தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- புற இணையம்

  • 6.4 புற இணையம்

    புற இணையம் என்பது அக இணையத்தின் விரிவாக்கம் ஆகும். எனவே புற இணையமானது அக இணையத்தின் அடிப்படையான கூறுகளைக் கொண்டிருக்கும் என்பது தெளிவாகிறது. விரிவாக்கம் என்பது அதன் பயனாளர்களைப் பற்றியது. நிறுவனப் பணியாளர்கள் தவிர வேறு பலரும் பிணையத்தை அணுகலாம். வேறு பலர் யார் யார் என்பதை இப்பாடப் பிரிவில் காண்போம். புற இணையம் எவ்வாறு செயல்படுகிறது, அதன் குறிப்பிடத்தக்க பயன்பாடு என்ன என்பதைப் பற்றியும் அறிந்து கொள்வோம். அக இணையத்தின் பலன்களோடு, சில கூடுதலான பலன்களும் புற இணையத்தில் பெறப்படுகின்றன. தவிரவும் புற இணையத்துக்கே உரிய சில பலவீனங்களும் உள்ளன. பலன்களும் பலவீனங்களும் எவை என்பதைத் தெரிந்து கொள்வோம். மற்றபடி திட்டமிடல், நடைமுறைப்படுத்தல், நிறுவும் வழிமுறைகள், வன்பொருள், மென்பொருள் தேவைகள் இவையெல்லாம் அக இணையத்துக்கும் புற இணையத்துக்கும் பொதுவானவையே. எனவே அவைபற்றி மீண்டும் இங்கே விளக்கத் தேவையில்லை என்பதை மனதில் கொள்க.

    6.4.1 புற இணையம் என்றால் என்ன?

    புற இணையத்தின் வரையறுப்பு ஏறத்தாழ அக இணையத்தின் வரையறுப்பைப் போன்றதே. பயனாளர்களைப் பொறுத்த கூறுபாட்டில் மட்டுமே வேறுபடுகிறது. புற இணையத்தைச் சுருக்கமாக இவ்வாறு வரையறுக்கலாம்:

    “புற இணையம் என்பது இணையத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த, நிறுவனப் பணியாளர்கள் மட்டுமின்றி நிறுவனத்தோடு தொடர்புடைய குறிப்பிட்ட வெளியார் சிலரும் அணுக முடிகிற ஒரு தனியார் பிணையமாகும்”

    நிறுவனத்தோடு தொடர்புடைய குறிப்பிட்ட வெளியார் சிலர் என்பது அந்நிறுவனத்துக்குப் பொருள்கள் வழங்குவோர் (Suppliers), விற்பனையாளர்கள் (Vendors), வணிகக் கூட்டாளிகள் (Partners), வாடிக்கையாளர்கள் (Customers), உறவுடைய நிறுவனங்கள் போன்றோரைக் குறிக்கிறது. புற இணையம் இவர்களோடு சில தகவல்களையும் வணிகச் செயல்பாடுகளையும் பகிர்ந்து கொள்கிறது. புற இணையம் மேற்கண்ட அனைத்துப் பிரிவினரையுமே உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென்பதில்லை. சில பிரிவினரை மட்டுமே கொண்டிருக்கலாம். ஓர் அக இணையத்தின் சில தகவல்களையும், பயன்பாடுகளையும் வாடிக்கையாளர்கள் அணுக முடியுமெனில் அது புற இணையமாகக் கருதப்படும். புற இணையத்தின் நான்கு முக்கிய கூறுகளை இவ்வாறு பட்டியலிடலாம்:

    (1) ஒரு நிறுவனத்தின் தனியார் பிணையம்.
    (2) இணையத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்தது.
    (3) அந்நிறுவனத்தின் பணியாளர்கள் அணுக முடியும்.
    (4) பொருள்கள் வழங்குவோர் (Suppliers), விற்பனையாளர்கள்
          (Vendors), வணிகக் கூட்டாளிகள் (Partners),
        வாடிக்கையாளர்கள் (Customers), உறவுடைய நிறுவனங்கள்
                    போன்ற வெளியார் சிலருடன் சில வணிகத்
    தகவல்களையும்
          செயல்பாடுகளையும்பகிர்ந்து கொள்கிறது.

    6.4.2 புற இணையத்தின் செயல்பாடும், பயன்பாடும்

    புற இணையங்கள் பிற நிறுவனப் பிணையங்களோடும் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அவற்றைச் சொந்தக் கட்டமைப்பில் நிறுவுவது சிக்கலானது. செலவு மிக்கது. மதிப்பேற்று பிணையக் கட்டமைப்பில் புற இணையங்கள் செயல்படலாம். ஆனால் அதற்கும் செலவு கூடுதலாகவே ஆகும். எனவே தற்போது புற இணையங்கள் பெருமளவு இணையக் கட்டமைப்பின் வழியாகவே அமைக்கப்படுகின்றன.

    மதிப்பேற்று பிணையம்வழிச் செயல்படும் புற இணையங்களில் நிறுவனத்தோடு முற்றிலும் தொடர்பில்லாத பொதுமக்கள் நுழைய வாய்ப்பில்லை. அனுமதி பெற்ற பயனர்கள் மட்டுமே அணுகுவர். பிறரோடு பகிர்ந்து கொள்ள விரும்பாத தகவல்களை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதுமானது. ஆனால் இணையம்வழிச் செயல்படும் புற இணையம் எனில் அதன் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட அதிகமான வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பு நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இணையம் என்பது பொதுமக்கள் எவரும் பயன்படுத்தக் கூடிய ஒரு திறந்தநிலைப் பிணையம் ஆகும். எனவே புற இணைய வலையகத்தில் நுழையும் அனுமதிக்கு மிகுந்த கட்டுப்பாடு தேவை. முதலில் பணியாளரும் வெளியாரும் பிரித்தறியப்பட வேண்டும். வெளியார் எனில் அவர் அனுமதி பெற்ற பயனரா என்பது உறுதி செய்யப்பட (Authentication) வேண்டும். அனுமதி பெற்ற பயனர் எனில் குறிப்பிட்ட தகவலை அணுகும் உரிமை (Authorisation) பெற்றவரா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் மறையாக்கம் (Encryption) செய்யப்பட்டு அனுப்பப்பட வேண்டும். எனவே இணையம்வழிச் செயல்படும் புற இணையங்கள் தீச்சுவர் (Firewall) பாதுகாப்புக் கொண்ட தனிச்சிறப்பான திசைவி (Router) அல்லது நுழைவி (Gateway) வழியாக இணையத்துடன் பிணைக்கப்பட வேண்டும்.

    மின்வணிகத்தில் (e-commerce) புற இணையங்கள் பெருமளவு பயன்படுகின்றன. குறிப்பாக நிறுவனத்துக்கும் வாடிக்கையாளருக்கும் இடையேயான (B2C - Business to Consumer) மின்வணிகமும், வணிக நிறுவனங்களுக்கு இடையேயான (B2B - Business to Business) மின்வணிக நடவடிக்கைகளும் புற இணையங்கள் வழியாகவே நடைபெறுகின்றன. சில அரசுத்துறை நிறுவனங்கள் தமது பிணைய வலையகத்தில் ஒப்பந்ததாரர்கள் (Contractors) ஒப்பந்தப்புள்ளி (Tender) ஆவணங்களைப் பதிவிறக்கிக் கொள்ளவும் சமர்ப்பிக்கவும் அனுமதி அளிக்கின்றன. இத்தகைய தகவல் பரிமாற்றத்தில் ‘துடிமக் கையொப்பம்’ (Digital Signature) என்னும் பாதுகாப்புமுறை பின்பற்றப்படுகிறது. மின்வணிகம் மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றிப் பின்வரும் பாடங்களில் விரிவாகப் படிப்போம்.

    6.4.3 புற இணையத்தின் பலன்களும் பலவீனங்களும்

    புற இணையம் என்பது அக இணையத்தின் நீட்சியே என்பதால், அக இணையத்தின் பலன்கள் அனைத்துமே புற இணையத்துக்கும் பொருந்தும். ஒரு நிறுவனத்தின் புற இணையம் அந்நிறுவனத்துக்கு வெளியே அதன் வணிகத்தோடு தொடர்புடைய பிற வணிக அமைப்புகளையும் அங்கமாகக் கொண்டுள்ளதால் அதனால் ஏற்படும் பலன்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதல் பலன்களுள் முக்கியமான சிலவற்றைக் காண்போம்:

    • தொடர்புடைய வணிக நிறுவனங்களுக்கிடையே மின்னணுத் தரவுப் பரிமாற்றம் (Electronic Data Interchange - EDI) மூலம் ஏராளமான தரவுத் தொகுதிகளைப் பரிமாறிக் கொள்ள முடியும். இதனால் உழைப்பும் நேரமும் மிச்சமாவதுடன் செலவும் மிச்சமாகும்.
    • மொத்த விற்பனையாளர்களுடனும் சக வணிக நிறுவனங்களுடனும் உற்பத்திப் பொருட்களின் விலைப் பட்டியல்கள் (Product Catelogs) உட்படப் பல்வேறு வகையான வணிக ஆவணங்களைப் புற இணையம் வழியே பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் வணிக நடவடிக்கைகள் விரைவாக நடந்தேறும்.
    • பிற வணிக நிறுவனங்களோடு கூட்டு முயற்சிகள், கூட்டு முதல¦டுகளுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் புற இணையம் உதவும்.
    • பிற நிறுவனங்களுடன் இணைந்து நிறுவனப் பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்களைத் தயாரிக்கவும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
    • ஒரு நிறுவனம் வழங்கும் சில குறிப்பிட்ட சேவைகளைப் பிற நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு வங்கி வழங்கும் நிகழ்நிலை வங்கிச் சேவையை (Online Banking Service) அவ்வங்கியின் இணைப்பு வங்கிகளும் (Affliated Banks) பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • புற இணையத்தில் பங்கு கொண்டுள்ள வணிக நிறுவனங்கள் தமக்குள் பொதுவான செய்திகள், விவரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
      புற இணையத்தின் பலன்களோடு ஒப்பிடுகையில், பலவீனங்கள் குறைவே என்றாலும், அவற்றைப் புறக்கணித்து விடமுடியாது. அவை கவலைப்படக் கூடியவை. கட்டாயமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியவை:
    • சொந்தக் கட்டமைப்பிலும், மதிப்பேற்று பிணையம் வழியாகவும் புற இணையத்தை அமைக்கவும், பராமரிக்கவும் மிகுந்த செலவாகும். வன்பொருள், மென்பொருள், பணியாளர் பயிற்சிக்கென ஆகும் செலவுகள் அதிகம்.
    • இணையம்வழி அமைக்கப்படும் புற இணையங்களின் பாதுகாப்பு மிகப்பெரிய பலவீனமாகும். நிறுவனப் பணியாளர்கள் அல்லாத வெளியாரும் பிணையத்தை அணுகுவர் என்பதால் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நிறுவனத்தின் மதிப்புமிக்க தகவல்கள் அத்துமீறிகளின் கைகளில் கிடைத்துவிடக் கூடாது. பிணையத்தை அணுகுவோருக்கு அனுமதி அளிப்பதில் கவனமும் கட்டுப்பாடும் தேவை. தீச்சுவர் பாதுகாப்புக்கான வன்பொருள்கள், மென்பொருள்களுக்கு அதிகப்படியான செலவாகும்.
    • வணிக நடவடிக்கைகள் அனைத்தும் பிணையம் வழியாகவே நடைபெறுவதால் வாடிக்கையாளர்களையும், வணிகக் கூட்டாளிகளையும் முகத்துக்கு முகம் பார்த்து நேரில் உரையாடுவது குறைந்துவிடுகிறது. இவ்வாறு மனிதர்களுக்கிடையேயான நேரடிச் சந்திப்புகள் இல்லாமல் போவது வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகக் கூட்டாளிகள் நிறுவனத்தின் மீது கொண்டுள்ள விசுவாசம் குறைந்து போக வாய்ப்புண்டு. ஒரு வகையில் அது வணிக வளர்ச்சியைப் பாதிக்கவே செய்யும்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    அக இணையத்தில் தகவல் பரிமாற்றம், தகவல் புதுப்பித்தலால் விளையும் பலன்களைப் பட்டியலிடுக
    2.
    அக இணையம் நிறுவனம்-பணியாளர் பிணைப்புக்கு ஆற்றும் பங்கு யாது?
    3.
    புற இணையத்தை வரையறுக்கவும்.
    4.
    புற இணையத்தின் செயல்பாட்டையும் அதற்கான பாதுகாப்பையும் குறிப்பிடுக

    5.

    புற இணையம் எத்துறையில் அதிகம் பயன்படுகிறது?

    6.

    புற இணையத்தின் பலன்கள் யாவை?

    7.

    புற இணையத்தின் பலவீனங்களைச் சுட்டிக் காட்டுக.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 12:40:48(இந்திய நேரம்)