தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- தொகுப்புரை

  • 6.5

    தொகுப்புரை

     
    • வலைவழங்கியிலுள்ள வலைப்பக்கங்களை அணுக வலை உலாவி பயன்படுகிறது. (4) இணையத்தில் பயன்படுத்தப் படும் டீசிபீ/ஐபீ, ஹெச்டீடீபீ போன்ற தகவல் பரிமாற்ற நெறிமுறைகளே அக இணையத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.
    • ஒரு நிறுவனத்தின் வெற்றியில் சரியாகத் திட்டமிடலும், திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தலும் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன.
    • அக இணையத்தைத் திட்டமிடும்போது, அதன் நோக்கத்தையும், குறிக்கோளையும் வரையறுத்தல், தரவுகள், தகவல்கள், அவற்றின் பாதுகாப்பு, தகவல்களைப் புதுப்பித்தல், அவற்றை அணுகும் பயனர்கள், அவர்களின் கடமைகள், உரிமைகளை முடிவு செய்தல், ஏற்கெனவே இருக்கும் கணிப்பொறி அமைப்பினை அகற்றும் வழிமுறைகள், திட்டத்தை நடைமுறைப்படுத்தலுக்கான கால அட்டவணை போன்ற கூறுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
    • அக இணையத்தை நடைமுறைப்படுத்துகையில் உயர்நிலை மேலாண்மையின் ஆதரவையும், நிதி ஒதுக்கீட்டையும் பெற வேண்டும். தேவையான வன்பொருள், மென்பொருள்களுடன் வலை வழங்கிகளையும் டிசிபீ/ஐபீ பிணைய அமைப்பையும் நிறுவ வேண்டும். திட்டப்பணியிலும் பரிசோதனையிலும் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். பயனர் கையேடு உட்பட அக இணையத்தின் செயல்பாடுகள் பற்றிய முழுமையான ஆவணமாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
    • அக இணையத்தின் செயற்பரப்புக்கு ஏற்ப தேவைப்படும் வன்பொருள்கள் வேறுபடுகின்றன. பயனர் கணிப்பொறிகள், வழங்கிகள், குவியம், தொடர்பி, திசைவி, நுழைவி, தகவல் தொடர்பு வடங்கள் இவற்றுள் இணையம் வழியாக அமையும் அக இணையத்துக்குப் பயனர்களின் கணிப்பொறிகள் மட்டுமே போதும். மதிப்பேற்று பிணைய அமைப்பில் நிறுவப்படும் அக இணையத்துக்குக் பயனர், வழங்கிக் கணிப்பொறிகள் போதும்.
    • அக இணையத்தை நடைமுறைப்படுத்தப் பிணைய இயக்கமுறை, வலைவழங்கி மென்பொருள், தகவல் பரிமாற்ற நெறிமுறைகள், வலை உலாவி, தீச்சுவர் மென்பொருள்கள், மறையாக்க, மறைவிலக்க மென்பொருள்கள் தேவை.
    • அக இணையத்தில் பெறப்படும் பலன்கள் அதனைச் சாதாரணப் பிணைய அமைப்பிலிருந்து வேறுபடுத்தித் தனித்து நிற்கச் செய்கின்றன.
    • நிறுவனத் தகவல்கள், அறிவிக்கைகள், அறிவுறுத்தங்கள், வழிகாட்டுதல்கள், விதிமுறைகள், பணி இலக்குகள் ஆகியவற்றைத் ’தள்ளு’ (Push) முறையில் அனுப்பி உணர்த்தத் தேவையின்றி, ‘இழுப்பு’ (Pull) முறையில் பணியாளர்கள் நிறுவனப் பிணையத்தில் நுழைந்தவுடன் அவர்களுக்குக் கிடைக்குமாறு செய்ய முடியும். இத்தகைய தகவல்களை உடனுக்குடன் வழங்குவதன் மூலம் பணியாளர்கள் நிறுவனத்தின் முக்கியத்துவம் மிக்க இலக்கு, குறிக்கோள் பற்றிய இற்றைத் தகவலைப் பெறும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
    • அஞ்சல் குழுக்கள், உடனடிச் செய்திப் பரிமாற்றம் போன்ற சேவைகள் குழுப்பணிக்கு மிகவும் உதவுகின்றன.
    • பணியாளர் கையேடுகள், பணியாளர் நல ஆவணங்கள், நிறுவனக் கோட்பாடுகள், வணிகத் தரப்பாடுகள், செய்திக் குறிப்புகள், பயிற்சித் தகவல்கள் போன்றவற்றை அவ்வப்போது புதுப்பிக்க முடியும் என்பதால், பணியாளர்களுக்கு எப்போதுமே மிக அண்மைக்காலத் தகவல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். நிறுவனம் தொடர்பான அரசின் சட்டங்கள், கட்டுப்பாடுகள், விதிமுறைகள், வரையறைகள், வரிவிதிப்புகள், அளவுகோள்கள் ஆகியவற்றைப் புதுப்பித்தல் நிமிட நேரத்தில் முடியக் கூடியது என்பதால் பணியாளர்களுக்கு எப்போதும் அண்மையத் தகவல்களே கிடைக்கும். இதனால் பணிகள் பிழையின்றி நடைபெறுகின்றன.
    • தொலைபேசிஎண் பட்டியல் முதல் செயல்முறைக் கையேடுகள் வரை நிறுவனம் பற்றிய அனைத்துவகைத் தரவுகள் மற்றும் தகவல்களைப் பெரிய பெரிய பேரேடுகளில் அச்சிட்டுப் பாதுகாக்க வேண்டிய தேவையில்லை. நிறுவனத்துக்குள்ளே கடிதப் போக்குவரத்து, ஆவணப் பரிமாற்றம், கோப்புப் பரிமாற்றம் அனைத்தும் பிணையம் வழியாகவே நடைபெறுகிறது. இதனால் நிறுவனத்துக்கு செலவு மிச்சமாகிறது.
    • பணியாளர்கள் விடுமுறை நாட்களிலும் பணிக்கு வரமுடியாத காலங்களிலும், வீட்டிலிருந்தபடியே நிறுவன வலையகத்தை அணுகி முக்கிய வேலைகளைச் செய்து முடிக்க முடியும். பணியாளர்கள் பணியின் நிமித்தம் வெளியூர் செல்லும்போதும் பயணத்திலும்கூட மடிக்கணிப்பொறியில் நிறுவனப் பணிகளைச் செய்து முடிக்கலாம்.
    • பணியாளர் நிறுவன வலையகத்தில் நுழைந்தவுடன், அவருக்கே உரித்தான செய்தியுடன் அவரை வரவேற்கலாம். “ஹலோ குமரன்! உங்களுக்கு நிறுவனத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்று ஒரு செய்தி வரவேற்றால் பணியாளர் மகிழ்ந்துவிட மாட்டாரா? அக இணையம் இத்தகைய தனிப்பயனாக்கத்துக்கு (Customization) மிகவும் உகந்தது. இதனால் நிறுவனம்-பணியாளர் பிணைப்பு இறுக்கமாகிறது.
    • புற இணையம் என்பது அக இணையத்தின் விரிவாக்கம் ஆகும். புற இணையம் என்பது இணையத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த, நிறுவனப் பணியாளர்கள் மட்டுமின்றி நிறுவனத்தோடு தொடர்புடைய குறிப்பிட்ட வெளியார் சிலரும் அணுக முடிகிற ஒரு தனியார் பிணையமாகும். நிறுவனத்தோடு தொடர்புடைய குறிப்பிட்ட வெளியார் சிலர் என்பது அந்நிறுவனத்துக்குப் பொருள்கள் வழங்குவோர், விற்பனையாளர்கள், வணிகக் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், உறவுடைய நிறுவனங்கள் போன்றோரைக் குறிக்கிறது.
    • புற இணையங்களைச் சொந்தக் கட்டமைப்பிலும், மதிப்பேற்று பிணையக் கட்டமைப்பிலும் அமைக்கச் செலவு அதிகமாகும். எனவே தற்போது புற இணையங்கள் பெருமளவு இணையக் கட்டமைப்பின் வழியாகவே செயல்படுகின்றன.
    • புற இணைய வலையகத்தில் நுழையும் அனுமதிக்கு மிகுந்த கட்டுப்பாடு தேவை. பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் மறையாக்கம் (Encryption) செய்யப்பட்டு அனுப்பப்பட வேண்டும். இணையம்வழிச் செயல்படும் புற இணையங்கள் தீச்சுவர் (Firewall) பாதுகாப்புக் கொண்ட தனிச்சிறப்பான திசைவி (Router) அல்லது நுழைவி (Gateway) வழியாக இணையத்துடன் பிணைக்கப்பட வேண்டும்.
    • மின்வணிகத்தில் புற இணையங்கள் பெருமளவு பயன்படுகின்றன. குறிப்பாக நிறுவனத்துக்கும் வாடிக்கையாளருக்கும் இடையேயான மின்வணிகமும், வணிக நிறுவனங்களுக்கு இடையேயான மின்வணிக நடவடிக்கைகளும் புற இணையங்கள் வழியாகவே நடைபெறுகின்றன.
    • மொத்த விற்பனையாளர்களுடனும் சக வணிக நிறுவனங்களுடனும் உற்பத்திப் பொருட்களின் விலைப் பட்டியல்களைப் புற இணையம் வழியே பகிர்ந்து கொள்ள முடியும். பிற வணிக நிறுவனங்களோடு கூட்டு முயற்சிகள், கூட்டு முதல¦டுகளுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள புற இணையம் உதவும். பிற நிறுவனங்களுடன் இணைந்து நிறுவனப் பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்களைத் தயாரிக்கவும், பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
    • ஒரு நிறுவனம் வழங்கும் சில குறிப்பிட்ட சேவைகளைப் பிற நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாம். புற இணையத்தில் பங்கு கொண்டுள்ள வணிக நிறுவனங்கள் தமக்குள் பொதுவான செய்திகள், விவரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
    • இணையத்தின் வழியாக இல்லாமல் சொந்தக் கட்டமைப்பில் புற இணையத்தை அமைக்கவும், பராமரிக்கவும் மிகுந்த செலவாகும். வன்பொருள், மென்பொருள், பணியாளர் பயிற்சிக்கென ஆகும் செலவுகள் அதிகம்.
    • இணையம்வழி அமைக்கப்படும் புற இணையங்களின் பாதுகாப்பு மிகப்பெரிய பலவீனமாகும். நிறுவனப் பணியாளர்கள் அல்லாத வெளியாரும் பிணையத்தை அணுகுவர் என்பதால் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நிறுவனத்தின் மதிப்புமிக்க தகவல்கள் அத்துமீறிகளின் கைகளில் கிடைத்துவிடக் கூடாது. பிணையத்தை அணுகுவோருக்கு அனுமதி அளிப்பதில் கவனமும் கட்டுப்பாடும் தேவை. தீச்சுவர் பாதுகாப்புக்கான வன்பொருள்கள், மென்பொருள்களுக்கு அதிகப்படியான செலவாகும்.
    • வணிக நடவடிக்கைகள் அனைத்தும் பிணையம் வழியாகவே நடைபெறுவதால் வாடிக்கையாளர்களையும், வணிகக் கூட்டாளிகளையும் முகத்துக்கு முகம் பார்த்து நேரில் உரையாடுவது குறைந்துவிடுகிறது. மனிதர்களுக்கிடையேயான நேரடிச் சந்திப்புகள் இல்லாமல் போவது வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகக் கூட்டாளிகள் நிறுவனத்தின் மீது கொண்டுள்ள விசுவாசம் குறைந்து போக வாய்ப்புண்டு. ஒரு வகையில் அது வணிக வளர்ச்சியைப் பாதிக்கவே செய்யும்.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:27:06(இந்திய நேரம்)