்கு திரவத்தால் கழுவு எனவும், Panel என்பதற்கு தேர்ந்த பெயர்ப்பட்டியல் எனவும் சொல்லாக்கங்கள் உள்ளன. இவ்வாறு உருவாக்கப்படும் நீண்ட தொடர்களைத் தவிர்க்க வேண்டும்.
Rinse என்பதனைக் கழுவு எனவும் Panel என்பதனைப் பெயர்ப் பட்டியல் எனவும் குறிப்பிடுதலே போதுமானது.
- ‘மற்றும்’ சொல்லாட்சி
உம்மைத் தொகைகளிலும் உம்மைத் தொடர்களிலும் மற்றும் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது and என்ற ஆங்கிலச் சொல் வழக்கினைப் பின்பற்றியதாகும். இத்தகைய வழக்கானது தமிழ் மரபினுக்குப் பொருந்தாத ஒன்றாகும்.
ஆட்சிச் சொல்லகராதியில் Demand Collection and Balance Statement என்ற தொடருக்கு, கேட்பு வழி தண்டல் மற்றும் நிலுவை அறிக்கை என்று சொல்லாக்கம் தரப்பட்டுள்ளது.
And வருமிடத்தில் மற்றும் என்று தமிழாக்குவதால் தொடரின் இலக்கண அமைப்பு சிதைந்து விடுகிறது. கேட்பு தண்டல் நிலுவை அறிக்கை எனும் தொடர் வேற்றுமைசார் உம்மைத் தொகை என்ற இலக்கணத்துள் அடங்கும். கேட்பையும் தண்டலையும் நிலுவையையும் பற்றிய அறிக்கை என இத்தொகை விரிவது இச்சொல்லைப் பொருள் பொருத்தம் உடையதாக்குகிறது. ஆனால் கேட்பு, தண்டல் மற்றும் நிலுவை அறிக்கை என்றால் எவ்வாறு பொருள் விரியும்? இது போன்ற உம்மைத் தொடர்களில் மற்றும் என்பது தேவையின்றிச் சேர்க்கப்படுகின்றது.
5.5.4 இடைக்கோடு (Hyphen) பெறும் இடம்
ஆங்கிலத்தில் Cum என்ற இணைப்புச் சொல் மிகுதியாக வழங்குகிறது. இரு செயல்களுக்குப் பயன்படும் ஒரே பொருளையும், இரு பணிநிலைகளை வகிக்கும் அலுவலரையும் குறிக்க இந்த cum பயன்படுகிறது. இந்த cum என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் இதுவரை உருவாக்கப்படவில்லை. இந்நிலையில் அதனைக் குறிக்க இடைக்கோடிட்டு எழுதலாம்.
சான்று :
Clerk cum Typist - எழுத்தர்-தட்டச்சர்
ஆட்சிச் சொல்லகராதியில் cum வருகிற எல்லா இடங்களிலும் இடைக்கோடு இடப்படவில்லை.
ஆட்சிச் சொல்லகராதியில் Sweeper Cum Watchman என்ற தொடருக்குப் பெருக்கும் காவற்காரர் எனவும் Nurse Cum Matron என்ற தொடருக்கு செவிலிப் பணி மூதாய் என்றும் சொல்லாக்கம் தரப்பட்டுள்ளது.
ஒரே விதமான அமைப்புடைய ஆங்கிலச் சொற்களுக்குப் பலவிதமான அமைப்புகளில் சொல்லாக்கும் நிலையைத் தவிர்க்க வேண்டும்.
5.5.6 சந்தி விதிகளும் சொல்லாக்கமும்
தமிழில் சந்தி விதிகள் குறித்து மரபு வழிப்பட்ட இலக்கண நூல்கள் ஏற்கனவே விளக்கியுள்ளன. எனினும் மாறிவரும் மொழிப் பயன்பாடு புதிய சந்தி விதிகளைக் கோருகின்றது. ஆட்சிச் சொல்லகராதியில் இடம்பெற்றுள்ள பின்வரும் சொற்களில் சந்தி விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை.
Corridor-நடைக்கூடம்Pathway-நடை பாதைFoot path-நடை பாதைFoot Bridge-நடை பாலம்Bridge, foot-நடைப்பாலம்Bridle path-(மலை) நடைப்பாதைநடைபாதை என வந்துள்ள இடங்களில், ஒரு இடம் தவிர, ஏனைய இடங்களில் வல்லெழுத்து மிகாமல் சொல்லாக்கப்பட்டுள்ளன. இச்சொற்கள் யாவும் நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைகள் ஆகும். எனவே வல்லெழுத்து மிகும் என்ற இலக்கண விதியின்படி நடைப்பாதை என்ற சொல்லாக்கத்தினையே எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டும்.
நிலைபேறாக்கம் என்பது குறிப்பிட்ட மொழிபேசும் மக்களால் ஒரு குறிப்பிட்ட மொழிவகை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, செல்வாக்குப் பெறும் செயல்முறை ஆகும். ஆட்சிச் சொல்லகராதிகளில் இடம் பெற்றுள்ள சொல்லாக்கங்களின் நிலைபேறாக்கத்தினைப் பொறுத்தவரையில் பின்வரும் போக்குகள் காணப்படுகின்றன:
(1)பிறமொழிச் சொற்களை நீக்கித் தமிழ்ச் சொற்களை நிலைப்படுத்துதல்.(2)தமிழ் ஒலியமைப்பினுக்கு ஏற்பச் சொற்களை அமைத்தல்.(3)பொருள் விளக்கமும் எளிமையும் மிக்க சொற்களை அமைத்தல்.(4)சுருக்கமான சொல்லாக்கங்களையே கையாளுதல்.1957ஆம் ஆண்டில் முதன் முதலாக வெளியிடப்பட்ட ஆட்சிச் சொல்லகராதியில் இடம் பெற்றுள்ள சொற்கள், 1962, 1971ஆம் ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுள்ளன. இத்தகைய மாற்றங்களுக்கு, 1961இல் அறிமுகப்படுத்தப்பட்ட சொற்கள் மக்களிடமும் துறை வல்லுநர்களிடமும் பெற்ற ஏற்பு முக்கிய காரணமாகும். இது நிலைபேறாக்கத்தின் சிறப்புக் கூறு ஆகும்.
5.5.8 சொல்லாக்கமும் மொழிமாற்றமும்
ஒரு மொழியின் வளர்ச்சியென்பது, மாறிவரும் சமுதாயப் பண்பாட்டு மாற்றங்களுக்கேற்ப, அம்மொழியும் மாற்றம் பெறுவதை அடிப்படையாகக் கொண்டது ஆகும். சமுதாயச் சீர்திருத்த இயக்கங்கள், புரட்சி, சிறந்த இலக்கியப் படைப்புகள், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றன மொழியில் மாற்றத்தினைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் ஆகும். ஆட்சிச் சொல்லகராதிகளில் காணப்படும் மொழிமாற்றங்கள் பின்வருமாறு :
(1)ஒலியமைப்பில் மாற்றம்(2)சொல்லமைப்பில் மாற்றம்(3)தொடரமைப்பில் மாற்றம்(4)பொருள் புலப்பாட்டில் மாற்றம்மரபு வழிப்பட்ட இலக்கண நூற்கள் வலியுறுத்தும் விதிகளுக்கு மாறாகப் புதிய வகைப்பட்ட சொல்லாக்கங்கள் உருவாக்கப்படுவதனால் மொழியானது மாற்றமடைகின்றது. புதிய கண்டுபிடிப்புகள், புதிய கருத்தியல்கள் போன்றவற்றைத் தமிழில் சொல்லாக்கம் செய்யும்போது, மொழியமைப்பில் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்கவியலாதது. எனவே இத்தகைய மாற்றங்களை இனங்கண்டு அவற்றுக்கேற்ப மொழியின் இலக்கண அமைப்பை மாற்றி விரிவுபடுத்துதல் இன்று சொல்லாக்கத்தில் ஈடுபடுவோரின் முக்கியமான பணி ஆகும்.