தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அக இணையத்தின் வரையறை

  • 6.1 அக இணையத்தின் வரையறை

    இணையத்தின் வருகைக்குப்பின் கணிப்பொறிப் பிணையங்களின் கட்டமைப்பில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. இணையத் தொழில்நுட்பங்களின் ஊடுருவல் பிணைய அமைப்பில் பல புதிய பரிமாணங்களைக் கொண்டு வந்தன. தனியார் பிணையங்கள் புதிய புதிய வடிவங்களைக் கண்டன. அத்தகைய ஒரு வடிவமே அக இணையம். அக இணையம் இணையத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்தது என்ற போதிலும் அது இணையத்தின் ஓர் அங்கமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. முற்றிலும் தனித்துச் செயல்படும் பிணையமாகவும் இருக்கலாம். அக இணையத்தின் வரையறுப்பினையும், அக இணையத்தை அமைக்கும் வழிமுறைகள் பற்றியும், அக இணையத்தில் பயன்படுத்தப்படும் இணையத் தொழில்நுட்பங்கள் பற்றியும் இப்பாடப் பிரிவில் அறிந்து கொள்வோம்.

    6.1.1 இணையம் என்றால் என்ன?

    அக இணையம் பற்றிப் பல்வேறு வரையறுப்புகள் உள்ளன. அவற்றுள் சில:

    வரையறை-1: அக இணையம் என்பது இணையத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த தனியார் பிணையம் ஆகும் (An intranet is a private network that uses Internet Technologies).

    வரையறை-2: அக இணையத்தைத் ’தனியார் இணையம்’ எனலாம் (Intranet is a private Internet).

    வரையறை-3: அக இணையத்தை இணையத்தின் தனியார் வடிவம் எனலாம் (An intranet can be understood as a private version of the Internet).

    வரையறை-4: அக இணையத்தை ஒரு நிறுவனத்துக்குள் மட்டும் உள்ளடங்கிய, இணையத்தின் தனியார் பயன்பாட்டுக்கான நீட்டிப்பு எனலாம் (Intranet is a private extention of the Internet confined to an organisation).

    வரையறை-5: அக இணையம் என்பது ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் மட்டுமே அணுகக் கூடிய அந்நிறுவனத்தின் வலையகமும் அதனை அணுகும் கணிப்பொறிகளின் அகக்கட்டமைப்புமாகும் (Intranet refers to an organisation’s internal website which can be accessed only by its employees and their computer infrastructure).

    மேற்கண்ட பல்வேறு வரையறுப்புகளின் சாரமாக, அக இணையத்தைக் கீழ்க்காணுமாறு வரையறுக்கலாம்:

    “அக இணையம் என்பது இணையத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த, ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் மட்டுமே அணுக முடிகிற, ஒரு தனியார் பிணையமாகும்”

    “அக இணையம் என்பது இணையத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த, ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் மட்டுமே அணுக முடிகிற, ஒரு தனியார் பிணையமாகும்” ஆக, அக இணையத்தின் மூன்று முக்கிய கூறுகளை இவ்வாறு பட்டியலிடலாம்:

    (1) ஒரு நிறுவனத்தின் தனியார் பிணையம்.
    (2) இணையத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்தது.
    (3) அந்நிறுவனத்தின் பணியாளர்கள் மட்டுமே அணுக முடியும்.

    6.1.2 அக இணையத்தை நிறுவும் வழிமுறைகள்

    அக இணையம் இணையத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்தது என்றாலும் அது இணையத்தின் ஓர் அங்கமாகத்தான் அமைய வேண்டும் என்கிற கட்டாயமில்லை எனக் குறிப்பிட்டோம். அதாவது, அக இணையம் என்பது வெளித்தொடர்பு எதுவுமின்றி ஒரு நிறுவனத்துக்குள் செயல்படும் தனிப்பட்ட பிணையமாக இருக்க முடியும். அக இணையம் ஒரு குறிப்பிட்ட செயற்பரப்பில் செயல்படக் கூடிய குறும்பரப்பு, வளாகப் பரப்பு, மாநகர்ப் பரப்பு அல்லது விரிபரப்புப் பிணையமாக இருக்கலாம். இது நிறுவனத்தின் செயற்பரப்பைப் பொறுத்தது. நிறுவனத்தின் செயற்பரப்பு, செயல்பாடு மற்றும் அதன் வல்லமையைப் பொறுத்து, அக இணையத்தை அமைக்கக் குறைந்தது நான்கு வழிமுறைகள் உள்ளன:

    (1) சொந்தக் கட்டமைப்பில் அமைவது: அக இணையத்தின் வன்பொருள், மென்பொருள், தகவல் பரிமாற்ற சாதனங்கள் உட்படப் பிணையக் கட்டமைப்பு முழுக்க அந்நிறுவனத்துக்கே சொந்தமானதாக இருக்கும். குறும்பரப்பு அல்லது வளாகப் பரப்புப் பிணையங்கள் இவ்வாறு அமைவது சாத்தியம். மாநகர் அல்லது விரிபரப்புப் பிணையத்தில் தகவல் பரிமாற்றக் கட்டமைப்பு முழுக்க நிறுவனமே சொந்தமாக நிறுவிக் கொள்வது அவ்வளவு எளிதன்று. செலவு அதிகமாகும்.

    (2) குத்தகை இணைப்புகளில் அமைவது: மாநகர்ப் பிணையம் எனில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் குறும்பரப்புப் பிணையங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அவற்றுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்துக்குத் தொலைதொடர்பு நிறுவனங்களின் தகவல் தொடர்பு வடங்களில் குத்தகை இணைப்புகளைப் (Leased Lines) பயன்படுத்திக் கொள்ளலாம்.

    (3) மதிப்பேற்று பிணையக் கட்டமைப்பில் அமைவது: அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் மற்றும் பல தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தொடர்பிகள், திசைவிகள், நுழைவிகள், தகவல் தொடர்பு வடங்களை உள்ளடக்கிய பிணையக் கட்டமைப்புகளை உருவாக்கி வைத்துள்ளன. அக்கட்டமைப்பை ஒரு நிறுவனம் கட்டண அடிப்படையில் தமது அக இணையத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மாநகர்ப் பிணையம் அல்லது சில நகரங்களை உள்ளடக்கிய விரிபரப்புப் பிணையம் எனில் இவ்வாறு அமைத்துக் கொள்ள முடியும். ஆனாலும் நாடு முழுக்க அல்லது பல நாடுகளில் பரந்த விரிபரப்புப் பிணையம் எனில் செலவு அதிகமாகும்.

    (4) இணையத்தின் அங்கமாக அமைவது: மிகப்பரந்த விரிபரப்புப் பிணையமாக அமையும் ஓர் அக இணையத்தைச் சொந்தமாகவோ, குத்தகை இணைப்புகளின் மூலமாகவோ, தகவல் தொடர்பு நிறுவனங்களின் மதிப்பேற்று பிணையக் கட்டமைப்பு வழியாகவோ அமைப்பது சாத்தியமில்லை. உலகம் முழுக்கப் பரந்து கிடக்கும் இணையக் கட்டமைப்பின் வழியே அமைத்துக் கொள்வதே செலவு குறைந்த முறையாகும். நிறுவனத்தின் வலையகமும், வலையகத் தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ள நிறுவன வழங்கிக் கட்டமைப்பும், அவ்வலையகத்தை அணுகும் நிறுவனப் பணியாளர்களின் கணிப்பொறி அமைப்புகளும் அக இணையத்தின் அங்கங்களாய் அமைகின்றன.

    இவற்றுள் பின்னிரண்டும் ‘மெய்நிகர் தனியார் பிணையம்’ (Virtual Private Network) எனப்படும் என்பதையும் இணையம்வழி அமையும் மெய்நிகர் தனியார் பிணையங்களுக்கு அத்துமீறிகளால் ஆபத்து உண்டு என்பதால் பிணையப் பாதுகாப்புக்குத் தனிச்சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதையும் ஏற்கெனவே முந்தைய பாடத்தில் (பாடம் 3.3) படித்ததை நினைவு கூர்க.

    6.1.3 இணையத் தொழில்நுட்பங்கள்

    அக இணையம் இணையத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை மீண்டும் மீண்டும் பலமுறை சொல்லி வந்திருக்கிறோம். இணையத் தொழில் நுட்பங்கள் எனப் பலவற்றைப் பட்டியலிட முடியும். அவற்றுள் கீழ்க்காணும் இணையத் தொழில் நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த தனியார் பிணையத்தை ’அக இணையம்’ எனக் கூறலாம்.

    (1) பிணையக் கட்டுமானம் (Network Architecture): இணையமானது நுகர்வி-வழங்கிப் (Client-Server) பிணையக் கட்டுமானத்தில் அமைந்தது என்பதை அறிவோம். அக இணையமும் நுகர்வி-வழங்கிப் பிணைய அமைப்பைக் கொண்டதாகும். இணையத்தின் தொடர்பின்றி தனித்து இயங்குவதாயினும் அக இணையம் ஒரு வலையகமாகவே செயல்படும்.

    (2) தரவுகள், ஆவணங்கள் (Data and Documents): நிறுவனத்தின் தகவல்கள் அனைத்தும் மீவுரைக் குறியிடு மொழியில் (hyper-text markup language) வடிவமைக்கப்பட்ட வலைப்பக்கங்கள் (web pages) எனப்படும் மீவுரை ஆவணங்களிலேயே (hyper-text documents) சேமிக்கப்பட்டிருக்கும். தரவுத்தளங்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளும் வலைப்பக்கங்கள் மூலமாகவே பரிமாறிக் கொள்ளப்படும். தரவு உள்ளீடும் வலைப்பக்கங்கள் வழியாகவே நடைபெறும். மீத்தொடுப்புகள் (hyper links) மூலமாக ஆவணங்கள் அணுகப்படும்.

    (3) வழங்கியும் நுகர்வியும் (Server and Client): அக இணையத்தின் வழங்கி, வலை வழங்கியாகும் (Web Server). வலை வழங்கியில் வலைப்பக்கங்களில் நிறுவனத் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். நுகர்விக் கணிப்பொறியில் நிறுவப்பட்டுள்ள நுகர்வி மென்பொருளான வலை உலாவி (Web Browser) மூலம் வழங்கியிலிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன.

    (4) தகவல் பரிமாற்ற நெறிமுறைகள் (Communication Protocols): பிணையத்தில் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படும் மென்பொருள்கள் ‘நெறிமுறைகள்’ என அழைக்கப்படுவதை நாம் ஏற்கெனவே அறிவோம். இணையத்தில் ஒவ்வொரு வகைத் தகவல் பரிமாற்றத்துக்கும் ஒவ்வொரு நெறிமுறை எனப் பல தனிச்சிறப்பான நெறிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் தலையாயது இணையத் தகவல் போக்குவரத்துக்கான டீசிபீ/ஐபீ (TCP/IP - Transmission Control Protocol/ Internet Protocol) ஆகும். வலைப்பக்கங்களை அணுக ஹெச்டீடீபீ (HTTP - Hyper Text Transfer Protocol), கோப்புப் பரிமாற்றத்துக்கு எஃப்டீபீ (FTP - File Transfer Protocol), மின்னஞ்சல் அனுப்ப எஸ்எம்டீபீ (SMTP - Simple Mail Transfer Protocol), மின்னஞ்சல் பெற பாப் (POP - Post Office Protocol), செய்திப் பரிமாற்றத்துக்கு என்என்டீபீ (NNTP - Network News Transfer Protocol) எனப் பல்வேறு நெறிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நெறிமுறைகள் அனைத்தும் ’டீசிபீ/ஐபீ குடும்ப நெறிமுறைகள்’ எனப்படுகின்றன. அக இணையத்திலும் தகவல் பரிமாற்றத்துக்கு டீசிபீ/ஐபீ குடும்ப நெறிமுறைகளே பயன்படுத்தப்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-11-2016 18:21:58(இந்திய நேரம்)