தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 1 Main-உரைகள்-பகுதி 3.3



  • பழங்காலத்தில் நூல்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆசிரியர் - மாணவர் என்னும் தொடர்பு இலக்கியம் பயில்வதற்கு ஏற்றதாக அமைந்தது. காலம் செல்லச் செல்ல மூல நூலை (செய்யுள் வடிவத்தை)ப் படித்துப் பொருளை அறிந்து கொள்வது என்னும் வழக்கம் குறைந்து வரலாயிற்று. போதிய பயிற்சி இல்லாமையே இதற்குக் காரணம். பழைய நூல்களை நன்கு விளங்கிக் கொள்வதற்கு உதவியாக நூலுக்கு விரிவாகப் பொருள் கூறினர் உரையாசிரியர்கள். உரை என்பது சொல்லுக்குப் பொருள் கூறுவதாக மட்டும் அமையாமல், விளக்கம் தந்து, அதன் நயத்தையும் எடுத்துக் காட்டியது.

    இலக்கண இலக்கியங்களைப் படைத்த சமணச் சான்றோர் சிறந்த உரையாசிரியர்களாகவும் விளங்கியுள்ளனர். அவர்கள் உரையில்லையேல் பல இலக்கிய இலக்கணங்களை உரிய முறையில் புரிந்து கொள்ள இயலாமற் போயிருக்கும். உரை எழுதுபவர்கள் பல துறை வல்லுநராக இருக்க வேண்டும். கூர்மையான அறிவு உடையவராகவும் அமையவேண்டும். சமண உரையாசிரியர்களின் திறனை அவர் தம் உரைகளே எடுத்துரைக்கும்.

    3.3.1 இலக்கண உரைகள்

    பல இலக்கணங்களை இயற்றிய சமணப் பெரியோர்கள் இலக்கியம் இலக்கணம் ஆகியவற்றிற்கு உரை எழுதி மேலும் வளம் சேர்த்தனர். தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரணர். முதல் உரையாசிரியர் இவரே. அதனால் இவரை உரையாசிரியர் என்ற பெயராலேயே அழைப்பர். இவரைத் துறவி என மயிலைநாதர் சுட்டிக் காட்டுகின்றார். நன்னூலுக்கு உரைகண்ட மயிலைநாதரும் சமண சமயத்தைச் சேர்ந்தவர். இளம்பூரணர் உரை, பின்வந்த உரையாசிரியர்கள் பலராலும் மேற்கோளாகக் காட்டப்பட்ட சிறப்பை உடையது.  இவர் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

    உரைமரபு

    சமண இலக்கண நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகள் பெரும்பாலன நூலாசிரியர் காலத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றன. யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை இவ்வகையுள் அடங்கும். இவற்றுக்கு உரை எழுதியவர் குணசாகரர். நேமிநாதம், வச்சணந்திமாலை ஆகிய நூல்களுக்கு உரை வகுத்தவர் குணவீரபண்டிதர்.


    உரையை நூலாசிரியரைத் தவிர்த்துப் பிறர் எழுதுவது மரபு. இம்மரபு இக்காலத்தில் மாறியது.


    நாற்கவிராச நம்பி, நம்பியகப் பொருளுக்கு உரைகண்டார். நூல் எழுதிய ஆசிரியரே அதற்குரிய உரையையும் எழுதுதல் புதுநெறி. இந்நெறியை குணவீர பண்டிதரும் நாற்கவிராச நம்பியும் மேற்கொண்டார்கள். பின்வந்த உரையாசிரியர்களுக்கு இம்முறை முன்னோடியாக அமைந்தது.


    3.3.2 இலக்கிய உரைகள்

    இலக்கணங்களுக்கு மட்டுமன்றி இலக்கியத்திற்கும் உரை கண்டவர்கள் சமணச் சான்றோர்.

    அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்குச் சிறந்ததோர் உரை எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தில் வரும் இசை, நடனம் முதலிய நுட்பங்களை விளக்கிக் கூறுதற்குப் பெரிதும் உதவுவது இவரது உரை. இவரது உரை, சொற்பொருள் கூறி நிற்பதில்லை. பொழிப்பைத் திரட்டிச் சிறப்பு உரையும் தருவது. இவர் கொங்கு மண்டலத்தைச் சார்ந்தவர். இவரைப் பாதுகாத்தவரும் சமணர். இவரது உரை விளக்கத்தினின்றும் இவர் சமணராக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். ஆயினும் சிலர் இவர் சைவர் எனக் கூறுவர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

    நச்சினார்க்கினியர் மதுரையில் பிறந்த வைதிக அந்தணர். தொல்காப்பியம், சிந்தாமணி, கலித்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களுக்கு முழுமையாகவும், குறுந்தொகையில் சில பாடல்களுக்கும் உரை எழுதிச் சிறப்புப் பெற்றவர். உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் என்று பாராட்டப்படுபவர்.

    சிந்தாமணிக்கு உரைகாண, சில காலம் சமணராகி, சமணர்களிடம் அதன் உரையை அறிந்து எழுதினார் என்றும், சமணர்களாலேயே அவ்வுரை பாராட்டப் பட்டது என்ற ஒரு செய்தியும் வழங்குகிறது.

    குறளுக்குப் பதின்மர் உரை எழுதியதாகப் பழம்பாடல் ஒன்று குறிக்கிறது. ஐவரின் உரை கிடைக்கிறது. ஐவரின் உரை கிடைக்கவில்லை. அந்த ஐவரில் ஒருவர் தருமர் என்றும் அவர் சமண சமயத்தார் எனவும் குறிப்புகள் உணர்த்துகின்றன. ஆயின் அவர் குறளுக்கு எழுதிய உரை கிடைக்கவில்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 15-06-2018 12:37:52(இந்திய நேரம்)