தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

6.2

  • 6.2 ஒலியனியல்

    ஒலியனியலில் சங்ககாலத் தமிழ், தொல்காப்பியர் காலத் தமிழிலிருந்து சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பெற்று வளர்ந்தது. இம்மாற்றங்கள் சங்கம் மருவிய காலத்தில் மேலும் அதிகமாகின்றன. தொல்காப்பியர் தமிழ்மொழியின் ஒலி அமைப்புப் பற்றி மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து கூறிய சில இலக்கணங்களைச் சங்க காலத் தமிழ் போற்றியிருக்க, சங்கம் மருவிய காலத் தமிழ் சற்று மீறியிருப்பதைக் காணமுடிகிறது.

    6.2.1 மொழி முதல் எழுத்துகள்

  • சகர மெய்
  • தொல்காப்பியர் காலத்தில் சகரமெய் அ, ஐ, ஒள என்னும் மூன்று உயிர்களோடு கூடி மொழி முதலில் வரவில்லை. ஆனால் சங்க காலத்தில் சகர மெய் அ, ஐ ஆகிய இரண்டு உயிர்களோடும் கூடி மொழி முதலில் வந்தது. சங்கம் மருவிய காலத்தில் சகரமெய் அகரத்தோடு கூடி மொழி முதலில் வருவது சங்க காலத்தைக் காட்டிலும் மிக அதிகமான சொற்களில் காணப்படுகிறது. இச் சொற்களில் பெரும்பாலானவை சமயத் தொடர்பு காரணமாக வடமொழி, பாலி மொழி ஆகிய பிறமொழிகளிலிருந்து தமிழில் வந்து கலந்தவையாக உள்ளன. சங்கம் மருவிய கால இலக்கியங்களில்,

    சங்க தருமன்
    (ஒரு முனிவன்)
    (மணி. 5 ; 70)
    சங்கமன்
    (ஒரு வணிகன்)
    (சிலம்பு. 23 ; 151)
    சங்கரன்
    (இறைவன்)
    (சிலம்பு. 10 ; 186)
    சங்கரி
    (இறைவி)
    (சிலம்பு. 12 ; 20-3)
    சஞ்சயன்
    (தூதர் தலைவன்)
    (சிலம்பு. 26 ; 137)
    சதுமுகன்
    (இறைவன்)
    (சிலம்பு. 10 ; 186)
    சந்திரதத்தன்
    (ஒரு வணிகன்)
    (மணி. 16 ; 41)
    சந்திர குரு
    (சுக்கிரன், வெள்ளி)
    (சிலம்பு. 14 ; 195)
    சயந்தன்
    (இந்திரன் மகன்)
    (சிலம்பு. 3 ; 119)
    சனமித்திரன்
    (ஓர் அமைச்சன்)
    (மணி. 25 ; 98)

    போன்ற இயற்பெயர்ச் சொற்களிலும்

    சக்கரம்
    (மணி. 10 ; 26)
    சங்கிலி
    (சிலம்பு. 6 ; 99)
    சத்தம்
    (மணி. 29 ; 156)
    சதங்கை
    (சிலம்பு. 6 ; 84)
    சமயம்
    (மணி. 27 ; 80)
    சரணாகதி
    (மணி. 30 ; 5)
    சமன்
    (குறள். 118 ; 1)
    சலம் (வஞ்சனை)
    (குறள். 660 ; 1 956 ; 1)

    போன்ற பிற பெயர்ச்சொற்களிலும் என நூற்றுக்கும் மேற்பட்ட சொற்களில் சகரமெய் அகரத்தோடு கூடி முதலாகிறது.

    வினைச்சொற்களைப் பொறுத்தவரை, சங்கம் மருவிய காலத் தமிழில் ‘சமைப்பேன்’ (அமைப்பேன், செய்வேன்) என்ற ஒரே ஒரு வினைச்சொல்லில் மட்டும் சகரம் முதலாகியுள்ளது. இது தூய தமி்ழ்ச் சொல்லாகும் ; சங்கத் தமிழில் பயிலாத புதிய சொல்லாகும்.

    வேந்தர், முடிமுதல் கலன்கள் சமைப்பேன் யான்

    (சிலம்பு. 16 ; 113-114)

    சகர மெய் ஐகாரத்தோடு கூடிச் சங்ககாலத் தமிழில் பரிபாடலில் சையம் என்ற ஒரு சொல்லில் மட்டும் மொழி முதலானது என்பதை முந்தைய பாடத்தில் கண்டோம். சங்கம் மருவிய காலத் தமிழில் மணிமேகலையில் மட்டும் மூன்று சொற்களில் மொழி முதலாக வருகிறது. இவை யாவும் சமயச் சொற்களாகவே உள்ளன.

    சைதனியவான்
    (மணி. 29 ; 176)
    சைமினி
    (மணி. 27 ; 6)
    சைவவாதி
    (மணி. 27 ; 87)

    சகர மெய் ஒளகாரத்தோடு சேர்ந்து மொழி முதலில் வருதல் சங்க காலத்தைப் போலவே, சங்கம் மருவிய காலத் தமிழிலும் காணப்படவில்லை.

  • யகர மெய்
  • சங்கம் மருவிய காலத் தமிழில் யகர மெய் ஓகார உயிரோடு சேர்ந்து மொழி முதலாவது குறிப்பிடத்தக்க புதிய இயல்பாக உள்ளது.

    யோகத்து உறுபயன் கண்டால் (மணி. 3 ; 100-101)
    ஒருநூற்று நாற்பது யோசனை (சிலம்பு. 25 ; 15)

    (யோகம் = தவநெறி ; யோசனை = மிகத் தொலைவான தூரத்தைக் குறிக்கும் சொல்.)

    6.2.2 மொழி முதல் துணை

    சங்கம் மருவிய காலத்தில் ரகர, லகர மெய்யை முதலாகக் கொண்ட வடமொழிச் சொற்கள் அ, இ, உ ஆகிய எழுத்துகளுள் ஒன்றைத் துணையாகக் கொண்டே வழங்குகின்றன.

    ராமன்
    - இராமன்
    (சிலம்பு. 15 ; 199, மணி. 27 ; 59)
    ராவணன்
    - இராவணன்
    (மணி. 27 ; 54)
    ராகுலன்
    - இராகுலன்
    (மணி. 9 ; 46)
    ராசமாதேவி
    - இராசமாதேவி
    (மணி. 21 ; 76)
    ரவி
    - இரவி
    (மணி. 24 ; 58)
    ரத்தினம்
    - இரத்தினம்
    (மணி. 10 ; 25)
    லோகவிருத்தம்
    - உலோக விருத்தம்
    (மணி. 29 ; 149)
    லோகாயதம்
    - உலோகாயதம்
    (மணி. 27 ; 78)

    இவ்வாறு மொழி முதல் துணை இல்லாமல் லகரம் ஒரே ஒரு சொல்லில் மட்டும் முதலில் வந்துள்ளது.

    (எ.கா) லோகம் (உலகம்) - மணிமேகலை, 12 ; 73

    6.2.3 மொழி இடை மெய்ம்மயக்கம்

    மொழியின் இடையில் ஒவ்வொரு மெய்யெழுத்தும் எந்தெந்த மெய்யெழுத்துகளோடு மயங்கும், மயங்காது என்பது பற்றிய விதிகளை வரையறுத்துக் கூறியுள்ளார் தொல்காப்பியர். க்,ச்,த்,ப் ஆகிய நான்கு வல்லின மெய்களை அடுத்து அதே மெய்கள்தான் வரும் ; பிற மெய்கள் வாரா என்கிறார் அவர். சங்கம் மருவிய காலத் தமிழில் அளவுக்கு அதிகமான பிறமொழிச் சொற்கள் கலந்தன. அவற்றுள் பல சொற்கள் தமிழ் மொழியின் ஒலியமைப்பி்ற்கு மாறான க்ய், க்ர், ச்ர், த்ர், த்ன், ப்த், ஷ்ட் என்னும் மெய்க் கூட்டுகளைக் கொண்டிருந்தன. அச்சொற்களைத் திருவள்ளுவர், இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார் மூவரும் தமிழ் மொழியின் ஒலியமைப்பிற்கு ஏற்பக் கீழ்க்கண்டவாறு மாற்றி ஏற்றுக் கொண்டனர்.

    பாக்யம் (க்ய்)
    - பாக்கியம்
    (குறள். 1141 ; 2)
    சக்ரம் (க்ர்)
    - சக்கரம்
    (மணி. 10 ; 26)
    வச்ரம் (ச்ர்)
    - வச்சிரம்
    (சிலம்பு. 5 ; 141)
    சனமித்ரன் (த்ர்)
    - சனமித்திரன்
    (மணி. 25 ; 98)
    ரத்னம் (த்ன்)
    - இரத்தினம்
    (மணி. 10 ; 25)
    சப்தம் (ப்த்)
    - சத்தம்
    (மணி. 29 ; 156)
    அஷ்டமி (ஷ்ட்)
    - அட்டமி
    (சிலம்பு. 23 ; 134)

    6.2.4 தனிக்குறில் முன்னர் ரகரமெய் வருகை

    தமிழ்ச் சொல்லில் ஒரு தனிமெய்யை அடுத்து ரகர மெய்யோ ழகர மெய்யோ வாரா என்பது தொல்காப்பிய இலக்கணம்.

    ரகார, ழகாரம் குற்றொற்று ஆகா (தொல். எழுத்து. 49)

    தொல்காப்பியர் கூறியுள்ள இந்த ஒலி இயல்பைச் சங்க காலத் தமிழ் மாறாமல் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இவ்விதியை மீறிச் சில சொற்கள் அமைந்துள்ளன. இவை வடசொல் ஒலி அமைப்பிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து (சிலம்பு. 3 ; 58)
    வர்த்தித்தல் (மணி. 29 ; 256)

    (வர்த்தனை = குரல் முதலிய ஏழு சுரங்களையும் ஏற்ற இறக்க முறையில் பாடுதல்; வர்த்தித்தல் = பொருந்துதல்)

    6.2.5 ஒலிமாற்றங்கள்

  • மொழி முதல் யகரம் மறைதல்
  • மொழி முதல் யகர மறைவு, சங்க காலத்தைப் போலவே சங்கம் மருவிய காலத்திலும் மிகுதியாகக் காணப்படுகிறது. யார் என்ற வினாப்பெயர், சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் பெரும்பாலான இடங்களில் ஆர் என்றே வழங்குகிறது.

    ஆர் இக் கொடுமை செய்தார் (சிலம்பு. 7 ; 38-4)
    ஆரும் இல் ஒரு சிறை (மணி. 4 ; 95)

    மேலும் யானை, யாண்டு போன்ற சொற்களும் மொழி முதல் யகர மெய் கெட்டு வழங்குகின்றன.

    ஆனைத் தீநோய் அரும்பசி களைய (மணி. 20 ; 35)
    ஈர்ஆறு ஆண்டு அகவையாள் (சிலம்பு. 1 ; 24)

  • ழகர நகரப் புணர்ச்சி
  • நிலை மொழி இறுதியில் உள்ள ழகர மெய்யும் வருமொழி முதலில் உள்ள நகர மெய்யும் புணரும்போது, இரண்டும் இயைந்து ணகர மெய்யாக மாறும் புணர்ச்சி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.

    வாழ்
    + நாள்
    = வாணாள்
    வாழ்
    + நர்
    = வாணர் மண்

    ஆள் வேந்தே நின் வாணாட்கள் (சிலப்பதிகாரம். 28 ; 125)
    தாதையைக் கேட்கில் தன்குல வாணர் (சிலப்பதிகாரம். 15 ; 126)

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    சங்கம் மருவிய காலத் தமிழ் மொழி வரலாற்றை அறிய உதவும் இலக்கியங்கள் யாவை?
    2.
    சங்கம் மருவிய காலத் தமிழில் சகர மெய் எந்த உயிரோடு மட்டும் கூடி மொழி முதலில் வரவில்லை?
    3.
    சங்கம் மருவிய காலத்தில் சகர மெய் அகர உயிரோடு கூடி மொழி முதலாக வந்த வினைச் சொல் யாது? அது எந்த நூலில் காணப்படுகிறது?
    4.
    சகரமெய் ஐகாரத்தோடு கூடி மொழி முதலாவது மணிமேகலையில் எத்தனை சொற்களில் காணப்படுகிறது? அவை யாவை?
    5.
    யகரமெய் ஓகார உயிரோடு சேர்ந்து மொழி முதலானதற்கு இரு சொற்களைச் சான்று காட்டுக.
    6.
    லகரமெய் சங்கம் மருவிய காலத்தில் மொழி முதலாக வந்த சொல்லைக் குறிப்பிடுக.
    7.
    ராமன், ராவணன், ரவி ஆகிய பிறமொழிச் சொற்கள் தமிழ் ஒலியமைப்பிற்கு ஏற்ப எவ்வாறு எழுதப்பட்டன?
    8.
    வச்ரம், சக்ரம், சப்தம் ஆகிய பிறமொழிச் சொற்கள் சங்கம் மருவிய கால நூல்களில் எவ்வாறு மாறி அமைந்தன?
    9.
    தனிக்குறில் முன்னர் ரகர மெய் வருதல் சங்கம் மருவிய காலத் தமிழில் எத்தனை சொற்களில் காணப்படுகிறது? அவை யாவை?
    10.
    வாணாள், வாணர் - இச்சொற்களைப் பிரித்துக் காட்டுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 15:13:04(இந்திய நேரம்)