Primary tabs
-
3.3 அன்பும் பண்பும்
தலைவன், தலைவி மீது கொண்ட காதலுக்கு அடிப்படைக் காரணம்,
அவள் மீதுள்ள அன்பு. அந்த அன்பின் வெளிப்பாடே, தலைவனின்
ஒவ்வொரு செயலும் சிந்தனையும். இதற்குப் பல எடுத்துக்காட்டுகள்,
காமத்துப்பாலில் காணப்படுகின்றன.
நம்முடைய சில நண்பர்கள் அல்லது உறவினர்களிடம், இன்றைக்கும்
மிகுந்த அன்புடனும் நட்புடனும் இருக்கிறோம். அவர்களைப் பற்றி
நினைத்தாலே, நம் உள்ளம் மகிழ்ச்சி அடையும். அவர்களைப்
பற்றிய பழைய நினைவுகள், இன்பம் தரும், பெருமை தரும். அதற்கு
என்ன காரணம்? அவர்கள் நம்மோடு உறைந்து அல்லது தொடர்பு
கொண்டு வாழ்ந்த காலத்தில், அவர்கள் நம்மிடம் நடந்து கொண்ட
முறையும், நம்மிடம் வெளிப்படுத்திய அன்பும், நட்பும் சிறப்பு
வாய்ந்தவை. என்றைக்கும் நினைத்துப் பார்த்து மகிழத்தக்கவை.தலைவனோடு கூடி வாழ்ந்த தலைவி, அவனை விட்டுப் பிரிந்து
வாழ்கிறாள். தலைவன் பிரிவு அவளைப் பெரிதும் துன்பம்
அடையச் செய்கிறது. இருந்தாலும் நான் இன்று உயிருடன்
பொறுமையாக இருப்பதற்குக் காரணம் தலைவன். அவனோடு நான்
வாழ்ந்த காலத்தில் அவன் என்னிடம் காட்டிய அன்பே, இன்றும்,
இந்தத் துன்பமான பிரிவுக் காலத்திலும், அவன் நினைவாகவே
இந்த உயிரைத் தாங்கிக் கொண்டு வாழ்வதற்குக் காரணம்.
தலைவன் காட்டிய அன்புதான் இந்த உயிரைப் பாதுகாத்து
வருகிறது என்கிறாள் தலைவி.
(என்உளேன் = எதனால் உயிரோடிருக்கிறேன்,
உற்ற நாள் = பொருந்தியிருந்த நாட்களை,
உள்ள = நினைத்துப் பார்ப்பதால்)காதலராகிய அவரோடு நான் கூடியிருந்த நாட்களை நினைத்துக்
கொள்வதால்தான் உயிரோடிருக்கின்றேன், வேறு எதனால் உயிர்
வாழ்கிறேன்? என்பது இந்தக் குறளின் பொருள்.தலைவனைப் பிரிந்து இவ்வாறு துன்பம் அடைவதைவிட இறப்பதே
மேல். ஆனால், நான் ஏன் உயிரோடு இருக்கிறேன் தெரியுமா?
தலைவனோடு வாழ்ந்த காலத்தில் அவன் அன்பினால் கிடைத்த
இன்பம், இன்றைக்கும் நினைத்துப் பார்த்தால் மகிழ்ச்சி தரக் கூடியது.
பெருமை அடையத்தக்கது.எனவே, இன்பம் தந்த நினைவோடும், மேலும் இனி, மீண்டும்
சந்திக்கும்பொழுதே இன்பம் தரக்கூடிய கனவோடும் உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கின்றேன் என்றாள் தலைவி. ஆகவே தலைவி மீது
தலைவன் வெளிப்படுத்திய அன்பே, அவள் உயிரை இன்று
பாதுகாத்து வருகிறது.தலைவன், தலைவி மீது எந்த அளவுக்கு அன்புடனும், ஆதரவுடனும்
வாழ்ந்து வந்தான் என்பதற்குத் தலைவியின் இந்தக் கூற்று ஒரு
சிறந்த எடுத்துக்காட்டு.தலைவியோடு, தலைவன் வாழ்ந்த காலத்தில் காட்டிய அன்பு மிகவும்
சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. எனவே, தலைவனின் சிறந்த
அன்பை நினைத்து, அவன் பிரிவின் துன்பத்தைப் பொறுத்துக்
கொள்கிறாள்.
மிகவும் அழகு பொருந்தியவள் தலைவி. பார்ப்பவர்களை ஈர்க்கும்
அழகு பெற்றவள். அவளது அழகைக் கண்டு மகிழ்ந்தவன் தலைவன்.
அதைப் பலவகையில் புகழ்ந்து பாராட்டிப் பெருமிதம் அடைந்தவன்
தலைவன். அவளது புற அழகை மட்டுமல்லாமல் அக அழகையும்
அறிந்து உணர்ந்தவன் தலைவன். எனவே, அவளது அக அழகை -
உள்ளத்தின் பண்பு நலன்களை நன்கு அறிந்திருந்தான். தலைவி மீது
அளவு கடந்த அன்பு செலுத்துவதற்கும், அவளோடு கூடி வாழ்ந்து
மகிழ்வதற்கும் அவளிடம் அமைந்து இருந்த - அவன் அறிந்திருந்த,
அவளது பண்புகளே முதன்மைக் காரணங்கள். இந்தப் பண்பு
நலன்கள் அவளது பெண்மைத் தன்மையின் வெளிப்பாடாகும். இந்த
உண்மையைக்
(காரிகை = பெண், காம்பு = மூங்கில், ஏர் = போன்ற,
பெண்நிறைந்த நீர்மை = பெண்ணுக்குரியதாகிய தன்மை (மடமை),
பெரிது = பெரியது)என்று பாராட்டுகிறான்.
கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என்
காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு
மிகுதியாக உள்ளது என்பது இதன் பொருள்.மூங்கில் போன்று அழகிய தோளை உடைய இந்தப் பெண், பார்த்து
மகிழத்தக்க கண் நிறைந்த அழகு உடையவள். ஆனால், இதைவிட
மிகுந்த அழகாகவும் சிறப்பாகவும் அமைந்திருப்பது அவளது
பெண்மைத் தன்மையே. இது தலைவியைப் பற்றிய தலைவனின்
கருத்து. எனவே, ‘பெண்மை நிறைந்த நீர்மை பெரிது’ என்று
சுட்டுகிறான்.தலைவியின் மீது அன்பு செலுத்துவதற்கும், அவளோடு தன் குடும்ப
வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கும் இன்றியமையாத
காரணமாக அமைந்திருந்தது, தலைவியினிடத்தில் தலைவன்
கண்டறிந்த பெண்தன்மையே ஆகும்.
• சிறந்தது பெண்மையே
பொறுமை, மென்மை, தியாகம், அன்பு, இரக்கம், நாணம் போன்ற
இயல்புகளையே பெண்மைக்கு உரியவைகளாகக் குறிப்பிடுகின்றனர்.
தலைவியும், தலைவனும் சந்திக்கும்பொழுது, தலைவன்தான்
முதலில் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறான். தலைவி
நாணத்தால் தலைகுனிகிறாள். தலைவன் பிரிவுக் காலத்தில், தன்
சொந்த சுகங்களை எல்லாம், துறந்து தியாகம் செய்கிறாள்.
பிரிந்து சென்ற தலைவன் மீண்டும் தன்னை வந்து அடைவது
வரையிலும் மிகவும் பொறுமையாக இருக்கிறாள். இவ்வாறு பல
நிலையிலும், பெண்மைக்கு உரிய தனது பண்புகளை எல்லாம்
வெளிப்படுத்தியவள் தலைவி. இதை நன்கு உணர்ந்தவன் தலைவன்.
எனவேதான், கண் நிறைந்த அழகு உடையவளாக இருந்தாலும்,
அதைவிடச் சிறந்தது - பெரியது அவளது பெண்மைத்தன்மையே
என்று குறிப்பிடுகிறான் தலைவன்.