தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- அக இணையத்தின் பலன்கள்

  • 6.3 அக இணையத்தின் பலன்கள் (Benefits of Intranet)

    அக இணையத்தைச் சாதாரணப் பிணைய அமைப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் எனினும் அக இணையத்தில் பெறப்படும் பலன்கள் அதனைத் தனித்து நிற்கச் செய்கின்றன எனலாம். அக இணையத்தை அணுகுவது இணையத்தை அணுகுவது போல மிக எளிதானது. பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பயனர் பெயரும் கடவுச்சொல்லும் வழங்கப்படும். பணியாளர் தனது கணிப்பொறியில் வலை உலாவி மூலம் நிறுவன வலையகத்தில் நுழைந்து பயனர் பெயரும் கடவுச்சொல்லும் தந்தவுடன், அவரது பணிப்பரப்புக்குள் நுழைவார். அவர் செய்து முடிக்க வேண்டிய பணிகள் காத்திருக்கும். அலமாரிகளில் கோப்புகளைத் தேடி நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. பேரேடுகளில் கார்பன் தாள் வைத்துக் கைவலிக்க எழுத வேண்டியதில்லை. ஏடுகளிலும், தாள்களிலும் மரபு வழியாகச் செய்துவந்த பணிகளையெல்லாம் கணிப்பொறியில் வலைப்பக்கங்களில் செய்தால் போதும். இதுபோன்று அக இணையத்தில் பெறப்படும் பல்வேறு பலன்களையும் இப்பாடப் பிரிவில் வகைப்படுத்திப் பட்டியலிடுவோம்.

    6.3.1 தகவல் பரிமாற்றம்

    நிறுவனத் தகவல்கள், அறிவிக்கைகள், அறிவுறுத்தங்கள், வழிகாட்டுதல்கள், விதிமுறைகள், பணி இலக்குகள் ஆகியவற்றை அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் ’தள்ளு’ (Push) முறையில் அனுப்பி உணர்த்தத் தேவையின்றி, ‘இழுப்பு’ (Pull) முறையில் பணியாளர்கள் நிறுவனப் பிணையத்தில் நுழைந்தவுடன் தகவல்கள் அவர்களுக்குக் கிடைக்குமாறு செய்ய முடியும்.

    நிறுவனத்துக்குள் நடைபெறும் செங்குத்து, கிடைமட்டத் தகவல் தொடர்புகளுக்கு (Vertical and Horizontal Communications) அக இணையம் ஒரு சிறந்த கருவியாக விளங்க முடியும். நிறுவனத்தில் முழுதளாவிய தாக்கத்தை விளைவிக்கும் அதிமுக்கிய முனைப்பு நடவடிக்கைக்கு (Strategic Initiative) முன்பாக, அதன் நோக்கம், அதனைத் தொடங்கி வைத்தவர், அதனால் அடையப்போகும் இலக்கு, இன்றுவரை கிடைக்கப் பெற்றுள்ள பலன்கள், இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் ஆகிய விவரங்கள் அனைத்தும் பணியாளர்களுக்கு உடனுக்குடன் கிடைக்கச் செய்ய முடியும். இத்தகைய தகவல்களை அக இணையத்தில் வழங்குவதன் மூலம் பணியாளர்கள் நிறுவனத்தின் முக்கியத்துவம் மிக்க இலக்கு, குறிக்கோள் பற்றிய இற்றைத் தகவலைப் பெறும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

    அக இணையத்தில் தகவல்கள் அனைத்தும் பணியாளர் அனைவரும் எளிதாக அணுகும் வண்ணம் இருப்பதால் ‘குழுப்பணி’ (Team Work) என்பது சாத்தியமாகிறது. அஞ்சல் குழுக்கள், உடனடிச் செய்திப் பரிமாற்றம் போன்ற சேவைகள் குழுப்பணிக்கு மிகவும் உதவக் கூடியவை.

    6.3.2 தகவல் புதுப்பித்தல்

    மீவூடகம் (hypermedia) மற்றும் வலைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிறுவனம் பற்றிய களைப்பூட்டும் விவரங்களைப் பராமரிக்கவும், புதுப்பிக்கவும் அவற்றை நிறுவனம் முழுக்க எளிதாக அணுகச் செய்யவும் முடியும். குறிப்பாகப் பணியாளர் கையேடுகள், பணியாளர் நல ஆவணங்கள், நிறுவனக் கோட்பாடுகள், வணிகத் தரப்பாடுகள், செய்திக் குறிப்புகள், பயிற்சித் தகவல்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். நிறுவனத்தின் ஒவ்வொரு பணிப்பிரிவும் வலையகத்திலுள்ள தத்தமது ஆவணங்களை அவ்வப்போது புதுப்பிக்க முடியும் என்பதால், பணியாளர்களுக்கு எப்போதுமே மிக அண்மைக்காலத் தகவல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

    நிறுவனம் தொடர்பான அரசின் சட்டங்கள், கட்டுப்பாடுகள், விதிமுறைகள், வரையறைகள், வரிவிதிப்புகள், அளவுகோள்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பவை. அக இணையத்தில் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் (வலை வழங்கியில்) சேமிக்கப்பட்டுள்ளதால் அவற்றைப் புதுப்பித்தல் நிமிட நேரத்தில் முடியக் கூடிய பணியாகும். எனவே பணியாளர்களுக்குக் காலாவதியான தகவல்களைத் தர வேண்டிய நிலை ஏற்படாது. அண்மையத் தகவல்களே கிடைக்கும். இதனால் பணிகள் பிழையின்றி நடைபெறுகின்றன. நிறுவனத்தின் கடப்பாடுகள் குறைகின்றன. நட்டம் தவிர்க்கப்படுகிறது.

    6.3.3 தாள்-கோப்புகளுக்கு விடுதலை

    தொலைபேசிஎண் பட்டியல் முதல் செயல்முறைக் கையேடுகள் வரை நிறுவனம் பற்றிய அனைத்துவகைத் தரவுகள் மற்றும் தகவல்களைப் பணியாளர்கள் எந்த நேரமும் வலை உலாவி மூலம் பிணையத்தில் பெற்றுக் கொள்ளலாம். எனவே, அவற்றையெல்லாம் பெரிய பெரிய பேரேடுகளில் அச்சிட்டுப் பாதுகாக்க வேண்டிய தேவையில்லை. இதனால் நிறுவனத்துக்கு செலவு மிச்சமாகிறது.

    நிறுவனத்துக்குள்ளே கடிதப் போக்குவரத்து, ஆவணப் பரிமாற்றம், கோப்புப் பரிமாற்றம் அனைத்தும் பிணையம் வழியாகவே நடைபெறுகிறது. தாள்-கோப்புகளைப் பணிப்பிரிவுகளுக்கிடையே அனுப்பித் திரும்பிப் பெற ஆகும் நேரம் மிச்சமாகிறது. மேலும் கோப்புகளை வைத்த இடம் மறந்துவிட்டுத் தேடி அலைவதும், தொலைத்துவிட்டு அல்லற்படுவதும் அக இணையத்தில் அறவே இல்லை.

    இணையம்வழி அமைந்த அக இணையம் எனில், பணியாளர்கள் விடுமுறை நாட்களிலும் பணிக்கு வரமுடியாத காலங்களிலும், வீட்டிலிருந்தபடியே நிறுவன வலையகத்தை அணுகி முக்கிய வேலைகளைச் செய்து முடிக்க முடியும். நிறுவனக் கோப்புகளை வீட்டுக்குச் சுமந்து செல்ல வேண்டிய தேவையில்லை. பணியாளர்கள் பணியின் நிமித்தம் வெளியூர் செல்லும்போதும் பயணத்திலும்கூட மடிக்கணிப்பொறியில் நிறுவனப் பணிகளைச் செய்து முடிக்கலாம்.

    6.3.4 நிறுவனம்-பணியாளர் பிணைப்பு

    தகவல்கள் ஒரே இடத்தில் (வலை வழங்கியில்) சேமிக்கப்பட்டுள்ளன. பணியாளர்கள் தங்கள் பணிக்குத் தேவையான தகவல்களை எந்த நேரத்திலும், நிறுவனத்தின் எந்தக் கணிப்பொறியிலிருந்தும் வலை உலாவி மூலம் (சிக்கலான கட்டளைகள், நிரல்களைப் பயன்படுத்தத் தேவையின்றி) மிக எளிதாக அணுக முடியும். அத்தகவல்களை மட்டுமே அணுக அவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதால், தாம் அணுகும் தகவல்கள் சரியானவையே என்ற நம்பிக்கையுடன் தம் பணிகளை செவ்வனே விரைவாக நிறைவேற்ற முடியும்.

    ஒவ்வொரு பணியாளரும் நிறுவனம் பற்றி ஒரே விதமான தகவல்களையே பார்வையிடுகிறார். எனவே அனைத்துப் பணியாளர்களின் மனத்திலும் நிறுவனம் பற்றிப் பொதுவான ஒரு பிம்பமே உருவாக்கப்படுகிறது.

    பிணையத்தை இன்னார்தான் பயன்படுத்துவர் என்பது முன்பே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. ஒருவர் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் தந்து பிணையத்தில் நுழைந்ததுமே அவர் பெயர், பணிப்பொறுப்பு மற்றும் அவரைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் (பிணையத் தரவுத் தளத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்) தெரிந்துவிடும். எனவே அவருக்கே உரித்தான செய்தியுடன் (Personalized Message) அவரை வரவேற்கலாம். “ஹலோ குமரன்! உங்களுக்கு நிறுவனத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்றோ, ”வாழ்த்துகள் செந்தில், நிறுவனத்தில் மூன்றாவது ஆண்டு உங்கள் சேவை தொடர்வதற்கு!” என்றோ ஒரு செய்தி வரவேற்றால் பணியாளர் மகிழ்ந்துவிட மாட்டாரா? அக இணையம் இத்தகைய தனிப்பயனாக்கத்துக்கு (Customization) மிகவும் உகந்தது. இதனால் நிறுவனம்-பணியாளர் பிணைப்பு இறுக்கமாகிறது.

     

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:26:59(இந்திய நேரம்)