Primary tabs
-
3.0 பாட முன்னுரை
கணிப்பொறிப் பிணையங்களின் வளர்ச்சிப்படிகளை முந்தைய பாடத்தில் படித்தோம். அலுவலகப் பணிகளிலும், வணிக நடவடிக்கைகளிலும் கணிப்பொறிப் பிணையங்கள் பெரும் பங்காற்றத் தொடங்கிய பின் அந்தந்தக் காலகட்டத்தின் தேவைகளுக்கேற்ப கணிப்பொறிப் பிணையங்கள் புதிய புதிய வடிவங்களை எடுத்தன. பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பிணையங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டன.
கணிப்பொறிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்துக்குப் புதிய ஊடகங்கள் கண்டறியப்பட்டன. பிணையங்களின் செயல்பாட்டுப் பரப்பு ஓர் அறையில் தொடங்கி அகிலம் முழுதும் என விரிந்து கொண்டே சென்றது. கணிப்பொறிகளை ஒன்றோடொன்று இணைப்பதில் பல்வேறு வகைகள் பின்பற்றப்பட்டன. மையக் கணிப்பொறிக்கும் கிளைக் கணிப்பொறிகளுக்கும் இடையேயான உறவுமுறையின் அடிப்படையில் பிணையக் கட்டுமானம் வேறுபட்டது. இணையத்தின் வருகை பிணையத் தொழில்நுட்பத்தில் புதிய கருத்துருக்களைப் புகுத்தியது. இதுபோன்ற வெவ்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணிப்பொறிப் பிணையங்களை வகைப்படுத்த முடியும்.
கணிப்பொறிப் பிணையங்களை இப்படித்தான் வகைப்படுத்த வேண்டும் என்று வரையறுக்கப்பட்ட வழிமுறை எதுவும் கிடையாது. புரிந்து கொள்வதற்கு எளிமையான முறையிலே எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்திக் கொள்ளலாம். ஒரு வகைப்பாட்டில் இடம்பெறும் குறிப்பிட்ட பிணைய வகை வேறொரு வகைப்பாட்டிலும் இடம்பெற வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாகப் பிணையக் கட்டுமான அடிப்படையில் வகைப்படுத்தப்படும் ‘நிகர்களின் பிணையம்’ (Peer-to-Peer Network) செயற்பரப்பு அடிப்படையில் வகைப் படுத்தப்படும் குறும்பரப்புப் பிணையமாக (Local Area Network) இருக்க முடியும். எத்தனை வகையான பிணையங்கள் பயன்பாட்டில் இருந்தன, இப்போது இருக்கின்றன, அவற்றின் அமைப்புமுறை மற்றும் செயல்பாட்டினை அறிந்து கொள்வதே முக்கியம். வகைப்பாடுகள் முக்கியமில்லை.
இதனை மனதில் கொண்டு, கணிப்பொறிப் பிணையங்களின் பல்வேறு வகைப்பாடுகளையும் (Classifications), ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் வகைப்படுத்தப்படும் பிணைய வகையினங்களையும் (Categories) பற்றிச் சுருக்கமாக இப்பாடத்தில் படித்தறிவோம். சிலவகைப் பிணைய அமைப்புகளைப் பற்றி வேறு தலைப்புகளில் முந்தைய பாடங்களில் ஏற்கெனவே கற்றுள்ளோம் என்பதால். அவற்றைப் பற்றி இப்பாடத்தில் சுருக்கமாக மட்டுமே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என்பதறிக.