தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- கம்பியில்லாப் பிணைய வகைகள்

  • 3.3 கம்பியில்லாப் பிணைய வகைகள் (Types of Wireless Networks)

        கணிப்பொறிகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்துக்கு கம்பிவட இணைப்பின்றிக் காற்றில் பயணிக்கும் மின்காந்த அலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை அறிவோம்.. குறிப்பாக வானலை (Radio Wave), நுண்ணலை (Microwave), அகச்சிவப்புக் கதிர்கள் (InfraRed) ஆகியவை பிணையத் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. கம்பியில்லாப் பிணையத் தகவல் பரிமாற்றத்தில் பல புதிய தொழில்நுட்பங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இவை தகவல் தொடர்பின் தொலைவு, பரிமாற்ற வேகம், கையாளும் தரவுகளின் அளவு, பயணிக்கும் பாதை ஆகியவற்றில் வேறுபடுகின்றன. இத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் பிணையங்களும் வேறுபடுகின்றன. எனினும் கம்பியிணைப்பில்லாப் பிணையங்கள் கம்பியில்லா பேன், கம்பியில்லா லேன், கம்பியில்லா மேன், கம்பியில்லா வேன் எனச் செயற்பரப்பின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுகின்றன. அத்தகைய பிணைய வகையினங்கள் பற்றி இப்பாடப் பிரிவில் காண்போம்.

    3.3.1 கம்பியில்லா பேன் (Wireless PAN)

    ’பேன்’ எனப்படும் தனிப்பரப்புப் பிணையத்தின் அமைப்பு பற்றி ஏற்கெனவே அறிவோம். அப்பிணையம் முழுக்கவும் கம்பியிணைப்பின்றிச் செயல்படும்போது அதனைக் ’கம்பியில்லா பேன்’ என அழைக்கிறோம். இத்தகு பிணையங்களில் தகவல் பரிமாற்றத்துக்கு இர்டா (IrDA), புளூடூத் (Bluetooth), கம்பியில்லா யுஎஸ்பி (Wireless USB), மீவிரி கற்றை (Ultra Wideband) போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    இர்டாவின் அகச்சிவப்புக் கதிர்கள் நேர்கோட்டிலேயே பயணிக்கும். இடைத்தடுப்புகளை ஊடுருவிச் செல்ல இயலாது. எனவே ஒரே அறைக்குள் மேசைக் கணிப்பொறி, மடிக் கணிப்பொறி, கையகக் கனிப்பொறி, பீடிஏ ஆகியவற்றை இணைத்துச் செயல்படும் தனிப்பரப்புப் பிணையத்துக்கே பயன் படுத்த முடியும். புளூடூத்தின் வானலை இடைத்தடுப்புகளை ஊடுருவியும் பயணிக்கும். அடுத்தடுத்த அறைகளிலுள்ள கணிப்பொறிகளையும் இணைக்கலாம். 30 மீட்டர் தொலைவுவரை தகவல் பரிமாற்றம் சாத்தியம்.

    மிகப்பெரிய கோப்புகளைப் பிணையத்தில் பரிமாறிக் கொள்ள புளூடூத் ஏற்றதல்ல. அத்தகு தேவைக்குக் ’கம்பியில்லா யுஎஸ்பி’ பயன்படுகிறது. தொலைவு குறையக் குறையத் தகவல் பரிமாற்ற வேகம் அதிகரிக்கும். குறைந்த தொலைவு அதிவேகத் தகவல் பரிமாற்றப் பிணையங்களில் மீவிரி கற்றைத் தொழில்நுட்பம் பயன்படுகிறது. குறுநேர (நானோ வினாடி அல்லது அதற்கும் குறைவான) குறைதிறன் உயர் அதிர்வலைத் துடிப்புகளைப் பயன்படுத்தித் தகவல் பரிமாறப்படுகிறது. கம்பியில்லா யுஎஸ்பி, மீவிரி கற்றையின் ஒரு வடிவமே.

    3.3.2 கம்பியில்லா லேன் (Wireless LAN)

        கம்பியில்லாக் குறும்பரப்புப் பிணையங்களில் ‘வைஃபி’ (Wi-Fi : Wireless Fidelity என்பதன் சுருக்கம்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சரியாகச் சொல்வதெனில் வைஃபித் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த கணிப்பொறிப் பிணையத்தைக் கம்பியில்லா லேன் என அழைக்கிறோம். வானலை மூலம் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. பெரும்பாலும் விமான முனையங்கள், இரயில் நிலையங்கள், நட்சத்திர ஓட்டல்கள், பெரிய வணிக வளாகங்கள், கல்லூரி வளாகங்கள் இவற்றில் கூடுவோர் தமது மடிக் கணிப்பொறி, கையகக் கணிப்பொறி மூலம் இணையத்தில் தொடர்பு கொண்டு இணையச் சேவைகளைப் பெறவும், இணையம் வழியாகத் தத்தமது நிறுவனப் பிணையங்களைத் தொடர்பு கொண்டு அலுவலகப் பணிகளைக் கவனிக்கவும் வைஃபித் தொழில்நுட்பம் பயன்படுகிறது.

    3.3.3 கம்பியில்லா மேன் (Wireless MAN)

    வைமாக்ஸ் (WiMAX - Worldwide Interoperability for Microwave Access) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த பிணையங்கள் ’கம்பியில்லா மேன்’ என அழைக்கப்படுகின்றன. நுண்ணலை மூலம் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. மேன் பிணையங்களில் வைமாக்ஸ் கம்பியில்லா அகல்கற்றை (Wireless Broadband) இணைப்பினை வழங்குகிறது. இப்பிணையத்தின் பயனர்கள் கம்பியிணைப்பின்றியே அகல்கற்றை இணைய இணைப்பை அனுபவிக்க முடியும். வைமாக்ஸ் 50 கிலோமீட்டர் வரை செயல்படும். பல வைஃபி பிணையங்களை இணைக்கின்ற கம்பியில்லாப் பின்புலத் தொழில்நுட்பமாகவும் (Wireless Backhaul Technology) விளங்குகிறது.

    3.3.4 கம்பியில்லா வேன் (Wireless WAN)

    ஐஇஇஇ 802.16இ மற்றும் ஐஇஇஇ 802.20 ஆகிய தரப்பாடுகளின் அல்லது தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த பிணைய அமைப்பு ‘கம்பியில்லா விரிபரப்புப் பிணையங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை வைமாக்ஸின் மேம்பட்ட வடிவங்கள் எனலாம். வைமாக்ஸ் பிணையங்களில் ஓரிடத்தில் நிலையாக இருக்கும் பயனர்களே அகல்கற்றை இணைய இணைப்பைப் பெற முடியும். ஆனால் கம்பியில்லா வேன் பிணையத்தின் பயனர்களோ நடமாடும்போதும், பயணிக்கும்போதும் அகல்கற்றை இணைய இணைப்பைப் பெற முடியும். ஐஇஇஇ 802.16இ தரப்பாடு நடமாடும் பயனர்களுக்கும், ஐஇஇஇ 802.20 தரப்பாடு கார், இரயில் போன்ற வாகனங்களில் வேகமாகப் பயணிக்கும் பயனர்களுக்கும் உரியது. மணிக்கு 250 கி.மீ. வேகப் பயணத்திலும் அகல்கற்றை இணைப்பைப் பெற முடியும்.

     

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:23:28(இந்திய நேரம்)