தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உருபனியல் - வினைச்சொல்

  • 6.4 உருபனியல் - வினைச்சொல்

    வினைச்சொல் அமைப்பில் சில மாற்றங்களைத் தவிரப் பெரும்பாலும் சங்ககாலத் தமிழே சங்கம் மருவிய காலத்தில் வழங்குகிறது. சங்க காலத்தில் வழங்கிய வினைமுற்று விகுதிகளில் பெரும்பாலானவை சங்கம் மருவிய காலத்தில் வழங்குகின்றன. சில விகுதிகள் மட்டுமே வழங்கவில்லை. மேலும் சில புதிய வினைமுற்று விகுதிகள் வழக்கிற்கு வருகின்றன. தொல்காப்பியர் குறிப்பிட்டுக் கூறாத வினையெச்ச, பெயரெச்ச வாய்பாடுகள் பல சங்க காலத்தில் வழங்கியுள்ளன. இவை யாவும் சங்கம் மருவிய காலத்தில் வளர்ச்சியுற்று நிலை பெறுகின்றன. மேலும் புதிய வினையெச்ச வாய்பாடு ஒன்றும் வந்து வழங்குகிறது.

    6.4.1 தன்மை வினைமுற்று

    தன்மை ஒருமை வினைமுற்றில் ஏன், என், அல், கு, அன் ஆகிய ஐந்து விகுதிகள் வழங்குகின்றன. ஏன் விகுதியே மிக அதிகமாக வழங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக, சங்க காலத்தில் புதிதாக வந்த அன் விகுதி அதிக இடங்களில் வழங்குகிறது.

    உள்ளுவன் மன் யான் (குறள். 1125)
    அம் சில் ஓதியை அறிகுவன் யான் (சிலம்பு. 11 ; 195)

    (உள்ளுவன் = நினைப்பேன் ; அறிகுவன் = அறிவேன் ; தருகுவன் = தருவேன்.)

    தன்மைப் பன்மை வினைமுற்றில் ஏம், அம், ஆம், ஓம், கும், தும், டும் ஆகிய ஏழு விகுதிகள் வழங்குகின்றன. சங்க காலத் தமிழில் வழங்கிய எம், றும் ஆகிய இரண்டும் வழங்கவில்லை. சங்க காலத்தில் இரண்டு இடங்களில் மட்டும் முதன்முதலாக வழக்கிற்கு வந்த ஓம் என்ற விகுதி சங்கம் மருவிய கால இலக்கியங்களில் 12 இடங்களில் பயில்கிறது.

    பொன் ஆடி வந்த புதுப்புனல் மற்றையார்
    முன் ஆடினோம் தோழி (சிலம்பு. 24 ; 4:3-4)

    6.4.2 முன்னிலை வினைமுற்று

    முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகளாக இ, ஐ, ஆய், ஓய் ஆகிய நான்கும், முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகளாக இர், ஈர், மின், மின்கள் ஆகிய நான்கும் வழங்குகின்றன. பன்மை விகுதிகளுள், மின்கள் என்பது இரட்டைப் பன்மை விகுதி. இது சங்கம் மருவிய காலத்தில்தான் முதன் முதலாகப் பயில்கிறது. சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில் மட்டுமே இது வருகிறது.

    நண்ணுமின்கள் நல் அறமே (சிலம்பு. 16 ; வெண்பா.1)

    (நண்ணுமின்கள் = செய்யுங்கள்)

    6.4.3 படர்க்கை வினைமுற்று

    படர்க்கை வினைமுற்றுகளில் இருதிணை ஐம்பால் காட்டும் விகுதிகளாகக் கீழ்க்கண்ட விகுதிகள் சங்கம் மருவிய காலத்தில் வழங்குகின்றன.

    ஆண்பால்
    - அன், ஆன்
    (ஓன் - திரிந்த வடிவம்)
    பெண்பால்
    - அள், ஆள்
    (ஓள் - திரிந்த வடிவம்)
    பலர்பால்
    - அர், ஆர்
    (ஓர் - திரிந்த வடிவம்)
    ஒன்றன்பால்
    - து,டு, று
    பலவின்பால்
    - அ, ஆ, ஐ

    சங்ககாலத்தில் ஓன், ஓள், ஓர் ஆகிய விகுதித் திரிபுகள் வினைமுற்றுகளிலும் வினையாலணையும் பெயர்களிலும் வழங்கின, ஆனால் சங்கம் மருவிய காலத்தில் இவ்விகுதிகள் வினையாலணையும் பெயர்களில் மட்டுமே பெரும்பாலும் வழங்குகின்றன. வினைமுற்றுகளில் அவ்வளவாக வழங்கவில்லை.

    ஆர்கள் என்ற இரட்டைப் பன்மை விகுதி சங்ககாலத்தில் கலித்தொகையில் வாழ்வார்கள் என்ற வினைமுற்றுச் சொல் ஒன்றில் மட்டும் வந்தது. இவ்விகுதி சங்கம் மருவிய கால நூல்களில் வழங்கும் வினைமுற்றுகளில் காணப்படவில்லை. ஆனால் பெயர்ச்சொற்களில் அர்கள் என்னும் இரட்டைப் பன்மை விகுதி வழங்குகின்றது என்பதை முன்னர்க் கண்டோம்.

  • இசின் அசைச்சொல் பெற்ற வினைமுற்றுகள்
  • சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் இசின் என்ற அசைச்சொல்லைக் கொண்டு முடியும் தன்மை, முன்னிலை, படர்க்கை வினைமுற்றுகள் நூற்றுக்கும் மலோக வழங்கியுள்ளன. ஆனால் சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியங்களில் இசின் ஈற்று வினைமுற்று ஒன்று மட்டுமே காணப்படுகிறது.

    கேட்டிசின் வாழி நங்கை என் குறை

    (சிலம்பு. 23 ; 17)

    (கேட்டிசின் = கேட்பாயாக)

    6.4.4 வினையெச்சம்

    தொல்காப்பியர் கூறியுள்ள பத்து வினையெச்ச வாய்பாடுகளில் செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யிய, செயின், செய, செயற்கு, செய்யா என்னும் ஒன்பது வாய்பாடுகள் சங்கம் மருவிய காலத்தில் வழங்குகின்றன. செய்யியர் என்ற ஒரு வாய்பாடு மட்டும் வழங்கவில்லை.

    சங்ககாலத்தில் புதிதாகத் தோன்றிய வினையெச்ச வாய்பாடுகள் யாவும் சங்கம் மருவிய காலத்தில் வழங்குகின்றன. சில புதிய வினையெச்ச வாய்பாடுகளும் வழக்கிற்கு வருகின்றன.

    (1)
    சங்க காலத்தில் செய்வான், செய்பான் என்னும் இரு வாய்பாடுகளைக் கொண்ட வினையெச்சங்கள் வழங்கின. சங்கம் மருவிய காலத்தில் செய்வான் என்ற வாய்பாட்டு வினையெச்சம் மட்டுமே வழங்குகிறது. செய்பான் என்ற வாய்பாட்டு வினையெச்சம் வழங்கவில்லை.

    வலம்புரி தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய்வான்................ (சிலம்பு. 7 ; 8:1)
    (மாய்வான் = மறைந்து போகும்படி)

    (2)
    செயின் என்ற வாய்பாடு சங்கம் மருவிய காலத் தமிழில் செயில் என்றும் வழங்குகிறது.

    உண்ணற்க கள்ளை உணில் உண்க (குறள். 922 ; 1)
    உணின் - உணில்
    = உண்ண விரும்பினால்)

    (3)
    வினைமுற்றுகளை அடுத்து ஆயின், ஆனால், எனில், ஏல் ஆகியன சேர்ந்து வந்து அவை நிபந்தனை வினையெச்சங்களாகின்றன.

    இன் உயிர் ஈவர் ; ஈயார் ஆயின் (மணி. 2 ; 44)
    கண்டோர் உளர் எனில் காட்டும் (சிலம்பு. 16 ; 199)

    (ஈயார் ஆயின் = கொடார் ஆயின் ; உளர் எனில் = உள்ளார் எனில்)

    6.4.5 பெயரெச்சம்

    தொல்காப்பியர் கூறியுள்ள செய்த, செய்யும் என்னும் இருவகை வாய்பாட்டுப் பெயரெச்சங்களும் மிகுதியாக வழங்குகின்றன. சங்ககாலத்தில் செய்கின்ற என்னும் நிகழ்கால வாய்பாட்டுப் பெயரெச்சம் புதிதாக வந்து பரிபாடலில் மட்டும் ஓர் இடத்தில் வழங்கியது. சங்கம் மருவிய காலத்தில் இவ்வாய்பாட்டுப் பெயரெச்சங்கள் மிகுதியாக வழங்குகின்றன.

    உருள்கின்ற மணிவட்டை (சிலம்பு. 29 ; உரைப்பாட்டு மடை)

    செய்யா, செய்யாத என்னும் இருவகை வாய்பாட்டு எதிர்மறைப் பெயரெச்சங்களும் வழங்குகின்றன. செய்யாத என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சங்கள் சங்க காலத்தைக் காட்டிலும் அதிக அளவில் சங்கம் மருவிய காலத்தில் பயில்கின்றன.

    செய்யா
    புனையா ஓவியம் போல நிற்றலும் (மணி. 16 ; 131)
    செய்யாத
    களையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி
    வளையாத செங்கோல் வளைந்தது
    (சிலம்பு. 19 ; 17-18)
புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 12:20:44(இந்திய நேரம்)