தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- அக இணையத்தைக் கட்டமைத்தல்

  • 6.2 அக இணையத்தைக் கட்டமைத்தல்

    எந்தெந்த வழிமுறைகளில் அக இணையத்தைக் கட்டமைக்கலாம் என்பதைப் பார்த்தோம். அக இணையத்தைக் கட்டமைக்கும் முன்பாக நிறுவனத்தின் செயல்பாடு, தேவைகள், எதிர்கால விரிவாக்கம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு சரியாகத் திட்டமிட வேண்டும். அதன்பிறகே அக இணையத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அக இணையத்தை எவ்வாறு திட்டமிடல், எவ்வாறு நடைமுறைப்படுத்தல் என்பதைப் பற்றியும், நடைமுறைப்படுத்தத் தேவையான வன்பொருள், மென்பொருள்கள் பற்றியும் இப்பாடப் பிரிவில் படித்தறிவோம்.

    6.2.1 அக இணையத்தைத் திட்டமிடல்

    ஒரு நிறுவனத்தின் வெற்றியில் சரியாகத் திட்டமிடலும், திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தலும் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. எனவே பெரும்பாலான நிறுவனங்கள் திட்டமிடலுக்கும் நடைமுறைப்படுத்தலுக்கும் நிறுவனத்தின் கணிசமான வளங்களைச் செலவிடுகின்றன. அக இணையத்தைத் திட்டமிடும்போது கீழ்க்காணும் முக்கிய கூறுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்:

    • அக இணையத்தின் நோக்கத்தையும் குறிக்கோளையும் வரையறுத்தல்
    • அக இணையத்தில் பரிமாறிக் கொள்ளப்படும் தரவுகள், தகவல்கள்
    • தரவுச் சேமிப்பு, தகவல் கட்டுமானம், வலைப்பக்க வடிவமைப்பு
    • அக இணையத்தை அணுகுவதற்கு அனுமதிக்கப்படும் பணியாளர்கள்
    • எவரெவர் எந்தெந்தத் தகவல்களை அணுகலாம் என்கிற கட்டுப்பாடுகள்
    • பணிப்பிரிவுகளின் செயல்முறைகள், பொறுப்புகள், கடமைகள், உரிமைகள், சலுகைகள்
    • ஏற்கெனவே இருக்கும் கணிப்பொறி அமைப்பினை அகற்றும் வழிமுறைகள்
    • திட்டத்தை நடைமுறைப்படுத்தலுக்கான கால அட்டவணை
    • அக இணையத்தின் பாதுகாப்பை வரையறுத்தலும் நடைமுறைப்படுத்தலும்
    • பழைய தரவுகளைப் பராமரித்தலும் புதுப்பித்தலும், புதிய தரவுகளின் உள்ளீடும்

    6.2.2 அக இணையத்தை நடைமுறைப்படுத்தல்

    திட்டமிட்டபடி அக இணையத்தை ஒரு நிறுவனத்தில் நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு இடையூறுகள் குறுக்கிட வாய்ப்புள்ளது. உயர்நிலை மேலாண்மையையும் (High Level Management) கீழ்நிலையில் அதனைப் பயன்படுத்தப் போகிற இறுதிப் பயனர்களான (End Users) பணியாளர்களையும் ஒருசேர ஒத்துக் கொள்ளச் செய்வது மிகவும் இன்றியமையாததாகும். இதுபோன்று நடைமுறைப்படுத்தலில் கவனத்தில் கொள்ள வேண்டிய பல்வேறு கூறுகளைக் காண்போம்:

    • உயர்நிலை மேலாண்மையின் ஆதரவைப் பெறுதல்
    • அக இணையத்தை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டைப் பெறுதல்
    • வணிக நடவடிக்கைகளிலுள்ள தேவைகளைப் பகுத்தாய்தல்
    • பயனர்களின் தகவல் தேவைகளை அறிந்து கொள்ள அவர்களையும் திட்டப்பணியில் ஈடுபடுத்தல்
    • தேவையான வன்பொருள், மென்பொருள்களுடன் வலை வழங்கிகளை நிறுவுதல்
    • தகவல் போக்குவரத்துக்கான டிசிபீ/ஐபீ பிணைய அமைப்பை நிறுவுதல்
    • தேவையான பயன்பாட்டு மென்பொருள்களை நிறுவுதல்
    • அக இணையத்துக்கான தகவல் ஆவணங்களைத் தயார் செய்தல்
    • அக இணையத்தின் தொடக்கப் பரிசோதனைகளில் பணியாளர்களையும் ஈடுபடுத்தல்
    • பணியாளர்களுக்குப் பயிற்சி தந்து, ஊக்கமூட்டி, அக இணையத்தை அவர்கள் ஈடுப்பாட்டோடு பயன்படுத்த நடவடிக்கை எடுத்தல்
    • அக இணையத்தின் வடிவாக்கம், உருவாக்கம், செயல்பாடுகள், செயல்முறைகள், பாதுகாப்பு பற்றிய முழுமையான ஆவணமாக்கம் (Documentation).
    • அக இணையத்தைப் பயன்படுத்துவதற்கான ’பயனர் கையேடு’ (User Manual) தயார் செய்தல்.

    6.2.3 தேவையான வன்பொருள், மென்பொருள்

    அக இணையத்தை அதன் செயற்பரப்புக்கு ஏற்ப நான்கு வழிகளில் நிறுவ முடியும் எனப் பார்த்தோம். இவற்றுள் எந்த வகையான அக இணையம் என்பதைப் பொறுத்துத் தேவைப்படும் வன்பொருள்கள் வேறுபடுகின்றன. சொந்தக் கட்டமைப்பு எனில் வழங்கி, நுகர்விக் கணிப்பொறிகள், குவியம், தொடர்பி, திசைவி போன்ற பிணைய இணைப்புக் கருவிகள் அனைத்தும் தேவை. குத்தகை இணைப்புகளில் அமைவது என்றாலும் மேற்கண்ட அனைத்து வன்பொருள்களுமே தேவைதான். மதிப்பேற்று பிணையம் வழியாக அமைவது எனில் வழங்கிக் கணிப்பொறிகளும் நிறுவன வளாகத்துக்குள் பயன்படுத்தும் கணிப்பொறிகள், குவியம், தொடர்பிகள் மட்டும் போதும். பல்வேறு பகுதிகளில் செயல்படும் பிணையங்களை இணைக்கும் திசைவிகள், தகவல் தொடர்புக் கட்டமைப்புகளை மதிப்பேற்று பிணைய நிறுவனமே வழங்கும். இணையம் வழியாக அமைவது எனில் பயனர்களின் கணிப்பொறிகள் மட்டுமே போதும். பிற அனைத்தையும் இணையக் கட்டமைப்பே வழங்குகிறது. வலை வழங்கியையும் கட்டண அடிப்படையில் ஏதேனும் ஓர் இணையச் சேவை நிறுவனத்திடம் பெற முடியும். ஆனால் இந்தவகைப் பிணையங்களுக்கு அத்துமீறிகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனப் பார்த்தோம். எனவே நிறுவனப் பிணைய அமைப்புக்கும் இணையத்துக்கும் இடையே ‘தீச்சுவர்’ (Firewall) பாதுகாப்புள்ள திசைவி அல்லது நுழைவிகளை நிறுவ வேண்டும்.

    மென்பொருள்களைப் பொறுத்தவரை வழங்கிக் கணிப்பொறியில் தகவல் பரிமாற்ற நெறிமுறைகளை உள்ளடக்கிய வழங்கி இயக்க முறைமையுடன் வலைவழங்கி மென்பொருளும் (Web Server Software) நிறுவப்பட வேண்டும். மேலும் மின்னஞ்சல் போன்ற சேவைகளுக்கு அவற்றுக்கான வழங்கி மென்பொருள்களை நிறுவ வேண்டும். இணையம்வழி அமைந்த மெய்நிகர் தனியார் பிணையம் எனில் தீச்சுவர்த் திசைவிகளில் அதற்கான மென்பொருளை நிறுவ வேண்டும். மேலும் நிறுவனத் தகவல்களை இணையம்வழிக் கையாளும் முன்பு அவற்றை ‘மறையாக்கம்’ (Encryption), ‘மறைவிலக்கம்’ (Decryption) செய்வதற்கான மென்பொருள்களும் நிறுவப்பட்டிருக்க வேண்டும். நுகர்விக் கணிப்பொறிகளில் பிணைய வசதியுள்ள மேசைக் கணிப்பொறி இயக்க முறைமை இருந்தால் போதும். மேலும் நிறுவனத்தின் வலைப்பக்கங்களைக் கையாள ‘வலை உலாவி’ மென்பொருள் கட்டாயம் இருக்க வேண்டும். வேறு அலுவலகப் பயன்பாட்டு மென்பொருள்கள் தேவையெனில் அவற்றை நிறுவிக் கொள்ளலாம். மின்னஞ்சல், உடனடிச் செய்திப் பரிமாற்றம் போன்ற சேவைகளைப் பயன்படுத்த அவற்றுக்கான நுகர்வி மென்பொருள்களை நிறுவ வேண்டும்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    அக இணையத்தை வரையறுக்கவும்.
    2.
    அக இணையத்தை நிறுவும் வழிமுறைகள் யாவை?
    3.
    அக இணையத்துக்கான இணையத் தொழில்நுட்பங்கள் யாவை?
    4.
    அக இணையத்தைத் திட்டமிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய கூறுகள் எவை?

    5.

    அக இணையத்தை நடைமுறைப்படுத்துகையில் கவனத்தில் கொள்ள வேண்டிய கூறுகள் எவை?

    6.

    அக இணையத்தை நிறுவத் தேவையான வன்பொருள், மென்பொருள்கள் எவையெவை?

புதுப்பிக்கபட்ட நாள் : 23-06-2017 15:16:54(இந்திய நேரம்)