தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அம்மூவனார்


அம்மூவனார்

49. நெய்தல்
அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்.
நீ ஆகியர் எம் கணவனை;
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.
தலைமகன் பரத்தைமாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் அவனைக் கண்ட வழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழி, பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது. - அம்மூவனார்

125.நெய்தல்
இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே,
உளெனே வாழி-தோழி!-சாரல்
தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல்
பறை வலம் தப்பிய பைதல் நாரை
திரை தோய் வாங்கு சினை இருக்கும்
தண்ணம் துறைவனொடு, கண்மாறின்றே,
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள், தோழிக்குக் கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகச் சொல்லியது. - அம்மூவன்.

163.நெய்தல்
யார் அணங்குற்றனை-கடலே! பூழியர்
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை.
வெள் வீத் தாழை திரை அலை
நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே?
தன்னுள் கையாறு எய்திடு கிளவி - அம்மூவன்

303. நெய்தல்
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல்
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ!
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப்
பசந்தனள்மன் என் தோழி-என்னொடும்
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.
செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. - அம்மூவன்

306. நெய்தல்
'மெல்லிய, இனிய, மேவரு தகுந,
இவை மொழியாம்' எனச் சொல்லினும், அவை நீ,
மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன்
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின்
வண்டு வீழ்பு அயரும் கானல்-
தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே?
காப்பு மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து, கிழத்தி உரைத்தது. - அம்மூவன்

318. நெய்தல்
எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்,
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்,
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன்
குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று
அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப்
பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள்
பிழையா வஞ்சினம் செய்த
களவனும், கடவனும், புணைவனும், தானே.
கிழவன் கேட்கும் அண்மையன் ஆகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - அம்மூவன்

327. குறிஞ்சி
'நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்வயின்
நயன் இலர் ஆகுதல் நன்று' என உணர்ந்த
குன்ற நாடன்தன்னினும், நன்றும்
நின் நிலை கொடிதால்-தீம் கலுழ் உந்தி!
நம் மனை மட மகள், 'இன்ன மென்மைச்
சாயலள்; அளியள்' என்னாய்,
வாழை தந்தனையால், சிலம்பு புல்லெனவே.
கிழவன் கேட்கும் அண்மையனாக, அவன் மலையினின்றும் வரும் யாற்றொடு உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது. - அம்மூவன்

340. நெய்தல்
காமம் கடையின் காதலர்ப் படர்ந்து,
நாம் அவர்ப் புலம்பின், நம்மோடு ஆகி,
ஒரு பாற் படுதல் செல்லாது, ஆயிடை,
அழுவம் நின்ற அலர் வேர்க் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி, ஓதம்
பெயர்தரப் பெயர்தந்தாங்கு,
வருந்தும்-தோழி!-அவர் இருந்த என் நெஞ்சே.
இரவுக்குறி உணர்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது. - அம்மூவன்

351. நெய்தல்
வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?
தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, 'நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?'என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது. - அம்மூவன்

397. நெய்தல்
நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ
நெய்தல் மா மலர்ப் பெய்த போல
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப!
தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு,
'அன்னாய்!' என்னும் குழவி போல,
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்,
நின் வரைப்பினள் என் தோழி;
தன் உறு விழுமம் களைஞரோ இலளே.
வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது. - அம்மூவன்

401. நெய்தல்
அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல்
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்
ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கு விளையாடலும் கடிந்தன்று,
ஐதே கம்ம, மெய் தோய் நட்பே!
வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள், தன்னுள்ளே சொல்லியது. - அம்மூவன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:04:49(இந்திய நேரம்)