தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இடைக்கால இலக்கியம்

 • 6.3 இடைக்கால இலக்கியம்

  பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என யாவும் இடைக்கால இலக்கியம் என்னும் வகைப்பாட்டுள் அடங்குவனவாகும். இவற்றின் உருவம், உள்ளடக்கம், உத்திமுறை குறித்துக் காண்போம்.

  6.3.1 உருவம்

  இடைக்கால இலக்கியங்களில் பா வகைகளின் செல்வாக்கைக் காண முடிகின்றது. சந்தப்பாக்களையும் இடையிடையே பார்க்க முடிகின்றது.

  பத்து அல்லது பதினொரு பாடல்களையுடைய பதிக அமைப்புப் பெரும்பான்மையாக உள்ளது. அவற்றின் இருமடங்கு, மும்மடங்கு, நான்மடங்கு அமைப்பையும் காண்கிறோம். அவை ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பா வகைகளால் இயற்றப்பட்டுள்ளன.

  அகம் அல்லது புறம் சார்ந்த பொருண்மைக்குள் ஒன்றை மையப்படுத்தியோ அல்லது ஒரு சிலவற்றின் கலவையாகவோ அமைக்கப்பட்டுள்ள நிலை சிற்றிலக்கிய நூல்களில் தென்படுகின்றது.

  அளவில் காப்பியத்தினும் சிறுமை என்பதாலும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் பயப்பதில் முன்னிற்கும் காப்பியமாகிய பேரிலக்கியத்தினும் அவற்றுள் ஒரு கூறு குறித்தே விவரிக்கும் சிறுமை என்பதாலும் இவை சிறுமை + இலக்கியம் = சிற்றிலக்கியம் எனப்பட்டன வாகலாம்.

  • கலிவெண்பா

  பன்னீரடிகளின் மிக்குவரும் வெண்பா வகை கலிவெண்பா எனப்படும். இரண்டிரண்டடிகளில் எதுகை, மோனை, பொருண்மை அமைந்து ‘கண்ணி’ என்னும் வகை இதனடிப்படையில் நிலவுகின்றது. இரண்டிரண்டு அரும்பு அல்லது மலர்களை அடுத்தடுத்துக் கட்டும் தலைமாலையானது கண்ணி எனப்படுமாறுபோல இவையும் இப்பெயர் பெறலாயின. இவை தனித்தனிக் கண்ணிகளாகவோ, தனிச்சொல் பெற்றுத் தொடர்ச்சியாகவோ அமைவதுண்டு. இவற்றிற்கு அதிகபட்ச அடி எல்லை குறிப்பிடப் பெறுவதில்லை.

  தாயுமானவரின் பராபரக்கண்ணி, குணங்குடியாரின் நிராமயக் கண்ணி போன்றன தனித்து அமையும் கண்ணிக்குச் சான்றாவனவாகும்.

  சான்று :

  எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
  அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே
                                          (தாயுமானவர்)

  தூது, உலா போன்றன தனிச்சொல் பெற்றுத் தொடர்ச்சியாக வரும் கலிவெண்பாக்களாகும். மதுரைச் சொக்கநாதர்மேல் பாடப்பட்ட தமிழ்விடு தூது, உமாபதி சிவாச்சாரியார் பாடிய நெஞ்சு விடு தூது, பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடிய அழகர் கிள்ளை விடு தூது, கச்சியப்ப முனிவர் இயற்றிய வண்டு விடு தூது போல்வனவும், சேரமான் பெருமாள் நாயனார் பாடிய ஆதியுலா என்னும் திருக்கயிலாய ஞானஉலா, ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா போன்றனவும் இவ்வகையின.

  சான்று :

  தித்திக்கும் தெள்ளமுதே தெள்ளமுதின் மேலான
  முத்திக் கனியேஎன் முத்தமிழே - புத்திக்குள்
  உண்ணப் படும்தேனே உன்னோ(டு) உவந்துரைக்கும்
  விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்
                                        (தமிழ் விடு தூது)

  • விருத்தம்

  இடைக்காலத்தில் ஆசிரிய விருத்தங்கள், கலிவிருத்தங்கள் ஆகியவற்றின் செல்வாக்கைக் காணமுடிகின்றது. பன்னிரு சீர் மற்றும் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் பிள்ளைத் தமிழ், சதகம் போன்ற நூல்வகை யாப்பாகத் திகழ்வதைக் காண்கிறோம். குமரகுருபரர் இயற்றிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ் போன்றனவும், அறப்பளீசுர சதகம், கயிலாசநாதர் சதகம் போன்றனவும் இவ்வகையின.

  தேவாரப் பதிகங்கள் முதலானவற்றில் ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம் ஆகியன செல்வாக்குப் பெற்றுள்ளன.

  சான்று : ஆசிரிய விருத்தம்

  இரப்பவர்க் கீய வைத்தார்
      ஈபவர்க் கருளும் வைத்தார்
  கரப்பவர் தங்கட் கெல்லாம்
       கடுநர கங்கள் வைத்தார்
  பரப்புநீர்க் கங்கை தன்னைப்
      படர்சடைப் பாகம் வைத்தார்
  அரக்கனுக் கருளும் வைத்தார்
       ஐயன்ஐ யாற னாரே !
                                 (திருநாவுக்கரசர் தேவாரம்)

  கலிவிருத்தம்

  கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
  எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
  ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
  மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்
                                  (பெரியாழ்வார் திருமொழி)

  • கட்டளைக் கலித்துறை

  ஐந்து சீரடி நான்கும் வெண்டளையும் கொண்டதாய், கருவிளங்காயால் முடிவதாய் நேரசையில் தொடங்கின் 16, நிரையசையில் தொடங்கின் 17 என ஒற்றுத்தவிர்த்த எழுத்துடையதாய் அமைவது கட்டளைக் கலித்துறையாகும்.

  நாவரசர் தேவாரத்திலும் மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் கட்டளைக்கலித்துறைப் பாடல்கள் இடம்பெறுகின்றன, திருவாசகம் மற்றும் திருக்கோவையார் முதலிய கோவை நூல்கள் இவ்வகை யாப்பின. அருணகிரிநாதரின் கந்தரலங்காரம், அபிராமி அந்தாதி முதலான அந்தாதி நூல்கள் போன்றனவும் இவ்வகையினவேயாகும்.

  சான்று :

  தனம்தரும் கல்வி தரும்ஒரு நாளும் தளர்வறியா
  மனம்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
  இனம்தரும் நல்லன எல்லாம் தரும்அன்பர் என்பவர்க்கே
  கனம்தரும் பூங்குழ லாள்அபி ராமி கடைக்கண்களே !
                                          (அபிராமி அந்தாதி)

  இது நிரையில் தொடங்குதலின் அடிதோறும் 17 எழுத்துடையது.

  • தாழிசை

  தரவைக் காட்டிலும் தாழ்ந்த ஓசையுடையது ஆதலின் தாழிசை எனப்பட்டது. கலித்தொகையின் ஓர் உறுப்பாகிய இது, பரணி முதலான நூல்களில் தனித்து ஒரு பா வகையாய் இடம் பெறலானது. எதுகையொன்றுடைய ஈரடிகளால் இயல்வது இது. ஆசிரியவிருத்தத்தின் செம்பாகம் இது எனல் தகும்.

  செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி, ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி, வைத்தியநாத தேசிகரின் பாசவதைப் பரணி போன்றன இவ்வகையின.

  சான்று :

  பேணும் கொழுநர் பிழைகளெலாம்
  பிரிந்த பொழுது நினைந்(து) அவரைக்
  காணும் பொழுது மறந்திருப்பீர்
  கனபொற் கபாடம் திறமினோ
                         (கலிங்கத்துப்பரணி - கடைதிறப்பு)

  (பேணும் = விரும்பும்; கொழுநர் = கணவர்; கனம் = மேலான; பொற்கபாடம் = கதவு)

  • சந்தப்பா

  அருணகிரிநாதரின் திருப்புகழ் போன்ற நூல்கள் சந்தப்பா நூல்களாகும்.

  சான்று :

  தனதனனத் தனதான
      தனதனனத் தனதான
  இரவுபகற் பலகாலும்
       இயலிசைமுத் தமிழ்கூறித்
  திரமதனைத் தெளிவாகத்
       திருவருளைத் தருவாயே
  பரகருணைப் பெருவாழ்வே
       பரசிவதத் துவஞான
  அரனருள்சற் புதல்வோனே
       அருணகிரிப் பெருமானே
                                           (திருப்புகழ்)

  அருணகிரிநாதரைப் போலவே சந்தம் பாடுவதில் வல்லவராகச் சவ்வாதுப் புலவர் விளங்கியுள்ளார். பிற்காலத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திருப்புகழ் நடையில் பாப்பல புனைந்ததால், திருப்புகழ்ச் சுவாமிகள் எனப் போற்றப் பெற்றுள்ளார்.

  6.3.2 உள்ளடக்கம்

  இடைக்கால நூல்கள் தொடக்கத்தில் அரசன் புகழ் பாடுவனவாக இருந்தன. பக்தி இலக்கியச் செல்வாக்கால் இறைவன் புகழும், நிலையாமைக் கருத்துகளும் அடுத்து வந்த காலங்களில் சிறப்பிடம் பெறலாயின.

  • அரசன் புகழ்

  தஞ்சைவாணன்கோவை, நந்திக்கலம்பகம், குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், கலிங்கத்துப்பரணி போன்றன அரசனின் புகழை எடுத்துச்சொல்ல எழுந்த நூல்களாகும்.

  கங்கா நதியும் கடாரமும் கைவரச்
  சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன்

  என்னும் ஒட்டக்கூத்தர் பாடிய இராசராச சோழன் உலாப் பகுதி இதற்குச் சான்றாகும்.

  • இறைவன் புகழ்

  பன்னிருதிருமுறைகள், திவ்வியபிரபந்தம், தாயுமானவர், குமரகுருபரர், சிவப்பிரகாசர், சிவஞான முனிவர் போன்றோர்தம் படைப்புகள் யாவும் இறைவன் புகழுரைக்கும் சிறப்பினவாகும்.

  சான்று :

  மாசில் வீணையும் மாலை மதியமும்
  வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
  மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
  ஈசன் எந்தை இணையடி நீழலே
                                    (திருநாவுக்கரசர் தேவாரம்)

  • நிலையாமை

  இளமை, யாக்கை, செல்வம் என யாவும் சில காலம் இருந்து மறைவனவே ஆகும். இவற்றை உண்மைப் பொருளாகக் கருதிப் பற்றுவைத்தல் கூடாது. இறைவனே நிலைத்த பொருள் ஆவான். அவன்மீது அன்பு செலுத்துதலே உண்மையான நிலைத்த இன்பத்திற்கு வழிவகுக்கும் என்பது இந்நூல்களில் வற்புறுத்தப் பெறுகின்றது.

  சான்று :

  எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
      எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
  செத்தால்வந்(து) உதவுவார் ஒருவர் இல்லை
      சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர். . .

  (திருநாவுக்கரசர் தேவாரம்)

  இவையேயன்றி இறைவன், உயிர், உலகம் ஆகிய முப்பொருள்களின் இயல்பும், இவற்றிற்கிடையிலான தொடர்பும் குறித்துச் சமயவாதிகளின் சான்றும் வாதமுமாகச் சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கு தோன்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

  6.3.3 உத்திமுறை

  இடைக்கால இலக்கியங்களில் உயர்வு நவிற்சி, சொல்லாட்சி மேலோங்கிய நிலை போன்றவற்றை மிகுதியாகக் காணமுடிகின்றது. பிற வழக்கமான அணிகளும் இடம்பெறுகின்றன.

  • உவமையணி

  சிவப்பிரகாசர் பாடிய சோணசைல மாலையில் வரும் பாடல் ஒன்று :

  கழைமொழிக் கொடியோர்க்கு ஏவல்செய்(து) உடலம்
       கமர்உகும் அமிழ்தின்மங் குறாமல்
  விழைவறத் துறந்தஉன் திருவடிக் கமலம்
      விழைகுநர்க்கு ஏவல்செய் திலனே. .

  (கழை = கரும்பு; மொழி = சொல்; கொடியோர் = பொதுமகளிர்; கமர் = வெடிப்பு; விழைவு = விருப்பம்; கமலம் = தாமரை)

  கழை போலும் மொழி; வெடிப்பில் சிந்தப்பட்ட அமிழ்தம் என்பன உவமைகள் ஆகும். திருவடிக் கமலம் என்பது உருவகமாகும்.

  • மடக்கணி

  சிவனைக் குறித்துத் திருவெங்கைக் கலம்பகத்தில் சிவப்பிரகாசர் பாடும் பகுதியிலிருந்து ஒரு சான்று :

  கடலைக் கலக்கு மலைவில்லான்
  உடலைக் கலக்கு மலைவில்லான்
  கங்கைப் பதியன் பரையானான்
  வெங்கைப் பதியன் பரையானான். . .

  கடலைக் கலக்கும் (மேரு என்னும்) மலை வில்லுடையவன்; உடலைக் கடக்கும் மலைவு (குற்றம்) இல்லாதவன்;  கங்கையிலிருப்பவன், பரை (பராசக்தி)யாகத் தானே ஆனவன்;  வெங்கைப்பதியின் அன்பர்களை விட்டுப் பிரிந்தறியாதவன் என்பது பொருளாகும் (ஆனான் - பிரியாதவன்).

  • உயர்வு நவிற்சி அணி

  ஒரு பொருளின் இயல்பைக் கற்போர் வியக்குமாறு மிகைபடக் கூறுவது இது.

  திருக்கூவம் என்னும் திருத்தலத்தின் நாட்டுவளம் கூறவரும் சிவப்பிரகாசர் உயர்வு நவிற்சி அமையப் பாடும் பாடல் ஒன்று :

  சேட்டுஇள வாளை தாக்கத்
       தெங்கிள நீர்மார்த் தாண்டன்
  பூட்டுவெம் பரித்தேர் காறும்
       விசையினில் போதத் தெண்ணீர்
  வேட்டு, அவண் இருந்த பாகன்
       விரைவினில் பற்றி உண்ணும்
  ஊட்டும் ஊழ் எங்குற் றாலும்
       அனைவர்க்கும் ஊட்டி டாதோ !
                                    (திருக்கூவப்புராணம்)

  (சேட்டு = பெரிய; வாளை = மீன்; தெங்கு = தேங்காய்; மார்த்தாண்டன் = சூரியன்; காறும் = வரையில்; விசை = வேகம்; போத = செல்ல)

  • சிலேடையணி

  காளமேகப் புலவர் சிலேடை பாடுவதில் தன்னிகரற்றவராகத் திகழ்ந்துள்ளார். இவர்தம் தனிப்பாடல்களில் ஒன்று :

  பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடை

  ஆடிக் குடத்தடையும்; ஆடும்போ தேஇரையும்;
  மூடித் திறக்கின் முகம்காட்டும்; - ஓடிமண்டை
  பற்றின் பரபரென்னும் பாரில்பிண் ணாக்குமுண்டாம்
  உற்றிடுபாம் பெள்ளெனவே ஓது

  சொல்
  பாம்பு
  எள்
  1. ஆடி
  - படம் எடுத்து ஆடி,
  - செக்கில் ஆட்டப்பட்டு
  2. ஆடும்போது
  - ஆடுகின்றபோது
  - செக்கிலிடப்படும்போது
  3. முகம்
  - தன்முகம்
  - காண்போர் முகம்
  4. மண்டைபற்றல்
  - விடம் பரவல்
  - மண்டையில் வைக்கப்படல்
  5. பிண்ணாக்கு
  - பிளவுபட்ட நாக்கு
  (பிள்+நாக்கு)
  - பிண்ணாக்கு

  இவ்வாறான பல்வேறு அணிநலன்கள் இடைக்கால நூல்களில் செல்வாக்குப் பெற்றிருந்தன.

புதுப்பிக்கபட்ட நாள் : 03-10-2017 15:42:23(இந்திய நேரம்)