தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தசாவதாரம்

    முனைவர் கி.கந்தன்,
    துறைத்தலைவர்,
    சிற்பத்துறை.

    விஷ்ணு மனிதவடிவில் பூமியில் சில அற்புதச் செயல்களை நிகழ்த்துவதற்காகப் பெற்ற உருவங்களே அவதாரம் எனப்படுகின்றன. இத்தகைய அவதாரங்கள் முறையே மத்சய (மீன்) அவதாரம், கூர்ம (ஆமை) அவதாரம், வராக (பன்றி) அவதாரம், நரசிம்ம (மனிதன் மற்றும் சிம்மம்) அவதாரம், வாமனன் (குறுவடிவம்) அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ணாவதாரம், பலராமன் மற்றும் கல்கி ஆகியவை ஆகும். இதில் பலராமனுக்கு மாற்றாகப் புத்தர் விஷ்ணுவின் ஒரு அவதாரமாகக் காட்டப்பெறும் சான்றுகளும் உள்ளன.

    சான்றுகள்:

    அவதாரங்கள் தொடர்பான புராணப் பின்னணி வால்மீகி இராமயணத்திலும், தமிழகத்தின் கம்பராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இவற்றின் தொன்மைக்காலச் சான்றுகள் பல்வேறு இலக்கியங்கள் மற்றம் ஆகமங்களிலிருந்து அறியப்படுகின்றன. தமிழ் இலக்கியச் சான்றுகளில் வாமன திருவிக்கிரம அவதாரம் என்பது அதிக அளவில் இடம் பெற்றுள்ள ஓர் அவதாரமாகும். பரிபாடல் மற்றும் சிலப்பதிகாரத்தில் நரசிம்ம அவதாரம் தொடர்பான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரத்தில் ராம அவதாரம் தொடர்பான சான்றுகள் காணக்கூடியதாக உள்ளன. அகநானூற்றுப் பாடலில் பரசுராமர் அவதாரம் தொடர்பான சான்றுகள் காணக்கூடியதாக உள்ளன. அகநானூற்றுப் பாடலில் பரசுராமர் அவதாரம் தொடர்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன. (பாடல் 220 - 11 ). கலித்தொகையில் விஷ்ணுவின் வாமன அவதாரம் தொடர்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன. சங்க இலக்கியச் சான்றுகளுக்கு அடுத்த நிலையில் பக்தி இயக்க காலத்தில் உருப்பெற்ற நாலாயிரந்திவ்வியப் பிரபந்தங்களில் தசாவதாரம் தொடர்பான பல்வேறு குறிப்புகள் ஆழ்வர்களால் பாடப்பெற்றுள்ளன. குறிப்பாக, தசாவதாரங்களில் புத்தரும் ஒருவர் என்ற குறிப்பு எந்த ஆய்வாளராலும் குறிப்பிடப்படவில்லை. திருமங்கையாழ்வாரின் பாசுரத்தில் மட்டும் பத்து அவதாரங்களின் பெயர்ப்பட்டியல் இடம் பெற்றுள்ளன.

    வரலாற்றுக் கால அடிப்படையில் நோக்கிடும்போது அவதாரங்கள் கூறப்படுவது கி.பி 5-ஆம் நூற்றாண்டாகும். குப்தர்களின் காலத்தில்¢ இருந்து அறியப்படுகிறது. தமிழகத்தில் பல்லவர் காலத்தில் குறிப்பாக கி.பி, 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாமல்லபுரம் பல்லவர் குடவரையில் இடம்பெற்றுள்ள கல்வெட்டின் வாயிலாக வெளிக் கொணரப்படுகிறது.

    “மத்சய கூர்மவராகசய நரசிம்மாச்சய வாமன
    ராமோ ராமசய ராமசய புத்தா கல்கி ததசே”

    மேற்கூறிய வடமொழிக் கல்வெட்டுச் சான்று அடிப்படையில் தமிழகக் கலை வரலாற்றில் தசாவதாரச் சிற்பங்கள் தோற்றம் பெற்றன எனலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:00:55(இந்திய நேரம்)