Primary tabs
-
3.4 தனிச்சிறப்புப் பிணையங்கள்
தனிச்சிறப்புப் பிணையங்களை ஏற்கெனவே நாம் பார்த்த பிணைய வகைகளுள் ஒன்றாக வகைப்படுத்த முடியும் என்றாலும் அவற்றின் பயன்பாடு அல்லது செயல்பாட்டின் அடிப்படையில் தனிச்சிறப்பான பிணையம் என வகைப் படுத்துகிறோம். இவ்வாறு தனிச்சிறப்பான பயன்பாடு அல்லது செயல்பாடு கொண்ட பிணையங்கள் பல உள்ளன. அவற்றுள் (1) மதிப்பேற்று பிணையம் (Value Added Network) (2) மெய்நிகர் தனியார் பிணையம் (Virtual Private Network) (3) சேமிப்பகப் பிணையம் (Storage Area Network) என்னும் மூன்று பிணைய வகைகளைப் பற்றி இப்பாடப் பிரிவில் சுருக்கமாகக் காண்போம்.
3.4.1 மதிப்பேற்று பிணையங்கள் (Value Added Networks - VAN)
’வான்’ (VAN) என அழைக்கப்படும் மதிப்பேற்று பிணையங்கள் கட்டமைப்பு முறையில் விரிபரப்புப் பிணையத்தை (WAN) ஒத்தவை. விரிபரப்புப் பிணையத்தின் முதுகெலும்பான தகவல் தொடர்புக் கட்டமைப்பைக் கொண்டதாக இருக்கும். அதாவது ஒரு நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களை இணைக்கும் வண்ணம் ஒளியிழை வடங்கள், நுண்ணலை போன்ற தகவல் தொடர்பு ஊடகங் களையும், பிணையத் தகவல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் திறன்மிக்க திசைவிகளையும் (Routers) கொண்ட பிணையக் கட்டமைப்பை அரசு அல்லது தனியார் நிறுவனம் நிறுவியிருக்கும். இத்தகைய விரிபரப்புப் பிணையக் கட்டமைப்பே ‘மதிப்பேற்று பிணையம்’ என்று அழைக்கப்படுகிறது. தம் நிறுவனச் செயல்பாடுகளுக்காக ஒரு விரிபரப்புப் பிணையத்தை நிறுவ வேண்டிய தேவையுடைய எந்தவொரு நிறுவனமும் மேற்கண்ட மதிப்பேற்று பிணையத்தை உரிய கட்டணம் செலுத்தித் தம் நிறுவனப் பிணையத் தகவல் தொடர்புக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். தனியாக ஒரு விரிபரப்புப் பிணையத்தை நிறுவிப் பராமரிக்க ஆகும் செலவைவிட மதிப்பேற்று பிணையத்துக்காக ஆகும் கட்டணம் மிகக் குறைவாகவே இருக்கும். மதிப்பேற்று பிணையத்தில் உறுப்பு நிறுவனங்கள் புதிதாகச் சேரச் சேர அதன் மதிப்பு கூடுகிறது. எனவே இப்பெயர். ஒரு மதிப்பேற்று பிணையத்தில் உறுப்பினர்களாக இருக்கும் இருவேறு நிறுவனங்கள் தமக்குள்ளே தகவல் பரிமாறிக்கொள்ள முடியும்.
தகவல்கள் அனைத்தும் மின்னணு வடிவில் மிகவும் பாதுகாப்பாகப் பரிமாறிக் கொள்ளப்படும். இரு நிறுவங்களுக்கிடையே விலைப்பட்டியல் (Quotation), கொள்முதல் கோரிக்கை (Purchase Order), விலைச்சிட்டை (Invoice), வினியோகச் சிட்டை (Delivery Challan), ஏற்புச் சான்று (Acknowledgement) மட்டுமின்றி, பணம் செலுத்துகையும் (Payment) மின்னணுத் தகவலாக மதிப்பேற்று பிணையம் வழியாகவே நடைபெற்று முடிந்துவிடும். வணிக நடைவடிக்கைகளில் கால விரையம் பெருமளவு குறைக்கப்படுகிறது. தட்டச்சிட்டுத் தாள்வழிப் பரிமாறுவதில் ஏற்படும் பிழைகள் தவிர்க்கப்படுகின்றன. பணப் பரிமாற்றத்தில் ஏற்படும் முறைகேடுகள் களையப்படுகின்றன. ‘மின்வணிகம்’ (E-Commerce) தோன்றி வளர்ந்தது மதிப்பேற்று பிணையங்கள் வழியாகத்தான் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தகவலாகும். மின்வணிகம் பற்றிப் பின்வரும் பாடத்தில் விரிவாகப் படிப்போம்.
3.4.2 மெய்நிகர் தனியார் பிணையங்கள் (Virtual Private Networks - VPN)
தம் நிறுவனச் செயல்பாடுகளுக்காக ஒரு பிணையத்தை அமைக்க விரும்பும் நிறுவனம் மூன்று வழிகளில் அதனை நிறுவலாம்.
-
தன் சொந்தப் பிணையக் கட்டமைப்புகளை (திசைவிகள், தகவல் தொடர்பு ஊடகங்கள்) ஏற்படுத்திக் கொள்ளலாம். செயற்பரப்புக் குறைவான லேன் அமைப்பெனில் இது எளிது. நாடு முழுக்கப் பரந்த விரிபரப்புப் பிணைய அமைப்பெனில் செலவு மிகவும் அதிகமாகும்.
-
பல நகரங்களில் விரிந்த விரிபரப்புப் பிணையம் எனில் மதிப்பேற்று பிணையக் கட்டமைப்பைக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனினும் மதிப்பேற்று பிணையத்தில் உறுப்பினர் அல்லாத நிறுவனங்களோடும் தகவல் தொடர்பு கொள்ள வேண்டிய பிணைய அமைப்பை நிறுவுவது இயலாமல் போய்விடும். உலகம் முழுக்கப் பரந்த ஒரு பிணைய அமைப்பை மதிப்பேற்று பிணையம் வழியே அமைப்பது சாத்தியமில்லை.
-
இணையம் என்பது உலகம் முழுக்கப் பரந்து கிடக்கிறது. அந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்துக்கான பிணையத்தை மிக எளிதாக நிறுவிட முடியும். நிறுவனத்துக்கென ஒரு வலையகம் (Website) நிறுவிப் பராமரித்தால் போதும். பிணையத்தின் பயனர்கள் எவரும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இணைய இணைப்பு மூலம் நிறுவனப் பிணையத்தை அணுக முடியும். கடவுச்சொல் மூலம் பயனர் அல்லாதோர் பிணையத்தை அணுக முடியாமல் தடுக்க முடியும்.
மதிப்பேற்று பிணையம் அல்லது இணையக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு அமைக்கப்படும் ஒரு தனியார் நிறுவனப் பிணையத்தை ‘மெய்நிகர் தனியார் பிணையம்’ என்று அழைக்கிறோம். பலருக்கும் பொதுவான பிணையக் கட்டமைப்பில் செயல்படுவதால் அதனை மெய்யான பொருளில் ’தனியார்’ (Private) பிணையமாகக் கருத முடியாது. ஆனாலும் பிணையத்தைப் பயனர் அல்லாதோர் எவரும் அணுக முடியாது என்பதால் அது தனியார் பிணையமே. ’மெய்நிகர்’ (Virtual) ‘தனியார்’ (Private) பிணையம் என்ற பெயருக்கான காரணம் இப்போது புரிகிறதா? இணையம் வழியான மெய்நிகர் தனியார் பிணையங்களை நிறுவுவதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. செலவு மிகவும் குறைவு. தேவையான போது பிணையத்தை விரிவாக்குவதும் எளிது. ஆனால் மிகவும் பாதுகாப்புக் குறைவானது. இணையம் ஒரு திறந்த பிணையம். எனவே தீங்கெண்ணம் கொண்ட அத்துமீறிகள் (Hackers) பிணையத்தின் உள்ளே நுழைந்து பிணையத்துக்குக் கேடு விளைவிக்கவும், நிறுவனத் தகவல்களைக் களவாடவும் வாய்ப்புள்ளது. குறிப்பாகப் பணப் பரிமாற்றம் நடைபெறும் பிணையங்களுக்கு ஆபத்து அதிகம். எனவே இத்தகைய பிணையங்களைப் பாதுகாக்க தனிச்சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகு பாதுகாப்புக்குத் ’தீச்சுவர்த் தொழில்நுட்பம்’ (Firewall Technology) பயன்படுகிறது. இன்றைக்கு ஏராளமான நிறுவனங்கள் இத்தகைய பாதுகாப்புடைய மெய்நிகர் தனியார் பிணையங்களைக் கொண்டுள்ளன.
3.4.3 சேமிப்பகப் பிணையங்கள் (Storage Area Networks - SAN)
கருத்துரு அடிப்படையில் இது மதிப்பேற்று பிணையம் போன்றதே. மிகப்பெரிய நிறுவனங்கள் ஏராளமான தரவுகளைச் சேமித்துப் பராமரிக்க வேண்டியிருக்கும். தரவுச் சேமிப்பு சாதனங்கள் மற்றும் அவற்றைக் கையாளும் மென்பொருள்களைப் பழுதின்றிப் பராமரிப்பது கடினமான பணியாகும். அதற்கான செலவும் அதிகம். கணிப்பொறித் தகவல்கள் மின்காந்த வட்டுகள், மின்காந்த நாடாக்கள், ஒளி வட்டுகளில் சேமிக்கப்படுகின்றன என்பதை அறிவீர்கள். மிக அதிகமான தகவல்கள் எனில் ஒரு வட்டு அல்லது ஒரு நாடா போதாது. வட்டு அணிகள் (Disk Arrays), நாடா நூலகங்கள் (Tape Libraries), ஒளிவட்டுப் பெட்டிகள் (Optical Jukeboxes) அடங்கிய தனிச்சிறப்பான சேமிப்புக் கிடங்குகளும், பிணையக் கணிப்பொறிகள் அத்தரவுகளைக் கையாளத் தனிச்சிறப்பான மென்பொருளும் கொண்ட ஒரு சேமிப்பகக் கட்டமைப்புத் தேவை. இக்கட்டமைப்பே ‘சேமிப்பகப் பிணையம்’ (Storage Area Network - SAN) என்று அழைக்கப்படுகிறது.
இத்தகைய தனிச்சிறப்பான சேமிப்பகக் கட்டமைப்புகளைப் பல தனியார் நிறுவனங்கள் அமைத்துப் பராமரித்து வருகின்றன. அதிக அளவில் தரவுகளைக் கையாளும் நிறுவனங்கள் கட்டணம் செலுத்திச் சேமிப்பகப் பிணையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஒரு பிணையத்தின் தரவுச் சேமிப்புப் பகுதி மட்டும் அப்பிணையத்தின் அங்கமாக இல்லாமல் வேறெங்கோ வேறேதோ நிறுவனத்தின் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கும். ஆனால் பிணையத்தின் பயனர்கள், தரவுகள் புறத்தே சேமிக்கப்பட்டுள்ளன என்பதை உணரார். சேமிப்பகம் பிணையத்தோடு ஓரங்கமாக இனைக்கப்பட்டுள்ளது போன்றே உணர்வர். ’பிணையத்தோடு இணைக்கப்பட்ட சேமிப்பு’ (Network Attached Storage - NAS) என்கிற தொழில்நுட்பத்தின் குறைபாடுகளைக் களையவே ‘சேமிப்பகப் பிணையம்’ என்னும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I1.கம்பியில்லாத் தனிப்பரப்புப் பிணையம் பற்றிக் குறிப்பு வரைக.2.கம்பியில்லாக் குறும்பரப்புப் பிணையத்தை (வைஃபி பிணையங்களை) எங்கெல்லாம் பயன் படுத்தலாம்?3.வைமாக்ஸ் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?4.கம்பியில்லா வேன் தொழில்நுட்பத்தை வைமாக்ஸ் தொழில்நுட்பத்தி லிருந்து வேறுபடுத்திக் காட்டுக.5.மதிப்பேற்று பிணையங்களின் செயல்பாட்டை விளக்குக6.மெய்நிகர் பிணையங்கள் பற்றி விளக்கிக் கூறுக.7.சேமிப்பகப் பிணையங்கள் பற்றிச் சிறு குறிப்பு வரைக. -