தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 1.2-களவு ஒழுக்கம் : கமுக்கமான காதல்

  • 1.2 களவு ஒழுக்கம் : கமுக்கமான காதல்

    E


        பிறர் அறியாதவகையில் நிகழும் நிகழ்ச்சியைக் ‘களவு’ என்று
    குறிப்பிடுவார்கள். ஒருவர் உள்ளத்தை இன்னொருவர் கவர்தல்
    களவு எனப்படும்.

        ஒத்த பண்புடைய ஓர் இளைஞனும், ஒரு மங்கையும், தனியிடத்தில்
    எதிர்ப்பட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவர். இவ்வாறு
    மனம் ஒத்த காதலர் இருவரும், தங்கள் உறவினர்களும், பிறரும்
    அறியாத வகையில், மறைவான இடத்தில் கூடி மகிழ்வதே ‘களவு
    நிலை’ என்று கூறுவார்கள்.

        களவு ஒழுக்க நிலையில் தலைவன், தலைவியின் தோழியிடம்
    தன்னை அறிமுகம் செய்துகொண்டு, அவள் துணையுடன்
    தலைவியைச் சந்தித்து மகிழ்வான்.

        இதன் பின்னர், தலைவனுக்கு உலகியலை எடுத்துக்கூறித் திருமணம்
    செய்துகொள்ளத் தூண்டிக் கற்பு நெறிப்படுத்துவாள் தோழி.


    1.2.1 காதலும் எமனும்


        தன் எதிரே காட்சிதரும் பெண்ணைப் பார்த்து மையல் கொள்கிறான்
    தலைவன். அவள் அழகைப் பருகப் பருக, ஒரு பக்கம் இன்பம்
    வருகிறது. ஆனால் தலைவியின் பார்வையினால் மிகவும் துன்பம்
    அடைகிறான். தலைவியின் பார்வையின் பாதிப்பிற்கு ஆளாகும்
    தலைவனின் நெஞ்சம் வேதனைப்படுகிறது. அது எத்தகைய வேதனை
    என்பதனை வள்ளுவர் விளக்குகிறார். தலைவியின் பார்வையினால்
    ஏற்பட்ட பாதிப்பு,

    பண்டு அறியேன், ‘கூற்று’ என்பதனை, இனிஅறிந்தேன்

    பெண்தகையான் பேர் அமர்க்கட்டு

    (குறள்: 1083)


    (பண்டு = முன்பு, கூற்று = எமன், பெண்தகையான் = பெண்
    தன்மையுடன், பேர் அமர்க்கட்டு = பெரிய, போரிடும்
    கண்களையுடையது)

    என்று தலைவனைப் பேசவைக்கிறது.

        இதுவரையிலும் எமனைப் பற்றிக் குறிப்பிடும்போது அவன்
    உயிர்களை வதைப்பவன், உயிரைக் கவர்ந்துசெல்பவன், என்றுதான்
    கேள்விப்பட்டிருக்கிறேன். எமனை நேரில் பார்த்தது இல்லை.
    ஆனால், இப்போதுதான், இவளையும், இவளது கண்களையும் பார்த்த
    பின்னர்தான், பெரிய அளவில் போர் செய்யும் கண்களை உடைய
    பெண் உருவில் வந்துள்ளான் எமன் என்பதனைத் தெரிந்து
    கொண்டேன் என்று குறிப்பிடுகிறான் தலைவன்.

        பொதுவாக எமன், உடலிலிருந்து உயிரைக் கவர்ந்து செல்வதற்கு
    வருவான். ஆனால் இவளோ, உடலிலிருந்து உள்ளத்தை அல்லவா
    கவர்ந்து செல்ல வந்திருக்கிறாள்!

        அச்சத்தை ஊட்டும், தோற்றமுடைய எமனின் இயல்பில் துன்பம்
    இருப்பது புதிதல்ல. ஆனால் அழகிய தோற்றமுடைய இவளது
    இயல்பு, என்னைத் துன்புறுத்துகிறதே என்கிறான் தலைவன்.

        தலைவியினது பார்வையினால் பாதிக்கப்பட்ட, தலைவனின் உள்ளம்,
    எப்பொழுதும் அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறது. எனவே
    எப்படி, எப்பொழுது அவளை அடையலாம் என்று துடித்துக்
    கொண்டிருக்கிறது. தலைவியின் அழகும், கண்களின் பார்வையும்
    தலைமகனைப் பெரிதும் வருத்துகின்றன. அந்த இன்ப
    வேதனையையே நயமாக வள்ளுவர் இவ்வாறு விளக்குகிறார்.
    இதுவே, தலைவன், தலைவியரது களவு வாழ்க்கையின் தொடக்கம்.


    1.2.2 காதலும் கண்களும்


        ஒருவரை ஒருவர் நேரிலே சந்தித்த தலைவனும், தலைவியும்
    ஒருவரை     ஒருவர்     விரும்புவதாக,     மறைமுகமாக
    வெளிப்படுத்துகிறார்கள்.

        தலைவன் தன்னைப் பார்க்கும்போது, அதைப் பொருட்படுத்தாது
    வேறு எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்வாள் தலைவி.
    அவன் பார்க்காதபோது, அவனைப் பார்த்து மெல்ல தனக்குள்
    நகைத்துக் கொள்வாள். இதைக்குறிப்பால் உணர்ந்த தலைவன்,



    குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒருகண்
    சிறக்கணித்தாள் போல நகும்



    (குறள்: 1095)


    (சிறக்கணித்தாள் போல = கண்ணைச் சுருக்கிப் (ஓரப்பார்வையில்)
    பார்த்து, நகும் = மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்)

    என்று குறிப்பிடுகிறான்.

        இவள், என்னை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் அவளது
    உள்ளக் கருத்தைக் குறிப்பாகக் காட்டி ஒரு கண்ணால் சுருக்கிப்
    பார்த்து மெல்லச் சிரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள்.


        தலைவியின் சிறக்கணித்த பார்வை, அவளது சிரிப்பு ஆகிய
    செய்கைகளினால் வெளிப்பட்ட குறிப்புகளின் மூலம், அவள்
    தன்னை விரும்புவதையும், அதனால் அவள் அடையும்
    மகிழ்ச்சியையும் தலைவன் உணர்ந்து கொண்டான்.

        இவ்வாறு, சிறுசிறு குறிப்புகளின் மூலம் காதலர்கள் தங்கள் உள்
    உணர்வுகளை வெளிப்படுத்துவதை அக இலக்கியப் பாடல்களில் மிகுதியாகப் பார்க்கலாம். இத்தகைய பின்புலத்தில்தான் வள்ளுவர்,
    தலைவன் தலைவி ஆகியோர்கள் தம் குறிப்புகளால் தங்கள்
    விருப்பத்தை வெளிப்படுத்துவதை எடுத்துக் காட்டுகிறார்.


    1.2.3 காதலும் நிலாவும்

        களவு நெறியில், தலைவியின் விருப்பம்
    அறிந்த பின்னர், தலைவன், அவள்
    நினைவாகவே வாழ்கிறான். அவள்
    வனப்பைக் கண்டு மயங்கியவன்,
    அந்த வனப்பை - அழகை, மனக்கண்
    முன்     நிறுத்தி,     நினைத்துப்
    பார்க்கிறான். மேலும்     அவள்
    அழகைப்     பல     இயற்கைப்
    பொருள்களோடும்     ஒப்பிட்டு


    மகிழ்கிறான். நிலவு எல்லோர் கண்ணுக்கும் புலப்படும் ஒன்று.
    அதைக் கவிஞர்கள், பெண்களின் முகத்துடன் ஒப்பிட்டு நிலவு
    போன்ற முகம் என்று, நிலவை உயர்வுபடுத்தி உவமையாகக்
    குறிப்பிடுவர். தலைவனும் தலைவியின் முகத்தை நிலவோடுதான்
    ஒப்பிடுகிறான். ஆனால் எப்படி ஒப்பிடுகிறான்? நிலவே, நீ என்
    தலைவியின் முகத்தைப் பார்த்திருக்கிறாயா? அது எப்பொழுதும்
    முழுமையாகவே இருக்கும். அதற்குத் தேய்வே கிடையாது. நீயோ,
    அடிக்கடி தேய்ந்து போகிறாய். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக
    வளர்கிறாய். உன்னிடம் இருக்கும் இந்தக் குறை என் தலைவியிடம்
    இல்லை. எனவே, உன்னைவிட என் தலைவியே உயர்வானவள்
    என்று நிலவிடம் கூறுகிறான் தலைவன்.


    அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல
    மறுஉண்டோ, மாதர் முகத்து!



    (குறள்: 1117)


    (அறுவாய் = குறைந்த இடம், அவிர் = ஒளிபொருந்திய)

    எப்பொழுதும் முழுமை பெற்று இருக்கும் தன்மை நிலவுக்கு இல்லை.
    எனவே, நிலவுக்கு அது ஒருகுறை. ஆனால், தான் விரும்பும்
    தலைவிக்கு அந்தக் குறையில்லை . அதனால் நிலவுக்கு இருக்கும்
    குறை தலைவிக்கு இல்லையே! என்கிறான் தலைவன்.

        இது தலைவன், தலைவி மீது கொண்ட அன்பு, அவள் அழகைக்
    கண்டு மகிழும் தன்மை, ஆகிய அகஇலக்கிய மரபையே
    வெளிப்படுத்துகிறது.


    1.2.4 காதலும் உயிரும்


        ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழும் தலைவனும்,
    தலைவியும், ஓர் உயிர் ஈருடலாக வாழ்பவர்களாகத் தமிழ் அக
    இலக்கியங்கள் சுட்டும். அவ்வாறு குறிப்பிடுவதை அக இலக்கிய
    மரபாகக் கொண்டுள்ளனர். இதனையே வள்ளுவர் காமத்துப்பாலிலும்
    பின்பற்றியுள்ளார்.

        தலைவன் தனக்கும் தலைவிக்கும் உள்ள அன்பு எத்தகையது
    என்பதைக் குறிப்பிடும்போது, உயிரும் உடலும் போன்றது என்று
    குறிப்பிடுகிறார்.


    உடம்பொடு உயிரிடைஎன்ன, மற்று அன்ன-
    மடந்தையொடு எம்மிடை நட்பு



    (குறள்: 1122)


    (மடந்தை = மடப்பம் பொருந்திய பெண்)

    மடப்பம் பொருந்திய மங்கைக்கும் தனக்கும் உள்ள தொடர்பு,
    உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போன்றது என்கிறான்
    தலைவன். உடல் இல்லாமல், உயிருக்குத் தோற்றம் இல்லை; உயிர்
    இல்லாமல், உடலுக்கு வாழ்வு இல்லை.

        உயிர் இருக்கின்ற வரையில்தான், உடலுக்கு மரியாதை.
    உடலைவிட்டு உயிர்போய் விட்டால், உடல் இயங்காது. உடலின்
    இயக்கமே உயிர்தான். அதேபோல், உடல் இல்லாவிட்டால்
    உயிருக்கும் உறைவதற்கு இடமில்லை. தனது இருப்பை
    வெளிப்படுத்த வாயிலில்லை. உடலில்தான் உயிர் தோன்றுகிறது.
    உடலில்தான் உயிர் அடைக்கலம் புகுகிறது. எனவே, இரண்டும்
    ஒன்றோடு ஒன்று பிணைந்தது. உயிரும் உடலும் போன்றவர்கள்
    தலைவனும் தலைவியும். எனவே, இருவரும் பிரிக்கமுடியாத
    வகையில் ஒருவரோடு ஒருவர் இணைந்து பிணைந்துள்ளனர்.

        களவு நெறியில் காதலர்கள் அன்பு செலுத்தி எவ்வாறு
    வாழ்ந்தார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:48:39(இந்திய நேரம்)