தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 1 Main-பாட முன்னுரை




  • தமிழகத்தில் வேரூன்றிய சமண சமயம் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெறத் தொடங்கியது. தமிழ் மக்களோடு உறவாடிய சமணத் துறவோர் மக்களிடையே தம் சமயக்கருத்துகளைப் பரப்ப அவர்தம் தாய்மொழியையே பயன்படுத்தலாயினர். அதனால் விரைவில் மக்களை அவர்களால் ஈர்க்க முடிந்தது. இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் அவர்கள் தொண்டு சிறப்புற்றது; தமிழ் மொழியும் வளம் பெற்றது. இந்தப் பாடத்தில் சமணர் இயற்றிய இலக்கண நூல்களையும் அவை தமிழுக்கு எப்படி வளம் சேர்த்தன என்பதையும் அறிந்து கொள்ளலாம். அத்துடன் அவர்கள் எழுதிய நிகண்டுகள், உரை நூல்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    இலக்கணங்கள் படைக்கக் காரணம்

    இலக்கியம் முதலான பிற துறைகளைவிட இலக்கணத் துறையில் சமணர்களின் தொண்டு வியப்பை அளிக்கிறது. இதற்கான காரணம் யாது? சமண சமயம் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டோடு வாழவேண்டுமென்ற கோட்பாடுடையது. ஆகவே, அது அறநெறிகளை வகுத்தது. அந்த நெறிகளின் எல்லைக்குள்ளே வாழ வேண்டும் என்று விதித்தது; வாழ்க்கையை, அதன் சுகங்களை அளவுக்கு மீறி அனுபவிக்க வேண்டாமென்று அறிவுறுத்த விரும்பியது; இதன் அடிப்படையிலேயே யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகியவற்றை வலியுறுத்திப் பேசியது சமண சமயம். மொழி மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் கருவியாக அமைவதால், அதற்கும் ஒழுங்கு, வரன்முறை, நெறிமுறை முதலியன வேண்டும் என்று நினைத்து, அந்தச் சமயத்தைச் சார்ந்த சான்றோர் இலக்கண நூல்களை இயற்றினர் எனக் கருதலாம். கட்டுப்பாட்டையும் விதிமுறைகளையும் பின்பற்றுவதில் பெரும் ஈடுபாடு காட்டினாலும் கால மாறுதலுக்கு ஏற்ப விரித்தும் புதியன படைத்தும் பழையன விடுத்தும் நூல்களைப் படைக்க அவர்கள் முன்வந்ததை, அவர்கள் படைத்த இலக்கியங்களைப் பார்க்கும் போது நாம் நன்கு உணர முடியும்.

    இலக்கணம் படைக்க வேண்டுமாயின் அதற்கு முன்அமைந்த இலக்கியங்களைக் கண்டறிய வேண்டும். அப்போதுதான் தகுதி வாய்ந்த இலக்கண நூல்களைக் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்பப் படைக்க முடியும். இந்தப் பேருண்மையை நன்கு அறிந்திருந்தனர் சமணச் சான்றோர். அதனால்தான் தொல்காப்பியம் தோன்றிப் பல நூற்றாண்டுகளுக்குப்பின் தோன்றிய நன்னூல் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினான என்று பேசுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:54:17(இந்திய நேரம்)