தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

 • 6.5 தொகுப்புரை

  ‘காலந்தோறும் கவிதையின் நோக்கும் போக்கும்’ என்னும் தலைப்பில் உருவம், உள்ளடக்கம், உத்திமுறை என்னும் மூவகைகளில் கவிதையின் நிலை குறித்து அறிந்தோம்.

  அகமும் புறமும் ஆகிய இருவகைப் பட்டனவாய்ச் சங்க இலக்கியங்கள் விளங்கின. உள்ளதை உள்ளவாறு பாடும் நிலையும், வருணனை முறையும் அவற்றில் இடம்பெற்றுள்ளன. 3 அடி முதல் 782 அடிவரையிலான பாடல்களைக் காணமுடிகின்றது. அகப்பொருள் மாந்தர் பெயர் சுட்டப் பெறுவதில்லை.  அகப்பொருள் பாடலிலும் உவமை, அடைமொழி வாயிலாக வள்ளல்களின் பெருமைகள் பேசப்பட்டுள்ளன. ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாட்டு ஆகிய வடிவங்களில் இவை அமைந்தன.

  அறநூல்கள் வெண்பா யாப்பின. ஒழுக்க முறைகளையும், நடைமுறைகளையும் உவமை முதலியவற்றின் வழி இவை எடுத்துரைக்கின்றன.

  காப்பிய நூல்கள் ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம், சமயக் காப்பியம், தலபுராணம் என்பனவாக அமைந்துள்ளன. ஆசிரியப்பாவும், விருத்தமும் இவற்றின் யாப்பாக உள்ளன. அறம் பிறழாமை, மண்ணாசை கூடாது, சமயப்பற்று போன்ற மையப் பொருள்களையுடையன. பின்னோக்கு உத்தி, கனவுக் குறிப்பின்வழி முன்னுரைத்தல் போன்ற கூறுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. கிளைக்கதைகளுக்கும் இவற்றில் இடமுண்டு.

  இடைக்கால இலக்கியங்களாகப் பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், சைவ சித்தாந்த சாத்திர நூல்கள், தனிப்பாடல்கள் போன்றன அமைகின்றன. கலிவெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை, தாழிசை, சந்தப்பா ஆகியன இடைக்கால யாப்புகளாக உள்ளன. மடக்கணி, உயர்வு நவிற்சி, சிலேடை போன்ற சொல்லணிகள் மேலோங்கியுள்ளன. அரசன், இறைவன், நிலையாமை ஆகிய பாடுபொருள்களைக் கொண்டுள்ளன.

  இக்கால இலக்கியம் பாரதியாரிலிருந்து கணக்கிடப் பெறுகின்றது. நொண்டிச் சிந்து, விருத்தம், புதுக்கவிதை, ஐக்கூ போன்ற வடிவங்களும், படிமம், குறியீடு போன்ற உத்திமுறைகளும் நிலவுகின்றன. பெண்கள், தொழிலாளர், மொழி, நாடு, மதநல்லிணக்கம், மனிதநேயம் போன்றன பாடுபொருள்களாக அமைந்துள்ளன.

  இவற்றை இப்பாடத்தில் விரிவாக அறிந்தோம்.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - II

  1)

  ‘கண்ணி’ வகையிலமைந்த நூல்கள் இரண்டனைத் தருக.

  2)

  அந்தாதி நூல்களின் யாப்பு யாது?

  3)

  சிலேடை பாடுவதில் வல்லவர் யார்?

  4)

  புதுக்கவிதைக் கவிஞர் இருவரைச் சுட்டுக.

  5)

  ஐக்கூக் கவிதையின் வரியளவு கூறுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2018 17:53:51(இந்திய நேரம்)