தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 1.4-ஊடலும் கூடலும்

  • 1.4 ஊடலும் கூடலும்

    E


        
    பிரிந்து சென்ற தலைவன், மீண்டும் தலைவியை வந்து
    அடையும்பொழுது, தலைவி, தலைவன் மீது ஊடல் கொள்வாள்.
    அதாவது பொய்க் கோபம் கொள்வாள். பிறகு, கோபத்தை மறந்து
    அவனோடு கூடி மகிழ்ந்து வாழ்வாள். இவை சங்க
    இலக்கியங்களிலுள்ள அகப்பாடல்களில் இடம்பெறும் செய்தி. இவை
    திருக்குறளில் பல பாடல்களில் இடம்பெற்றுள்ளன. நெஞ்சொடு
    புலத்தல், புலவி, புலவி நுணுக்கம், ஊடல் உவகை எனும் நான்கு
    அதிகாரங்களிலும் இவை பற்றிய பாடல்கள் உள்ளன.


    1.4.1 ஊடலும் உப்பும்


        
    பழைய அகஇலக்கியப் பாடல்களில், ஊடலைப் பற்றிப் பல
    பாடல்கள் கூறுகின்றன. ஆனால் ஊடல் எத்தகையது என்பதனைத்
    துல்லியமாக வள்ளுவர் கூறுகின்றார். ஊடல் எத்தகையது என்று
    வினவினால், அது ‘உப்பு’ போன்றது என்று விளக்கம் கொடுக்கிறார்
    வள்ளுவர்.

        உப்பின் தன்மையை     எல்லோரும் நன்கு அறிவோம்.
    நாள்தோறும் அதைப் பயன்படுத்துகிறோம். ‘உப்பில்லாப் பண்டம்
    குப்பையிலே’ என்று தமிழில் ஒரு பழமொழியும் உண்டு. எனவே,
    ‘உப்பு’ உணவில் கலக்க வேண்டிய ஒரு பொருள். ஆனால் அதை
    எந்த அளவுக்குக் கலக்க வேண்டும்? அளவோடு கலந்தால்தான்
    அது கலக்கப்பட்ட உணவு சுவைக்கும். அளவுக்கு மீறி
    கலந்தால், உணவை உண்ணவே முடியாது. இத்தகைய தன்மையை
    உடைய உப்பைக் குடும்ப வாழ்க்கையில், கணவன், மனைவிக்கு
    இடையே ஏற்படும், ஊடலோடு ஒப்பிட்டுக் கூறுகிறார் வள்ளுவர்.

        எதுவும் அளவுக்கு மீறினால் ஆபத்து. சில நேரங்களில்
    விளையாட்டு, வினையாகி விடுவதும் உண்டு அல்லவா? எனவே,
    பொய்க்கோபமாக ஊடல் கொள்ளும் நிலை நீடிப்பது நல்லது
    அல்ல என்பதை உணர்த்தவே ஊடல், உப்பு போன்று அளவாக
    இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார்.


    உப்பு அமைந்தற்றால் புலவி, அது சிறிது
    மிக்கற்றால், நீளவிடல்



    (குறள்: 1302)


    (அமைந்தற்றால் = அமைந்ததைப்போல்)

    நாம் நுகரும் உணவிற்குத் தேவையான அளவிற்கு உப்பைச்
    சேர்த்தால், அது உணவிற்குச் சுவை ஊட்டும். அதைப்போல்,
    தலைவன், தலைவியிடையே நிகழும் ஊடலும் அளவோடு
    இருந்தால் இன்பம் தரும். மாறாக, உணவில் உப்பை அளவுக்கு
    மீறிச் சேர்த்தால் அதனால் அந்த உணவையே உண்ண முடியாமல்
    இருப்பதைப்போல, ஊடல் அளவுக்கு அதிகமாக நீடித்தால், துன்பம்
    தருவது மட்டுமல்ல, இருவர் உறவைக் கூட பாதிக்கும்படி
    செய்துவிடும்.

        அன்றாடம் நாம் நம் நடைமுறை வாழ்க்கையில், உணவில்
    பயன்படுத்தும் உப்பை, காதலர்களுக்கிடையே நிகழும் ஊடலுக்கு
    ஒப்பிட்டுக் காட்டுகிறார் வள்ளுவர்.

        ஊடலின் தன்மையை, தேவையை மிகவும் எளிமையாகக்
    கூறியுள்ளார் வள்ளுவர்.


    1.4.2 தலைவி கொண்ட ஊடல்


        
    தலைவியின் மீது அளவு கடந்த அன்புடையவன் தலைவன்.
    தலைவியும் அவ்வாறே தலைவன் மீது அன்பு கொண்டவள்.
    தலைவனது அன்பு முழுமையும் தனக்கே உரியது என்ற எண்ணம்
    உடையவள் தலைவி. எனவே தலைவன் பிறர்மீது அன்பு
    செலுத்துவதை அவளால் பொறுத்துக் கொள்ள இயலாத மன
    உணர்வு உள்ளவள். இத்தகைய நிலையில் தலைவன், தலைவி மீது
    தான் கொண்ட அன்பினை வெளிப்படுத்தி, அவளை மேலும்
    மகிழ்ச்சி அடையச் செய்ய விரும்புகிறான்.

        எனவே, தலைவியைப் பார்த்து, ‘நம்மைப் போல் காதலர்கள் பலர்
    இருக்கின்றார்கள். இருப்பினும் அவர்களைவிட நம் காதல் உயர்ந்தது.
    நாம் மிகுந்த காதல் உடையவர்கள். பிற யாரையும் விட உன்னிடம்
    நான் மிகவும் காதல் உடையவன்’ என்று கூறினான். ஆனால்
    தலைவன     எதிர்பார்த்ததற்கு     நேர்மாறாகத்     தலைவி
    கோபங்கொண்டாள்.


    யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
    ‘யாரினும் யாரினும்’ என்று



    (குறள்: 1314)


    தன்னைப் போல், பிறர் யாரையோ தலைவன் விரும்புகிறான்.
    எனவேதான் அவளைவிட, தன்னை மிகவும் விரும்புவதாகக்
    கூறுகிறான், என்று எண்ணினாள். ஆகவேதான் ‘யாரை விட?
    யாரை விட?’ என்று வினவி ஊடல் கொள்ளுகிறாள்.

        இது எதைக் காட்டுகிறது? தலைவனின் முழு அன்பும், முழுமையாகத்
    தனக்கே கிடைக்க வேண்டும் என்ற தலைவியின் உள் உணர்வைக்
    காட்டுகிறது. இல்லையா ?


    1.4.3 கூடல் தரும் இன்பம்


        
    உண்மையான நட்பு உடையவர்களிடையே சில நேரங்களில்,
    சிறு மனவேறுபாடுகள் வரும். அவை நீர்மேல் குமிழிபோல்
    மறைந்துவிடும். அதன்பின் முன்பைவிட மிகுதியான அளவில்
    ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழ்வார்கள். அதைப்போல்,
    உண்மையான அன்பு உடைய தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே
    சூழலாலோ, பிறவற்றாலோ ஊடல் வருவது இயல்பு. அந்தச் சிறு
    ஊடலும் அவர்களுக்கு இன்பத்தை வழங்குகிறது. ஏனென்றால்,
    ஊடலுக்குப் பின்வரும் அவர்களது கூடலில் பேரின்பம் கிடைக்கிறது.
    இதனை,


    ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின்



    (குறள்: 1330)


    (முயங்க = தழுவ)

    என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

        காம நுகர்ச்சி உடைய தலைவனுக்கும் தலைவிக்கும் இன்பம் தருவது
    ஊடுதலாகும். அத்தகைய ஊடலுக்கும் இன்பத்தை வழங்குவது,
    ஊடலின் பின்னே ஏற்படும் கூடுதல் ஆகும்.

        சிறு துன்பம் தரும் ஊடல், பின்னர் மிகவும் இன்பம் தந்து
    இருவரையும் முன்னைவிடவும் நெருங்கிக் கூடி மகிழுமாறு
    செய்துவிடுகின்றது. ஊடலால் விளையும் அற்புதம் கூடல் என்கிறார்
    வள்ளுவர்.

        காதலர் இருவர் கருத்து ஒருமித்து, கூடி இன்புற்று வாழ்வதுதான்
    இல்லறத்தின் உண்மையான பயன். இதில் ஊடலும் கூடலும்
    நிகழ்வது இயற்கை. இரண்டிலும் இன்பம் கிட்டும் என்பதை
    அகஇலக்கியங்கள் காட்டுகின்றன. அதனை வள்ளுவர் இக்குறளில்
    மிகவும் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:48:47(இந்திய நேரம்)