தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Manimeagalai


  25 ஆபுத்திரனோடு மணிபல்லவம்

 
அடைந்த காதை
 
 
 

[ மணிமேகலை ஆபுத்திரனை மணிபல்லவத்திடை

 

அழைத்துப் புத்தபீடிகைகாட்டிப் பிறப்பு உணர்த்திய ]

 

 
 
அரசன் உரிமையோடு அப்பொழில் புகுந்து
தரும சாவகன் தன்அடி வணங்கி
அறனும் மறனும் அநித்தமும் நித்தத்
திறனும் துக்கமும் செல்உயிர்ப் புக்கிலும்
5
சார்பில் தோற்றமும் சார்புஅறுத்து உய்தியும்
ஆரியன் அமைதியும் அமைஉறக் கேட்டுப்
பெண்ணிணை இல்லாப் பெருவனப்பு உற்றாள்
கண்இணை இயக்கமும் காமனோடு இயங்கா
அங்கையில் பாத்திரம் கொண்டுஅறம் கேட்கும்
10
இங்குஇணை இல்லாள் இவள்யார் என்ன,
காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன்
நாவலம் தீவில்இந் நங்கையை ஒப்பார்
யாவரும் இல்லை இவள்திறம் எல்லாம்
கிள்ளி வளவனொடு கெழுதகை வேண்டிக்
15
கள்அவிழ் தாரோய் கலத்தொடும் போகிக்
காவிரிப் படப்பை நல்நகர் புக்கேன்
மாதவன் அறவணன் இவள்பிறப்பு உணர்ந்துஆங்கு
ஓதினன் என்றுயான் அன்றே உரைத்தேன்
ஆங்குஅவள் இவள்அவ் அகல்நகர் நீங்கி
20
ஈங்கு வந்தனள் என்றலும் இளங்கொடி
நின்கைப் பாத்திரம் என்கைப் புகுந்தது
மன்பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய்
அப்பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆவயிற்று
இப்பிறப்பு அறிந்திலை என்செய் தனையோ
25
மணிபல் லவம்வலம் கொண்டால் அல்லது
பிணிப்புஉறு பிறவியின் பெற்றியை அறியாய்
ஆங்கு வருவாய் அரசநீ என்றுஅப்
பூங்கமழ் தாரோன் முன்னர்ப் புகன்று
மைஅறு விசும்பின் மடக்கொடி எழுந்து,
30
வெய்யவன் குடபால் வீழா முன்னர்
வான்நின்று இழிந்து மறிதிரை உலாவும்
பூநாறு அடைகரை எங்கணும் போகி
மணிபல் லவம்வலம் கொண்டு மடக்கொடி
பிணிப்புஅறு மாதவன் பீடிகை காண்டலும்
35
தொழுதுவலம் கொள்ளஅத் தூமணிப் பீடிகைப்
பழுதுஇல் காட்சி தன்பிறப்பு உணர்த்தக்
காயங் கரைஎனும் பேரியாற்று அடைகரை
மாயம்இல் மாதவன் தன்அடி பணிந்து
தருமம் கேட்டுத் தாள்தொழுது ஏத்திப்
40
பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம்
விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்
கலங்குஅஞர்த் தீவினை கடிமின் கடிந்தால்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்
ஆகலின் நல்வினை அயராது ஓம்புமின்
45
புலவன் முழுதும் பொய்இன்று உணர்ந்தோன்
உலகுஉயக் கோடற்கு ஒருவன் தோன்றும்
அந்நாள் அவன்அறம் கேட்டோர் அல்லது
இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை
மாற்றுஅருங் கூற்றம் வருவதன் முன்னம்
50
போற்றுமின் அறம்எனச் சாற்றிக் காட்டி
நாக்கடிப் பாக வாய்ப்பறை அறைந்தீர்
அவ்வுரை கேட்டுநும் அடிதொழுது ஏத்த
வெவ்வுரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்
பெரியவன் தோன்றா முன்னர்இப் பீடிகை
55
கரியவன் இட்ட காரணம் தானும்
மன்பெரும் பீடிகை மாய்ந்துஉயிர் நீங்கிய
என்பிறப்பு உணர்த்தலும் என்என்று யான்தொழ
முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது
மற்றப் பீடிகை தன்மிசைப் பொறாஅது
60
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது
வானவன் வணங்கான் மற்றுஅவ் வானவன்
பெருமகற்கு அமைத்துப் பிறந்தார் பிறவியைத்
தரும பீடிகை சாற்றுக என்றே
அருளினன் ஆதலின் ஆயிழை பிறவியும்
65
இருள்அறக் காட்டும் என்றுஎடுத்து உரைத்தது
அன்றே போன்றது அருந்தவர் வாய்மொழி
இன்றுஎனக்கு என்றே ஏத்தி வலம்கொண்டு
ஈங்குஇவள் இன்னணம் ஆக, இறைவனும்
ஆங்குஅப் பொழில்விட்டு அகநகர்புக்குத
70
தந்தை முனியாத் தாய்பசு வாக
வந்த பிறவியும், மாமுனி அருளால்
குடர்த்தொடர் மாலை சூழாது ஆங்குஓர்
அடர்ப்பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்,
மாமுனி அருளால் மக்களை இல்லோன்
75
பூமிசந் திரன்கொடு போந்த வண்ணமும்,
ஆய்தொடி அரிவை அமரசுந் தரிஎனும்
தாய்வாய்க் கேட்டுத் தாழ்துயர் எய்தி
இறந்த பிறவியின் யாய்செய் ததூஉம்
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து
80
செருவேல் மன்னர் செவ்விபார்த்து உணங்க
அரைசுவீற் றிருந்து புரையோர்ப் பேணி
நாடகம் கண்டு பாடல் பான்மையில்
கேள்வி இன்னிசை கேட்டுத் தேவியர்
ஊடல் செவ்வி பார்த்துநீ டாது
85
பாடகத் தாமரைச் சீறடி பணிந்து
தேமரு கொங்கையில் குங்குமம் எழுதி
அங்கையில் துறுமலர் சுரிகுழல் சூட்டி
நறுமுகை அமிழ்துஉறூஉம் திருநகை அருந்தி
மதிமுகக் கருங்கண் செங்கடை கலக்கக்
90
கருப்பு வில்லி அருப்புக்கணை தூவத்
தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து
தூஅறத் துறத்தல் நன்றுஎனச் சாற்றித்
தெளிந்த நாதன்என் செவிமுதல் இட்டவித்து
ஏதம் இன்றாய் இன்று விளைந்தது
95
மணிமே கலைதான் காரண மாகஎன்று
அணிமணி நீள்முடி அரசன் கூற,
மனம்வே றாயினன் மன்என மந்திரி
சனமித் திரன்அவன் தாள்தொழுது ஏத்தி,
எம்கோ வாழி என்சொல் கேள்மதி
100
நும்கோன் உன்னைப் பெறுவதன் முன்னாள்
பன்னீ ராண்டுஇப் பதிகெழு நல்நாடு
மன்உயிர் மடிய மழைவளம் கரந்துஈங்கு
ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகித்
தான்தனி தின்னும் தகைமையது ஆயது
105
காய்வெங் கோடையில் கார்தோன் றியதுஎன
நீதோன் றினையே நிரைத்தார் அண்ணல்
தோன்றிய பின்னர்த் தோன்றிய உயிர்கட்கு
வானம் பொய்யாது மண்வளம் பிழையாது
ஊன்உடை உயிர்கள் உறுபசி அறியா
110
நீஒழி காலை நின்நாடு எல்லாம்
தாய்ஒழி குழவி போலக் கூஉம்
துயர்நிலை உலகம் காத்தல் இன்றிநீ
உயர்நிலை உலகம் வேட்டனை ஆயின்
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ
115
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே
தன்உயிர்க்கு இரங்கான் பிறஉயிர் ஓம்பும்
மன்உயிர் முதல்வன் அறமும்ஈ தன்றால்
மதிமாறு ஓர்ந்தனை மன்னவ என்றே
முதுமொழி கூற, முதல்வன் கேட்டு
120
மணிபல் லவம்வலம் கொள்வதற்கு எழுந்த
தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்
அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும்
ஒருமதி எல்லை காத்தல்நின் கடன்எனக்
கலம்செய் கம்மியர் வருகெனக் கூஉய்
125
இலங்குநீர்ப் புணர் எறிகரை எய்தி
வங்கம் ஏறினன் மணிபல் லவத்திடைத்
தங்காது அக்கலம் சென்றுசார்ந்து இறுத்தலும்
புரைதீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி
அரைசன் கலம்என்று அகமகிழ்வு எய்திக்
130
காவலன் தன்னொடும் கடல்திரை உலாவும்
தேமலர்ச் சோலைத் தீவகம் வலம்செய்து
பெருமகன் காணாய் பிறப்புஉணர் விக்கும்
தரும பீடிகை இதுஎனக் காட்ட,
வலங்கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு
135
உலந்த பிறவியை உயர்மணிப் பீடிகை
கையகத்து எடுத்துக் காண்போர் முகத்தை
மைஅறு மண்டிலம் போலக் காட்ட
என்பிறப்பு அறிந்தேன் என்இடர் தீர்ந்தேன்
தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்
140
மாரி நடுநாள் வயிறுகாய் பசியால்
ஆர்இருள் அஞ்சாது அம்பலம் அணைந்துஆங்கு
இரந்துஊண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு
அருந்துஊண் காணாது அழுங்குவேன் கையின்
நாடுவறம் கூரினும்இவ் ஓடுவறம் கூராது
145
ஏடா அழியல் எழுந்துஇது கொள்கென
அமுத சுரபி அங்கையில் தந்துஎன்
பவம்அறு வித்த வானோர் பாவாய்!
உணர்வில் தோன்றி உரைப்பொருள் உணர்த்தும்
அணிதிகழ் அவிர்ஒளி மடந்தை நின்அடி
150
தேவர் ஆயினும் பிரமர் ஆயினும்
 
நாமாசு கழூஉம் நலம்கிளர் திருந்துஅடி
பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது
மறந்து வாழேன் மடந்தைஎன்று ஏத்தி,
மன்னவன் மணிமே கலையுடன் எழுந்து
155
தென்மேற் காகச் சென்று திரைஉலாம்
கோமுகி என்னும் பொய்கையின் கரைஓர்
தூமலர்ப் புன்னைத் துறைநிழல் இருப்ப
ஆபுத் திரனோடு ஆயிழை இருந்தது
காவல் தெய்வதம் கண்டுஉவந்து எய்தி
160
அருந்துஉயிர் மருந்துமுன் அங்கையில் கொண்டு
பெருந்துயர் தீர்த்தஅப் பெரியோய் வந்தனை
அந்நாள் நின்னை அயர்த்துப் போயினர்
பின்நாள் வந்துநின் பெற்றிமை நோக்கி
நின்குறி இருந்து தம்உயிர் நீத்தோர்
165
ஒன்பது செட்டிகள் உடல்என்பு இவைகாண்
ஆங்குஅவர் இடஉண்டு அவருடன் வந்தோர்
ஏங்கிமெய் வைத்தோர் என்பும் இவைகாண்
ஊர்திரை தொகுத்த உயர்மணல் புதைப்ப
ஆய்மலர்ப் புன்னை அணிநிழல் கீழால்
170
அன்புஉடை ஆர்உயிர் அரசற்கு அருளிய
என்புஉடை யாக்கை இருந்தது காணாய்
நின்உயிர் கொன்றாய் நின்உயிர்க்கு இரங்கிப்
பின்நாள் வந்த பிறர்உயிர் கொற்றாய்
கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை.
175
பலர்தொழு பாத்திரம் கையின் ஏந்திய
மடவரல் நல்லாய் நின்தன் மாநகர்
கடல்வயிறு புக்கது காரணம் கேளாய்:
நாக நல்நாடு ஆள்வோன் தன்மகள்
பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள்
180
பனிப்பகை வானவன் வழியில் தோன்றிய
புனிற்றுஇளங் குழவியொடு பூங்கொடி பொருந்திஇத்
தீவகம் வலம்செய்து தேவர்கோன் இட்ட
மாபெரும் பீடிகை வலங்கொண்டு ஏத்துழி,
கம்பளச் செட்டி கலம்வந்து இறுப்ப
185
அங்குஅவன் பால்சென்று அவன்திறம் அறிந்து
கொற்றவன் மகன்இவன் கொள்கெனக் கொடுத்தலும்
பெற்ற உவகையன் பெருமகிழ்வு எய்திப்
பழுதுஇல் காட்சிப் பைந்தொடி புதல்வனைத்
தொழுதனன் வாங்கித் துறைபிறக்கு ஒழியக்
190
கலங்கொண்டு பெயர்ந்த அன்றே கார்இருள்
இலங்குநீர் அடைகரை அக்கலம் கெட்டது
கெடுகல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது
வடிவேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப,
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்
195
நல்மணி இழந்த நாகம் போன்று
கானலும் கடலும் கரையும் தேர்வுழி
வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது
மணிமே கலாதெய்வம் மற்றுஅது பொறாஅள்
அணிநகர் தன்னை அலைகடல் கொள்கென
200
இட்டனள் சாபம் பட்டது இதுவால்
கடவுள் மாநகர் கடல்கொளப் பெயர்ந்த
வடிவேல் தடக்கை வானவன் போல
விரிதிரை வந்து வியன்நகர் விழுங்க
ஒருதனி போயினன் உலக மன்னவன்.
205
அருந்தவன் தன்னுடன் ஆயிழை தாயரும்
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்
பரப்புநீர்ப் பௌவம் பலர்தொழக் காப்போள்
உரைத்தன கேட்க உறுகுவை ஆயின்நின்
மன்உயிர் முதல்வனை மணிமே கலாதெய்வம்
210
முன்னாள் எடுத்ததும் அந்நாள் ஆங்குஅவன்
அறஅரசு ஆண்டதும் அறவணன் தன்பால்
மறுபிறப் பாட்டி வஞ்சியுள் கேட்பைஎன்று
அந்தரத் தீவகத்து அருந்தெய்வம் போயபின்,
மன்னவன் இரங்கி மணிமே கலையுடன்
215
துன்னிய தூமணல் அகழத் தோன்றி
ஊன்பிணி அவிழவும் உடல்என்பு ஒடுங்கித்
தான்பிணி அவிழாத் தகைமையது ஆகி
வெண்சுதை வேய்ந்துஅவன் இருக்கையின் இருந்த
பண்புகொள் யாக்கையின் படிவம் நோக்கி
220
மன்னவன் மயங்க, மணிமே கலைஎழுந்து
என்உற் றனையோ இலங்குஇதழ்த் தாரோய்
நின்நாடு அடைந்துயான் நின்னைஈங்கு அழைத்தது
மன்னா நின்தன் மறுபிறப்பு உணர்த்தி
அந்தரத் தீவினும் அகன்பெருந் தீவினும்
225
நின்பெயர் நிறுத்த நீள்நிலம் ஆளும்
அரசர் தாமே அருள்அறம் பூண்டால்
பொருளும் உண்டோ பிறபுரை தீர்த்தற்கு
அறம்எனப் படுவது யாதுஎனக் கேட்பின்
மறவாது இதுகேள் மன்உயிர்க்கு எல்லாம்
230
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்என, காவலன் உரைக்கும
என்நாட் டாயினும் பிறர்நாட் டாயினும்
நல்நுதல் உரைத்த நல்அறம் செய்கேன்
என்பிறப்பு உணர்த்தி என்னைநீ படைத்தனை
235
நின்திறம் நீங்கல் ஆற்றேன் யான்என,
புன்கண் கொள்ளல்நீ போந்ததற்கு இரங்கிநின்
மன்பெரு நாடு வாய்எடுத்து அழைக்கும்
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன்என்று
அந்தரத்து எழுந்தனள் அணியிழை தான்என்.
 
 

ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்தகாதை முற்றிற்று.
 

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:31:31(இந்திய நேரம்)