தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- செயற்பரப்புப் பிணைய வகைகள்

  • 3.2 செயற்பரப்புப் பிணைய வகைகள்

    கணிப்பொறிப் பிணையங்களைச் செயற்பரப்பின் அடிப்படையில் ஆறு வகையாகப் பிரிக்க முடியும்

    1. தனிப்பரப்புப் பிணையங்கள் (Personal Area Networks - PAN).
    2. குறும்பரப்புப் பிணையங்கள் (Local Area Networks - LAN).
    3. வளாகப் பரப்புப் பிணையங்கள் (Campus Area Networks - CAN).
    4. மாநகர்ப் பரப்புப் பிணையங்கள் (Metro Area Networks - MAN).
    5. விரிபரப்புப் பிணையங்கள் (Wide Area Networks - WAN).
    6. உலகளாவிய பிணையங்கள் (Global Area Networks - GAN).

    இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இப்பாடப் பிரிவில் காண்போம்.

    3.2.1 தனிப்பரப்புப் பிணையங்கள் (Personal Area Networks - PAN)

    ஒருவரின் தனிப்பட்ட கணிப்பொறிச் சாதனங்களை இணைக்கின்ற பிணையம். ஒரு வீட்டிற்குள் அல்லது ஓர் அறைக்குள் செயல்படுவது. ஒருவரின் மேசைக் கணிப்பொறி, மடிக் கணிப்பொறி, கையகக் கணிப்பொறி, பீடிஏ (PDA - Personal Digital Assistant), அச்சுப்பொறி, படப்பிடிப்பி, செல்பேசி போன்ற சாதனங்களைக் கொண்டிருக்கும். கம்பியிணைப்பில் அல்லது கம்பியில்லா இணைப்பில் செயல்படலாம். கம்பியிணைப்புப் பிணையம் எனில் கணிப்பொறிச் சாதனங்கள் ஒரு குவியத்தில் (Hub), ஈதர்நெட் கேட்-5 வகை வடத்தால் இணைக்கப்பட்டிருக்கும். கம்பியில்லாப் பிணையம் எனில் பெரும்பாலும் ‘இர்டா’ அல்லது ‘புளுடூத்’ தொழில்நுட்பத்தில் செயல்படுவதாக இருக்கும். அகல்கற்றை இணைய இணைப்புக்குப் பயன்படுத்தப்படும் பல்துறை இணக்கி (Multi-port Modem) அல்லது கம்பியில்லா இணக்கியையே (Wireless Modem) கணிப்பொறிச் சாதனங்களை இணைக்கும் மையக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். வழங்கி அல்லது மையக் கணிப்பொறி என எதுவும் கிடையாது. அனைத்துக் கணிப்பொறிகளும் சம உரிமை கொண்ட ‘நிகர்களின்’ பிணையமாக இருக்கும். 10 மீட்டர் தொலைவுவரை கணிப்பொறிகள் செயல்படும்.

    3.2.2 குறும்பரப்புப் பிணையங்கள் (Local Area Networks - LAN)

    பல பணிப்பிரிவுகளைக் கொண்ட ஓர் அலுவலகம் அல்லது ஒரு நிறுவனம் ஒரு கட்டடத்தில் பல அறைகளில் அல்லது பல தளங்களில் செயல்படலாம். அங்கே பல்வேறு பணிப்பிரிவுகளில் செயல்படும் கணிப்பொறிகளை இணைத்து உருவாக்கப்படும் பிணையம் குறும்பரப்புப் பிணையம் ஆகும். கணிப்பொறிகளைப் பிணைக்க ஈதர்நெட் கேட்-5 வடங்கள், குவியம் (Hub), தொடர்பி (Switch) போன்ற பிணைய இணைப்புச் சாதனங்கள் பயன்படுத்தப்படும். இவ்வகைப் பிணையத்தின் ஒருபகுதியோ அல்லது முழுமையுமோ கம்பியில்லா இணைப்பிலும் செயல்படலாம். பெரும்பாலும் நுகர்வி - வழங்கி பிணைய வகையாக இருக்கும். நிகர்களின் பிணையமாகவும் இருக்கலாம். 100 மீட்டர் தொலைவுவரை தகவல் பரிமாற்றம் சாத்தியம்.

    ஒரு லேனில் கணிப்பொறிகள் செயல்படும் தொலைவுக்குக் கறாரான வரையறை கிடையாது. 1980-களில் ஒரு லேனில் 20 மீட்டர் வரை கணிப்பொறிகள் இணைக்கப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சிக்குப்பின் இன்றைக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கணிப்பொறியைக்கூட லேனில் இணைக் கின்றனர். லேன் ஒரே கட்டடத்தில் அடங்க வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. பெரும்பகுதி ஒரு கட்டடத்திலும் ஒன்றிரண்டு கணிப்பொறிகள் சிலநூறு மீட்டர் தொலைவிலுள்ள இன்னொரு கட்டடத்திலும் செயல்பட முடியும். ஆனால் இவற்றையெல்லாம் விதிவிலக்குகளாகவே கொள்ள வேண்டும்.

    3.2.3 வளாகப் பரப்புப் பிணையங்கள் (Campus Area Networks - CAN)

    பல கட்டடங்களை உள்ளடக்கிய, சில கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஒரு பரந்த வளாகத்தில் செயல்படும் ஒரு நிறுவனத்தின் பிணையம் இந்த வகையைச் சார்ந்தது. பெரும்பாலும் பல லேன்களை ஒன்றிணைத்த பிணையமாக இருக்கும். சென்னையிலுள்ள ஐஐடீ, அண்ணா பல்கலைக் கழக வளாகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வளாகத்துக்குள் பல்வேறு துறைகளுக்கும் வெவ்வேறு கட்டடங்கள் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் ஒரு லேன் பிணையம் செயல்படும். இந்த லேன்கள் தொடர்பி (Switch), இணைவி (Bridge), திசைவி (Router) போன்ற பிணைய விரிவாக்கச் சாதனங்கள் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு வளாகப் பிணையம் உருவாக்கப்படுகிறது. லேன்கள் கம்பியிணைப்பு அல்லது கம்பியில்லாப் பிணையமாக இருக்கலாம். லேன்கள் மைய இணைப்புச் சாதனத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுவரை இருக்கலாம். வளாகப் பிணையங்கள் செயற்பரப்பில் லேன் அமைப்பைவிடப் பெரியவை. மாநகர்ப் பிணைய அமைப்பைவிடச் சிறியவை.

    3.2.4 மாநகர்ப் பரப்புப் பிணையங்கள் (Metro Area Networks - MAN)

    ஏறத்தாழ வளாகப் பிணையங்களைப் போன்றே செயல்படக் கூடியவை. ஆனால் ஒரு வளாகத்துக்குள் அடங்கி விடாமல் ஒரு பெரிய நகர் முழுதும் பரந்து விரிந்தது. தொடர்பி, இணைவி, திசைவி போன்ற பிணைய விரிவாக்கச் சாதனங்கள் மூலம் ஒன்றிணைக்கப்பட லேன்கள், வளாகப் பிணையங்களை உள்ளடக்கியது. நகரின் பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களில் செயல்படும் பிணையங்கள் வட்டாரத் திசைவிகளின் வழியாக தலைமை அலுவலகத்திலுள்ள ஒரு மையத் திசைவியுடன் இணைக்கப்பட்டிருக்கும். 10 கிலோமீட்டர் தொலைவுவரை செயல்படும். வளாகப் பிணையத்தை மாநகர்ப் பிணையத்தின் ஒரு வடிவமாகவும் வகைப்படுத்துவர்.

    3.2.5 விரிபரப்புப் பிணையங்கள் (Wide Area Networks - WAN)

    விரிபரப்புப் பிணையம் ஒரு மாநிலம் அல்லது ஒரு நாட்டில் பல்வேறு பெருநகரங்களில் செயல்படும் லேன், கேன், மேன் பிணையங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் உள்ள நகரங்களில் செயல்படும் பிணையங்களை இணைப்பதாகவும் இருக்கலாம். பிணையங்கள் திறன்மிக்க திசைவிகளால் ஒன்றிணைக்கப்படுகின்றன. விரிபரப்புப் பிணையங்கள் nதகவல் போக்குவரத்துக்குப் பொதுத் தொலைதகவல் தொடர்புக் (Public Telecommunication) கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இரயில்வே, விமானப் போக்குவரத்து, வங்கி, ஆயுள் காப்பீடு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தகைய விரிபரப்புப் பிணையங்களைக் கொண்டுள்ளன. நூறு கிலோமீட்டர் முதல் சில ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு வரையிலும் தகவல் பரிமாற்றம் சாத்தியம்.

    3.2.6 உலகளாவிய பிணையங்கள் (Global Area Networks - GAN)

    விரிபரப்புப் பிணையத்தின் விரிந்த வடிவமே உலகளாவிய பிணையமாகும். பல விரிபரப்புப் பிணையங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கலாம். உலகளாவிய பொதுத் தகவல் தொடர்புக் கட்டமைப்பின் மூலம் பிணைக்கப்பட்டது. பிணைப்புகளுக்குத் திறன்மிக்க திசைவிகள், சிறப்புவகைத் திசைவிகளான நுழைவிகளும் (Gateways) பயன்படுத்தப்படுகின்றன. பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவுவரைக்கும்கூட விரிந்து பரந்திருக்கும். இன்றைய இணையமே உலகளாவிய பிணையத்துக்குச் சரியான எடுத்துக் காட்டாகும்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    கணிப்பொறிப் பிணையங்களை எவ்வாறெல்லாம் வகைப்படுத்தலாம்?
    2.
    வலைத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்துள்ள பிணைய வகைகளை விளக்கிக் கூறுக.
    3.
    செயற்பரப்பின் அடிப்படையில் பிணையங்களை வகைப்படுத்துக.
    4.
    தனிப்பரப்புப் பிணையம் என்று எதைக் குறிப்பிடுகிறோம்?
    5.
    குறும்பரப்புப் பிணையத்தின் அமைப்பை விளக்குக.
    6.
    வளாகப் பிணையவகை எத்தகைய நிறுவனங்களுக்கு உகந்தது?
    7.
    விரிபரப்புப் பிணையங்களை எடுத்துக் காட்டுடன் விளக்குக.

     

புதுப்பிக்கபட்ட நாள் : 23-06-2017 14:53:15(இந்திய நேரம்)