தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வகைப்பாட்டின் அடிப்படைகள்

  •  

    3.1 வகைப்பாட்டின் அடிப்படைகள்

    கணிப்பொறிப் பிணையங்களை பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்த முடியும். கணிப்பொறிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படும் ஊடகத்தின் அடிப்படையில் பிணையங்களை வகைப்படுத்தலாம். ஒரு பிணையம் ஓர் அறைக்குள் செயல்படுகிறதா, ஒரு கட்டடம், ஒரு வளாகத்தில் செயல்படுகிறதா, ஒரு நகரம், ஒரு நாடு அல்லது உலகளாவிய அளவில் செயல்படுகிறதா என்கிற அடிப்படையிலும் வகைப்படுத்த முடியும். இதனை செயற்பரப்பு அடிப்படையிலான வகைப்பாடு என்கிறோம். அதுபோலவே ஒரு பிணையத்தில் கணிப்பொறிகளை ஒன்றோடொன்று இணைக்கும் முறை வேறுபடலாம். ஒரே முறையில் இணைக்கப்பட்டிருந்தாலும் பிணையத்தில் இடம்பெறும் மையக் கணிப்பொறிக்கும் கிளைக் கணிப்பொறிகளுக்கும் இடையேயான உறவுமுறையில் வேறுபடலாம். எனவே பிணையங்களை இணைப்புமுறையிலும் உறவுமுறையிலும் வகைப்படுத்த முடியும்.

    தற்போது பல நிறுவனங்கள் தத்தம் பிணையங்களை இணையத்தின் ஓர் அங்கமாக மாற்றிவிட்டனர். எனினும் அவர்கள் ஈடுபட்டுள்ள வணிகத்தின் அடிப்படையில் அப்பிணையங்களை அணுக அனுமதிக்கப்படும் பயனர்கள் வேறுபடலாம். அதனடிப்படையில் பிணையங்களின் வகையினம் வேறுபடு கின்றது. இவ்வாறான பிணைய வகைப்பாடுகளை இப்பாடப் பிரிவில் காண்போம்.

    3.1.1 தகவல் பரிமாற்ற ஊடகம் (Transmission Medium)

    தகவல் பரிமாற்ற ஊடக அடிப்படையில் பிணையங்களை இருபெரும் பிரிவுகளில் அடக்கலாம்:

    1. கம்பியிணைப்புப் பிணையங்கள் (Wired Networks)
    2. கம்பியில்லாப் பிணையங்கள் (Wireless Networks)

    கம்பியிணைப்பு ஊடகங்களாக,

    (i) இணையச்சு வடம் (Co-axial Cable)
    (ii) முறுக்கிய இணை வடம் (Twisted Pair Cable)
    (iii) ஒளியிழை வடம் (Optical Fibre Cable)

    ஆகியவை பயன்படுத்தப்பட்ட போதிலும், கேட்-5 எனப்படும் முறுக்கிய இணை வடங்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொள்ளும் ‘ஈதர்நெட்’ பிணையங்களும், ஒளியிழை வடங்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொள்ளும் அதிவேக ஒளி யிழைப் பிணையங்களுமே தற்காலத்தில் பெருமளவு பயன்பாட்டில் உள்ளன.

    கம்பியில்லா தகவல் தொடர்புக்கு,

    (i) வானலை (Radio-wave)
    (ii) அகச்சிவப்புக் கதிர் (Infrared Ray)
    (iii) நுண்ணலை (Microwave)
    (iv) லேசர் கதிர் (Laser Ray)

    ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும் என்கிற போதும், அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தும் ‘இர்டா’ (IrDA), வானலைகளைப் பயன்படுத்தும் ‘புளூடூத்’ (BlueTooth), ‘வைஃபி’ (Wi-Fi), ‘வைமாக்ஸ்’ (WiMAX) ஆகிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் செயல்படும் கணிப்பொறிப் பிணையங்களே பயன்பாட்டில் உள்ளன.

        இவற்றுள் கம்பியிணைப்புப் பிணையங்கள் பற்றி முந்தைய பாடங்களில் படித்திருக்கிறோம். கம்பில்லாப் பிணையங்கள் (Wireless Networks) பற்றி இந்தப் பாடத்தில் இனிவரும் பாடப் பிரிவில் விரிவாகப் படிப்போம்.

    3.1.2 செயற்பரப்பு (Functional Area)

    ஒரு கணிப்பொறிப் பிணையம் சிறியதா, பெரியதா என்பது அப்பிணையத்தில் எத்தனை கணிப்பொறிகள் பிணைக்கப்பட்டுள்ளன என்பதைக் கொண்டோ, அப்பிணையம் எந்தப் பரப்புவரை விரிந்துள்ளது என்பதைக் கொண்டோ முடிவு செய்யலாம். பெரும்பாலும் இந்த இரண்டும் ஒன்றையொன்று சார்ந்ததே. அதாவது குறைந்த எண்ணிக்கையிலான கணிப்பொறிகளைக் கொண்ட பிணையம் குறுகிய பரப்பிலேயே இயங்கும். ஏராளமான கணிப்பொறிகளைக் கொண்ட பிணையம் பெரும்பாலும் விரிந்த பரப்பில் இயங்குவதாகவே இருக்கும். இதற்கு விதிவிலக்கான பிணையங்கள் மிகவும் அரிதே.

    செயற்பரப்பின் அடிப்படையில் கணிப்பொறிப் பிணையங்களை வகைப் படுத்தலே முதன்மையான வகைப்பாடாகக் கருதப்படுகிறது. பிற வகைப்பாடுகளைக் கணிப்பொறி வல்லுநர்கள் குறிப்பிட்ட தருணங்களில் மட்டுமே மேற்கொள்கின்றனர். மேலும் எந்தவொரு வகைப்பாட்டின் கீழும் இடம்பெறும் ஒரு பிணைய வகையினத்தைப் பெரும்பாலும் செயற்பரப்பின் அடிப்படையிலான வகைப்பாட்டில் ஓர் உள்-வகையினமாக (Sub-Category) வகைப்படுத்திவிட முடியும்.

    முன்பே குறிப்பிட்டபடி, ஒரு பிணையத்தின் செயற்பரப்பு ஓர் அறைக்குள் அடங்கிவிடலாம். ஒரு கட்டடத்தில் செயல்படும் ஒரு நிறுவனத்தின் பல பணிப் பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கலாம். ஒரு பெரிய வளாகத்தில் பல துறைகளுக்கான கட்டடங்களைக் கொண்ட ஒரு பல்கலைக் கழகம் அல்லது ஒரு பெரிய நிறுவனத்துக்கான பிணையமாக இருக்கலாம். ஒரு பெருநகரில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் கிளைகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தின் கிளைப் பிணையங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விரிந்த பிணையமாக இருக்கலாம். இதே போன்று ஒரு நாடு முழுக்க அல்லது பல நாடுகளில் அல்லது அனைத்துலகும் விரிந்து பரந்த பிணையங்களும் உள்ளன. பூமிக் கோளுக்கும் அப்பால் பல கோள்களையும் உள்ளடக்கிய மீப்பெரும் பிணையங்களும் நடைமுறை சாத்தியமே. செயற்பரப்பு அடிப்படையிலான பிணைய வகையினங்களை அடுத்துவரும் பாடப் பிரிவில் விரிவாகக் காண்போம்.

    3.1.3இணைப்புமுறை (Topology)

    ஒரு பிணையத்தில் கணிப்பொறிகளை ஒன்றோடொன்று பிணைக்கின்ற ’இணைப்புமுறை’ (Topology) பல வகைப்படும். இணைப்புமுறையின் அடிப்படையில் பிணையங்களை இவ்வாறு வகைப்படுத்த முடியும்:

    1. பாட்டைப் பிணையங்கள் (Bus Networks): ஒரு நீண்ட வடத்தில் கணிப்பொறிகள் ஆங்காங்கே இணைக்கப்பட்டிருக்கும்.
    2. வளையப் பிணையங்கள் (Ring Networks): இரு முனைகளும் பிணைக்கப்பட்ட வளைய வடிவிலான வடத்தில் கணிப்பொறிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
    3. நட்சத்திரப் பிணையங்கள் (Star Networks): ஒரு மையப்புள்ளியான குவியத்தில் (Hub) ஆரங்களைப்போல் பிரியும் வடங்களில் கணிப்பொறிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
    4. வலைப்பின்னல் பிணையங்கள் (Mesh Networks): ஒவ்வொரு கணிப்பொறியும் மற்ற எல்லாக் கணிப்பொறிகளுடனும் குறுக்கும் நெடுக்குமாய்ப் பிணைக்கப்பட்டிருக்கும்.
    5. கலப்பினப் பிணையங்கள் (Hybrid Networks): ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புமுறைகள் கலந்த பிணையங்கள்.

    இவைதவிர ’மரவுரு இணைப்புமுறை’ (Tree Topology), ‘படிநிலை இணைப்புமுறை’ (Hierarchial Topology), ‘கலநிலை இணைப்புமுறை’ (Cellular Topology) ஆகிய இணைப்புமுறைகளும் உள்ளன. தற்காலத்தில் நட்சத்திர இணைப்புமுறை மற்றும் படிநிலை இணைப்புமுறையிலான பிணைய வகைகளே பெருமளவு பயன்பாட்டில் உள்ளன. இணைப்புமுறைகள் பற்றி முந்தைய பாடத்தில் விரிவாகப் படித்துள்ளோம்.

    3.1.4பிணையக் கட்டுமானம் (Network Architecture)

    ஒரு பிணையத்திலுள்ள மையக் கணிப்பொறிக்கும் கிளைக் கணிப்பொறிகளுக்கும் இடையே உள்ள உறவுமுறை, பணிகளைப் பகிர்ந்து கொள்ளும் தன்மை ஆகிய வற்றின் அடிப்படையில் தற்காலக் கணிப்பொறிப் பிணையங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

    1. நுகர்வி - வழங்கிப் பிணையங்கள் (Client - Server Networks): வழங்கி இயக்க முறைமை, தரவுத்தளம், பயன்பாட்டு மென்பொருள்களைக் கொண்ட மையக் கணிப்பொறியையும், சொந்தக் கணிப்பொறி இயக்க முறைமை, பயன்பாட்டு நுகர்வி மென்பொருள் கூறுகளைக் கொண்ட கிளைக் கணிப்பொறிகளையும் கொண்ட பிணைய அமைப்புமுறை. வேலைப்பளுவை நுகர்வியும் வழங்கியும் பகிர்ந்து கொள்கின்றன.
    2. நிகர்களின் பிணையம் (Peer-to-peer Network): தனித்துச் செயல்படும் சொந்தக் கணிப்பொறிகளைக் கொண்டது. மையக் கணிப்பொறி, வழங்கிக் கணிப்பொறி என எதுவும் கிடையாது. அனைத்துக் கணிப்பொறிகளும் சம உரிமையோடு பிணையத்தில் பங்கு கொள்கின்றன. பயனர்கள் வன்பொருள், மென்பொருள் வளங்களைத் தமக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.
    3. பல்லடுக்குப் பிணையங்கள் (Multitier Networks): நுகர்வி - வழங்கி அமைப்பு முறையின் மேம்பட்ட வடிவம். வழங்கி இயக்க முறைமை, தரவுத்தளம், பயன்பாட்டு மென்பொருள்களுக்கென தனித்தனி வழங்கிக் கணிப்பொறிகளைக் கொண்டது.

    மேற்கண்ட பிணைய அமைப்பு முறைகளைப் பற்றி ஏற்கெனவே முந்தைய பாடத்தில் விரிவாகப் படித்துள்ளோம். கோப்பு வழங்கி - கணுக்கள் அமைப்புமுறை தற்போது பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லை

    3.1.5வலைத் தொழில்நுட்பம் (Web Technology)

    வைய விரிவலைத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிணையங்களை இப்பிரிவில் சேர்க்கிறோம். வைய விரிவலை பற்றி ஏற்கெனவே நாம் அறிவோம். வலை வழங்கி (Web Server) எனப்படும் மையக் கணிப்பொறியில், தகவல்கள் மீவுரை மொழியில் உருவாக்கப்பட்ட வலைப் பக்கங்களில் சேமிக்கப்பட்டிருக்கும். தனித்தியங்கும் கிளைக் கணிப்பொறிகள் வலை உலாவி (Web Browser) என்னும் நுகர்வி மென்பொருளின் மூலம் வலை வழங்கியிலுள்ள தகவல்களைப் பெறும். வழங்கியில் தரவுத்தளங்களில் சேமிக்கப்பட்ட தகவல்களையும் நுகர்விகள் வலைப்பக்கங்கள் மூலமாகவே பெறும். இத்தகைய பிணையங்களை அணுக அனுமதிக்கப்படும் பயனர்களின் அடிப்படையில் இவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

    1. அக இணையம் (Intranet): ஒரு நிறுவனத்தின் அகச் செயல்பாடுகளுக்காக அமைக்கப்படுவது. அந்த நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே அணுக முடியும். வெளியார் எவரும் இப்பிணையத்தை அணுகித் தகவல் எதையும் பெற முடியாது. 
    2. புற இணையம் (Extranet): நிறுவனத்தின் பணியாளர்கள் மட்டுமின்றி, அந்த நிறுவனத்துக்கு மூலப்பொருள்களை வழங்குவோர், அந்த நிறுவனத்தின் பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் முகவர்கள், அதன் வாடிக்கையளர்கள் ஆகியோர் அணுகுவதற்கு அனுமதி தரப்படும். அந்நிறுவனத்தோடு தொடர்பில்லாத பொதுமக்கள் அணுக இயலாது.
    3. பொது இணையம் (Internet): பொது இணையம் என்பது இணையத்தையே குறிக்கிறது. எந்த நிறுவனத்துக்கும் சொந்தமானதல்ல. இணைய இணைப்புள்ள எவரும் அணுகித் தகவல் பெறமுடியும்.

    அக இணையம், புற இணையம் பற்றித் தனியாக ஒரு பாடத்தில் படிக்க இருக்கிறோம். அக இணையம், புற இணையம் ஆகியவை இணையத்தின் அங்கமாக இருக்க வேண்டியதில்லை. அப்படி இருப்பின் அவை ‘மெய்நிகர் தனியார் பிணையம்’ என்னும் சிறப்பு வகையில் அடங்கும். மெய்நிகர் தனியார் பிணையங்கள் பற்றி இதே பாடத்தில் இனிவரும் பாடப் பிரிவில் படிப்போம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 09:50:18(இந்திய நேரம்)