தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 3.2-உள் உணர்வுகளை அறிதல்

  • 3.2 உள் உணர்வு அறிதல்


        தலைவியினிடத்தில் ஈடுபாடு கொண்டு, அவள் மீது அளவில்லாத
    அன்பு உடையவன் தலைவன். களவு நெறியில் வாழ்ந்த காலத்திலும்,
    கற்பு நெறியில் வாழ்ந்த காலத்திலும், தலைவியின் அன்பை
    மட்டுமல்ல, அவளது உள் உணர்வுகளையும் நன்கு அறிந்தவன்.
    அவளது உள்உணர்வுகளை அறிந்து, அதற்கேற்ப, அவளை ஆறுதல்
    அடையச் செய்யவும் பல முயற்சிகளைச் செய்தவன் தலைவன். அந்த
    முயற்சிகள் அவர்களது வாழ்க்கையின் மகிழ்விற்கும், நிறைவிற்கும்
    பெரும் துணை செய்தன.

    3.2.1 கண்கள் பேசும் உண்மை


        நம் மனத்தினுள் சில துன்பங்கள் சில நேரங்களில் இருக்கும்.
    சிக்கல்கள் இருக்கும். ஆனால், நெடுநாளைக்குப் பின்னர் நம்மை
    நாடிவரும் நல்ல நண்பர்களிடம் அல்லது உறவினர்களிடம், அதை
    வெளிப்படுத்த விரும்பமாட்டோம். அவர்களிடம் மகிழ்ச்சியாக
    இருப்பதாகக் காட்டிக் கொள்ளவே முயலுவோம். ஆனால், நம் மீது
    உண்மையான அன்புள்ள அல்லது ஈடுபாடு உள்ள நண்பர்கள்
    அல்லது உறவினர்கள் நம் முகத்தைப் பார்த்த உடனேயே, நம்
    முகத்தில் தேங்கியிருக்கும் துன்பத்தை எளிதில் தெரிந்து
    கொள்வார்கள். அவர்கள், நம்மைப் பார்த்து, ‘உங்களுக்கு ஏதோ
    கவலை இருக்கிறது அதை என்னிடம் சொல்லாமல் மறைக்கிறீர்கள்’
    என்று கூறுவார்கள். உடனே நாம், ‘அப்படி ஒன்றும் இல்லை’
    என்று சொல்லி, உண்மையை மறைப்போம். ஆனால், அவர்கள்,
    நம்மைப் பார்த்து ‘உங்கள் கண்களுக்கு உண்மையை மறைக்கத்
    தெரியவில்லை. உங்கள் மனத்தில் எதோ ஒரு துன்பம் இருக்கிறது
    என்பதை அவை உணர்த்துகின்றன’ என்று குறிப்பிடுவார்கள்.

        நாம் சிரிக்கலாம். ஆனால் நம் கண்கள் நம்மை அறியாமலே,
    நம்மைக் காட்டிக் கொடுத்துவிடும். இது, நடைமுறை வாழ்க்கையில்
    பலருக்கு எற்படும் ஓர் அனுபவம். இதையே, வள்ளுவர்,
    தலைவியின் உள் உணர்வை அறிந்து கொண்ட தலைவனின்
    பண்பை வெளிப்படுத்தப் பயன்படுத்தியுள்ளார்.


    • தலைவியின் கண்கள்


        பணியின் நிமித்தம், தலைவியை விட்டுப் பிரிந்து சென்றான்
    தலைவன். பணி முடிந்தபின்னர் மீண்டும் தலைவியை வந்து
    சந்திக்கிறான். தலைவனைப் பார்த்த தலைவியும், பிரிவுக் காலத்தில்
    தான் அடைந்த துன்பங்களை எல்லாம் வெளிப்படுத்தாமல்
    மறைத்துக் கொள்கிறாள். எதுவுமே நடைபெறாதது போல்,
    இன்முகத்துடன் தலைவனை வரவேற்கிறாள்.

        பிரிவுக் காலத்தில், தலைவி எந்த அளவுக்குத் துன்பம்
    அடைந்திருப்பாள் என்பதைத் தலைவன் நன்கு அறிந்திருந்தான்.
    முகத்தைப் பார்த்து அகத்து உணர்வுகளை அறியும் ஆற்றலைப்
    பெற்ற தலைவன், அவள் உள் உணர்வுகளைப் புரிந்து கொண்டான்.
    தலைவியைப் பார்த்து, ‘தலைவியே உன் உள் உணர்வுகளை,
    வெளிப்படுத்தாமல் என்னிடம் மறைத்தாலும், உன் கண்கள்
    அவற்றைப் புலப்படுத்துகின்றன’ என்று குறிப்பிடுகின்றான்.


    கரப்பினும் கையிகந்து ஒல்லாநின் உண்கண்
    உரைக்கல் உறுவது ஒன்று உண்டு



    (குறள்: 1271)


    (கரப்பினும் = மறைத்தாலும்; இகந்து = கடந்து;
    ஒல்லாது
    = பொருந்தாது; உரைக்கல் = சொல்லுதல்;
    உறுவது
    = உடையது)

        நீ சொல்லாமல் மறைத்தாலும், நிற்காமல் உன்னைக் கடந்து
    உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று
    இருக்கின்றது என்பது இந்தக் குறளின் பொருள். ‘நீ எவ்வளவுதான்
    என்னிடம் இருந்து மறைத்தாலும், அதையும் மீறி, உன்னுடைய
    கண்கள் என்னிடம் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கின்றது’
    என்று குறிப்பிடுகிறான் தலைவன்.

        நம்மிடம் உள் அன்பு கொண்டவர்கள்தான் நம் மனநிலையை
    அறிந்து கொள்வார்கள். நம் துன்பங்களில் ஆறுதல் கூறுவார்கள்.
    அதைத் தீர்ப்பதற்குத் துணை செய்வார்கள். தலைவியினிடம் உள்
    அன்பு கொண்ட தலைவன், அவள் மன நிலையை நன்கு
    அறிந்தவன். எனவே, அவள் உள் மனத்திலிருக்கும் துன்பத்தை
    வேதனையை நன்கு அறிந்து கொள்ளுகிறான். அதனால்தான் ‘ நீ
    சொல்ல விரும்பாது மறைத்து வைத்திருக்கும் செய்தியை உன்
    கண்கள் எனக்குக் காட்டி விட்டன’ என்று குறிப்பிடுகின்றான்.

        தலைவியின் நலத்தில் தலைவன் எந்த அளவுக்கு ஆர்வம்
    கொண்டிருந்தான் என்பதனை இது புலப்படுத்துகிறது.

    3.2.2 ஊடல் உவகை


        களவு நெறியில் வாழ்ந்த காலத்திலும், கற்பு நெறியில் வாழ்ந்த
    காலத்திலும், தலைவனுக்கும் தலைவிக்கும் அடிக்கடி ஊடல்
    நிகழ்வது உண்டு. அப்பொழுது அந்த ஊடலைத் தீர்த்து வைப்பவன்
    தலைவனே.

        தலைவன் மீது பொய்யான கோபம் கொண்டே தலைவி ஊடல்
    கொள்வாள். தலைவியின் இந்த மன இயல்பு தலைவனுக்குத்
    தெரியும். அவள் கோபம் தற்காலிகமானது என்பதனையும் தலைவன்
    அறிவான். இருப்பினும், அவள் முகம் வாடுவதையோ, அவள்
    தன்னோடு இன்முகத்துடன் பேசாது இருப்பதையோ அவனால்
    பொறுத்துக் கொள்ள இயலாது. எனவே, அவள் கோபத்தை
    நீக்குவதற்குப் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுவான். இது
    தலைவனின் இயல்பு.


    • தலைவனின் நம்பிக்கை


        தலைவனோடு, தலைவி ஊடல் கொண்டிருந்தாள். ஊடலைப்
    போக்கவேண்டும் என்று எண்ணினான் தலைவன். எனவே,
    எப்படியேனும், அவளைப் பேசும்படி செய்ய வேண்டும் என்று
    முயற்சித்தான். நேரடியாகப் பேசமாட்டாள். ஏனென்றால்,
    தலைவனின் மீது தான் கொண்டுள்ள கோபத்தை எப்படியாவது
    உணர்த்த முயற்சிக்கிறாள் தலைவி. அதற்கு உரிய வழி எது?
    பேசாமல் இருக்க வேண்டும். எனவே, தலைவன் எவ்வளவு
    முயன்றாலும் தலைவி பேசமாட்டாள். இதனை நன்கு உணர்ந்தவன்
    தலைவன். எனவே, எப்படிப் பேச வைப்பது என்று சிந்தித்தான்.
    பொதுவாக, யாராவது தும்மினால், ‘நூறாண்டு வாழ்க’ என்று
    வாழ்த்துவார்கள். இது தமிழர் மரபு. இதை நன்கு அறிந்தவன்
    தலைவன். தான் தும்மினால் எப்படியும் அவள் வாழ்த்த வேண்டும்.
    அந்த மரபை அவள் மீற மாட்டாள். அந்த நம்பிக்கை அவனுக்கு
    இருந்தது. அப்படியாவது அவளைப் பேச வைக்கலாமே என்று
    கருதினான். எனவே அதற்கான முயற்சியாகத் தும்மினான்.
    தலைவனின் இந்த எண்ணம் தலைவிக்குத் தெரியும், அதனை
    அறிந்து


    ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
    நீடுவாழ்க என்பாக்கு அறிந்து



    (குறள்: 1312)


    (யாம் = நான், தம்மை = அவரை, என்பாக்கு = என்பதை)

    என்று குறிப்பிட்டாள் தலைவி.

        காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, நான் அவரை
    நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவேன் என
    நினைத்து அவர் தும்மினார்.

        நான் அவரை வாழ்த்துவேன் என்பதை நன்கு அறிந்து, இவ்வாறு
    தும்மினார்.
    தன்மீது கொண்ட ஊடலைத் தீர்த்து, என்னைப்
    பேசவைப்பதற்காகத் தலைவன் எடுத்துக் கொண்ட முயற்சி இது
    என்கிறாள்.

        தலைவி தன் மீது கொண்டுள்ள ஊடலை எளிமையாகப்
    போக்கிவிடலாம் என்று கருதினான் தலைவன். அவளது ஊடலை
    நீக்கி, அவளைத் தன்னுடன் பேசச் செய்யலாம் என்றும் நம்பினான்
    தலைவன். ஏன் என்றால் அவள் உள் உணர்வுகளை நன்கு
    அறிந்தவன் அவன். எனவே தலைவனின் இந்தத் தும்மல்,
    தலைவியின் ஊடலைப் போக்குவதற்கு எளிமையாகவே துணை
    செய்தது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:54:21(இந்திய நேரம்)