Primary tabs
-
3.5
தொகுப்புரை
-
கணிப்பொறிப் பிணையங்களைத் தகவல் பரிமாற்ற ஊடகம், செயற்பரப்பு, பிணைய இனைப்புமுறை, பிணையக் கட்டுமானம் போன்ற பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தலாம்.
-
தகவல் பரிமாற்ற ஊடக அடிப்படையில் பிணையங்களை இருபெரும் பிரிவுகளில் அடக்கலாம்: (1) கம்பியிணைப்புப் பிணையங்கள் (Wired Networks) (2) கம்பியில்லாப் பிணையங்கள் (Wireless Networks).
-
கம்பியிணைப்பு வகையில் கேட்-5 எனப்படும் முறுக்கிய இணை வடங்கள் மூலம் தகவல் பரிமாறிக்கொள்ளும் ‘ஈதர்நெட்’ பிணையங்களும், ஒளியிழை வடங்கள் மூலம் தகவல் பரிமாறிக்கொள்ளும் அதிவேக ஒளியிழைப் பிணையங்களுமே தற்காலத்தில் பெருமளவு பயன்பாட்டில் உள்ளன.
-
பிணையத்தில் கம்பியில்லாத் தகவல் தொடர்புக்கு (i) வானலை (Radio-wave) (ii) அகச்சிவப்புக் கதிர் (Infrared Ray) (iii) நுண்ணலை (Microwave) (iv) லேசர் கதிர் (Laser Ray) ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும்.
-
அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தும் ‘இர்டா’ (IrDA), வானலையைப் பயன்படுத்தும் ‘புளூடூத்’ (BlueTooth), ‘வைஃபி’ (Wi-Fi), ‘வைமாக்ஸ்’ (WiMAX) ஆகிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் செயல்படும் கணிப்பொறிப் பிணையங்களே பயன்பாட்டில் உள்ளன.
-
ஒரு பிணையத்தில் கணிப்பொறிகளை ஒன்றோடொன்று பிணைக்கின்ற இணைப்புமுறையின் (Topology) அடிப்படையில் பாட்டைப் பிணையங்கள், வளையப் பிணையங்கள், நட்சத்திரப் பிணையங்கள், வலைப்பின்னல் பிணையங்கள், கலப்பினப் பிணையங்கள் என வகைப்படுத்தலாம்
-
ஒரு பிணையத்திலுள்ள மையக் கணிப்பொறிக்கும் கிளைக் கணிப்பொறி களுக்கும் இடையே உள்ள உறவுமுறை, பணிகளைப் பகிர்ந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தற்காலக் கணிப்பொறிப் பிணையங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். (1) நுகர்வி - வழங்கிப் பிணையம் (2) நிகர்களின் பிணையம் (3) பல்லடுக்குப் பிணையம்.
-
வைய விரிவலைத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிணையங்களை அவற்றை அணுக அனுமதிக்கப்படும் பயனர்களின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். (1) அக இணையம் (2) புற இணையம் (3) பொது இணையம்.
-
ஒரு கணிப்பொறிப் பிணையத்தின் செயற்பரப்பு ஓர் அறைக்குள் அடங்கி விடலாம். ஒரு கட்டடத்தில் செயல்படலாம். பல கட்டடங்களை உள்ளடக்கிய ஒரு வளாகத்தில் செயல்படலாம். ஒரு நகரம் முழுக்க அல்லது நாடு முழுக்கப் பரவியிருக்கலாம். உலகம் முழுக்க விரிந்து பரந்த பிணையங்களும் உள்ளன. பூமிக் கோளுக்கும் அப்பால் பல கோள்களையும் உள்ளடக்கிய மீப்பெரும் பிணையங்களும் நடைமுறை சாத்தியமே.
-
ஓர் அறைக்குள் அல்லது ஒரு வீட்டிற்குள் செயல்படுகின்ற, ஒருவரின் தனிப்பட்ட கணிப்பொறிச் சாதனங்களை இணைக்கின்ற பிணையம் தனிப் பரப்புப் பிணையம் ஆகும். மேசைக் கணிப்பொறி, மடிக்கணிப்பொறி, கையகக் கணிப்பொறி, பீடிஏ (PDA - Personal Digital Assistant), அச்சுப்பொறி, படப்பிடிப்பி, செல்பேசி போன்ற சாதனங்களைக் கொண்டிருக்கும்.
-
தனிப்பரப்புப் பிணையத்தில் கணிப்பொறிச் சாதனங்கள் ஒரு குவியத்தில் (Hub), ஈதர்நெட் கேட்-5 வடத்தால் இணைக்கப்பட்டிருக்கும். 10 மீட்டர் தொலைவுவரை தகவல் பரிமாற்றம் சாத்தியம்.
-
ஒரு கட்டடத்தில் பல அறைகளில் அல்லது பல தளங்களில் செயல்படும் ஒர் அலுவலகம் அல்லது நிறுவனத்தின் பல்வேறு பணிப்பிரிவுகளில் இயங்கும் கணிப்பொறிகளை இணைத்து உருவாக்கப்படும் பிணையம் குறும்பரப்புப் பிணையம் ஆகும்.
-
குறும்பரப்புப் பிணையத்தில் கணிப்பொறிகளைப் பிணைக்க ஈதர்நெட் கேட்-5 வடங்கள், குவியம் (Hub), தொடர்பி (Switch) போன்ற பிணைய இணைப்புச் சாதனங்கள் பயன்படுத்தப்படும். பிணையத்தின் ஒருபகுதியோ அல்லது முழுமையுமோ கம்பியில்லா இணைப்பிலும் செயல்படலாம். 100 மீட்டர் தொலைவுவரை தகவல் பரிமாற்றம் சாத்தியம்.
-
பல கட்டடங்களை உள்ளடக்கிய, சில கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஒரு பரந்த வளாகத்தில் செயல்படும் பிணையம் வளாகப் பிணையம் ஆகும். பெரும்பாலும் பல லேன்களை ஒன்றிணைத்த பிணையமாக இருக்கும். லேன்கள் மைய இணைப்புச் சாதனத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுவரை இருக்கலாம்.
-
ஒரு பெரிய நகர் முழுதும் பரந்து விரிந்த பிணையம் மாநகர்ப் பிணையம் ஆகும். தொடர்பி, இணைவி, திசைவி போன்ற பிணைய விரிவாக்கச் சாதனங்கள் மூலம் ஒன்றிணைக்கப்பட லேன்கள், வளாகப் பிணையங்களை உள்ளடக்கியது. 10 கிலோமீட்டர் தொலைவுவரை செயல்படும்.
-
விரிபரப்புப் பிணையம் ஒரு மாநிலம் அல்லது ஒரு நாட்டில் பல்வேறு பெருநகரங்களில் செயல்படும் லேன், கேன், மேன் பிணையங்களை உள்ளடக்கியது. பிணையங்கள் திறன்மிக்க திசைவிகளால் ஒன்றிணைக்கப் படுகின்றன. விரிபரப்புப் பிணையங்கள் தகவல் போக்குவரத்துக்குப் பொதுத் தொலைதகவல் தொடர்புக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றன. நூறு கிலோமீட்டர் முதல் சில ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு வரையிலும் தகவல் பரிமாற்றம் சாத்தியம்.
-
விரிபரப்புப் பிணையத்தின் விரிந்த வடிவமே உலகளாவிய பிணையமாகும். பல விரிபரப்புப் பிணையங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கலாம். உலகளாவிய பொதுத் தகவல் தொடர்புக் கட்டமைப்பின் மூலம் பிணைக்கப்பட்டது. பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவுவரைக்கும்கூட விரிந்து பரந்திருக்கும். இன்றைய இணையமே உலகளாவிய பிணையத்துக்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.
-
தனிப்பரப்புப் பிணையம் முழுக்கவும் கம்பியிணைப்பின்றிச் செயல்படும் போது அதனைக் ’கம்பியில்லா பேன்’ என அழைக்கிறோம். இவற்றில் தகவல் பரிமாற்றத்துக்கு இர்டா (IrDA), புளூடூத் (Bluetooth), கம்பியில்லா யுஎஸ்பி (Wireless USB), மீவிரி கற்றை (Ultra Wideband) போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
-
இர்டாவின் அகச்சிவப்புக் கதிர்கள் நேர்கோட்டிலேயே பயணிக்கும். இடைத்தடுப்புகளை ஊடுருவிச் செல்ல இயலாது. புளூடூத்தின் வானலை இடைத்தடுப்புகளை ஊடுருவியும் பயணிக்கும். மிகப்பெரிய கோப்புகளைப் பரிமாறிக் கொள்ள புளூடூத் ஏற்றதல்ல. அத்தகு தேவைக்குக் கம்பியில்லா யுஎஸ்பி பயன்படுகிறது. குறைந்த தொலைவு அதிவேகத் தகவல் பரிமாற்றப் பிணையங்களில் மீவிரி கற்றைத் தொழில்நுட்பம் பயன்படுகிறது.
-
வைஃபித் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த கணிப்பொறிப் பிணையத்தைக் ’கம்பியில்லா லேன்’ என அழைக்கிறோம்.
-
விமான முனையங்கள், இரயில் நிலையங்கள், நட்சத்திர ஓட்டல்கள், வணிக வளாகங்கள், கல்லூரி வளாகங்கள் இவற்றில் கூடுவோர் தமது மடிக் கணிப்பொறி, கையகக் கணிப்பொறி மூலம் இணையத்தில் தொடர்பு கொண்டு இணையச் சேவைகளைப் பெறவும், இணையம் வழியாகத் தத்தமது நிறுவனப் பிணையங்களைத் தொடர்பு கொண்டு அலுவலகப் பணிகளைக் கவனிக்கவும் வைஃபித் தொழில்நுட்பம் பயன்படுகிறது.
-
வைமாக்ஸ் (WiMAX - Worldwide Interoperability for Microwave Access) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த பிணையங்கள் ’கம்பியில்லா மேன்’ என அழைக்கப்படுகின்றன. இப்பிணையத்தின் பயனர்கள் கம்பியிணைப்பின்றியே அகல்கற்றை இணைய இணைப்பை அனுபவிக்க முடியும். வைமாக்ஸ் 50 கிலோமீட்டர் வரை செயல்படும்.
-
ஐஇஇஇ 802.16இ மற்றும் ஐஇஇஇ 802.20 ஆகிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த பிணைய அமைப்பு ‘கம்பியில்லா விரிபரப்புப் பிணையங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
-
வைமாக்ஸ் பிணையங்களில் ஓரிடத்தில் நிலையாக இருக்கும் பயனர்களே அகல்கற்றை இணைய இணைப்பைப் பெற முடியும். ஆனால் கம்பியில்லா வேன் பிணையத்தின் பயனர்களோ நடமாடும்போதும், வாகனத்தில் பயணிக்கும்போதும் அகல்கற்றை இணைய இணைப்பைப் பெற முடியும்.
-
ஐஇஇஇ 802.16இ தரப்பாடு நடமாடும் பயனர்களுக்கும், ஐஇஇஇ 802.20 தரப்பாடு கார், இரயில் போன்ற வாகனங்களில் வேகமாகப் பயணிக்கும் பயனர்களுக்கும் உரியது. மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்போதும் அகல்கற்றை இணைய இணைப்பைப் பெற முடியும்.
-
மதிப்பேற்று பிணையங்கள் விரிபரப்புப் பிணையத்தின் முதுகெலும்பான தகவல் தொடர்புக் கட்டமைப்பைக் கொண்டதாக இருக்கும். இப்பிணையக் கட்டமைப்பை அரசு அல்லது தனியார் நிறுவனம் நிறுவியிருக்கும். எந்தவொரு நிறுவனமும் மேற்கண்ட மதிப்பேற்று பிணையக் கட்டமைப்பை உரிய கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு மதிப்பேற்று பிணையத்தில் உறுப்பினர்களாக இருக்கும் இருவேறு நிறுவனங்கள் தமக்குள்ளே தகவல் பரிமாறிக்கொள்ள முடியும். ‘மின்வணிகம்’ (E-Commerce) தோன்றி வளர்ந்தது மதிப்பேற்று பிணையங்கள் வழியாகத்தான்.
-
மதிப்பேற்று பிணையம், இணையம் போன்ற பொதுப் பிணையக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தனியார் பிணையத்தை ‘மெய்நிகர் தனியார் பிணையம்’ என்று அழைக்கிறோம். இணையம் வழியே மெய்நிகர் தனியார் பிணையங்களை நிறுவுவதும் பராமரிப்பதும் எளிது. செலவு மிகவும் குறைவு. இத்தகைய பிணையங்களைப் பாதுகாக்கத் ’தீச்சுவர்’ (Firewall) போன்ற தனிச்சிறப்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
-
மிகப்பெரிய நிறுவனங்கள் ஏராளமான தரவுகளைச் சேமித்துப் பராமரிக்க வேண்டியிருக்கும். அதற்கு ஏராளமான வட்டுகள், நாடாக்கள் அடுக்கி வைக்கப்பட்ட தனிச்சிறப்பான சேமிப்புக் கிடங்குகளும், அத்தரவுகளைக் கையாளத் தனிச்சிறப்பான மென்பொருளும் கொண்ட ஒரு சேமிப்பகக் கட்டமைப்புத் தேவை. இத்தகைய தனிச்சிறப்பான சேமிப்பகக் கட்டமைப்புகளைப் பல தனியார் நிறுவனங்கள் அமைத்துப் பராமரித்து வருகின்றன. இவற்றைச் சேமிப்பகப் பிணையங்கள் என்கிறோம். அதிக அளவில் தரவுகளைக் கையாளும் நிறுவனங்கள் கட்டணம் செலுத்திச் சேமிப்பகப் பிணையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
-