Primary tabs
-
6.0 பாட முன்னுரை
அக இணையம், புற இணையம் பற்றிக் “கணிப்பொறிப் பிணையங்களின் வகைப்பாடுகள்” என்ற பாடத்தில் (பாடம் 3.3) மிகச் சுருக்கமாக அறிந்துள்ளோம். இப்பிணையங்கள் வலைத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்தவை என்பதையும் அவற்றை அணுகும் பயனர்கள் அடிப்படையில் அவை வேறுபடுகின்றன என்பதையும் அங்கு நாம் தெரிந்து கொண்டோம். இப்பாடத்தில் இந்த இருவகையான பிணைய அமைப்புகளைப் பற்றியும் விரிவாகப் படிக்க இருக்கிறோம்.
ஒரு நிறுவனத்தின் பிணைய அமைப்பினை எந்த அடிப்படையில் ‘அக இணையம்’ என்று அழைக்கிறோம் என்பதை முதலில் அறிந்து கொள்வோம். அடுத்து, அவற்றை எவ்வாறெல்லாம் அமைக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்வோம். அக இணையத்தில் பயன்படுத்தப்படும் இணையத் தொழில் நுட்பங்களை அறிவதும் முக்கியமாகும்.
ஒரு நிறுவனத்துக்கான பிணையத்தை அமைக்கும் முன்பாக அதுபற்றிய திட்டமிடல் இன்றியமையாததாகும். திட்டமிடல் சரியானதாக இருந்தால்தான் பிணையம் சிறப்பானதாக விளங்கும். அக இணையத்தை அமைக்கத் திட்டமிடல், மேலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் தேவைப்படும் வன்பொருள், மென்பொருள்கள் பற்றியும் இப்பாடத்தில் அறிந்து கொள்வோம். இப்பாடத்தின் பிற்பகுதியில் அக இணையத்தினால் பெறப்படும் பல்வேறு பலன்களை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அக இணையம், புற இணையம் ஆகிய இரண்டுக்குமான அடிப்படையான தொழில்நுட்பம் ஒன்றே. திட்டமிடல், நடைமுறைப்படுத்தல், தேவையான வன்பொருள், மென்பொருள்களில் பெரியதாக வேறுபாடு கிடையாது. எனவே புற இணையத்துக்காக இவற்றைப் பற்றித் தனியாக அறிந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை.
இப்பாடத்தின் இறுதிப் பிரிவில் புற இணையம் அக இணையத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும், புற இணையத்தின் செயல்பாடு, பயன்பாடு மற்றும் பலன்கள், பலவீனங்கள் பற்றியும் காண இருக்கிறோம்.