தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 6.5 தொகுப்புரை

    தொல்காப்பியர் காலத் தமிழிலிருந்து சங்க காலத் தமிழில் ஏற்பட்ட மாற்றங்கள் சங்கம் மருவிய காலத் தமிழில் அதிகமாக வழங்குகின்றன. ஒலியனியலைப் பொறுத்தவரை, சங்ககாலத்தில் சகரமெய் அ, ஐ ஆகிய உயிர்களோடு கூடி மொழி முதலாவது ஏறத்தாழ இருபது சொற்கள் என்ற அளவில் காணப்பட்டது. இது சங்கம் மருவிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் என்ற அளவில் மிகுதியாகக் காணப்படுகிறது. யகர மெய் ஓகாரத்தோடு சேர்ந்து மொழி முதலாவது சங்கம் மருவிய காலத் தமிழில் முதன்முதலாகக் காணப்படுகிறது. அதேபோல், லகர மெய் மொழி முதலாவது சங்கம் மருவிய காலத் தமிழில்தான் முதன்முதலாகக் காணப்படுகிறது. வடமொழிச் சொல்லை ஏற்கும்போது தனிக் குறிலை அடுத்து ரகர மெய் வரும் போக்கு சில இடங்களில் காணப்படுகிறது. உருபனியலில் பெயர்ச் சொல்லைப் பொறுத்தவரை சங்கம் மருவிய காலத் தமிழ் பல்வேறு மாற்றங்களைப் பெற்று வளர்ந்துள்ளது. மூவிடப் பெயர்களில் யாங்கள், எங்கள், நுங்கள், தங்கள் ஆகிய நான்கு புதிய வடிவங்கள் முதன்முதலாக வழக்கிற்கு வருகின்றன. இவை மிகக் குறைவான இடங்களிலேயே வருகின்றன. கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சங்க காலத்தில் இரு வகைப்பட்ட நிலையில் செயல்பட்டது. சங்கம் மருவிய காலத்தில் அது ஐவகைப்பட்ட நிலையில் செயலாற்றுகிறது. கள் விகுதி சங்கம் மருவிய காலத் தமிழின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. வேற்றுமை உருபுகள் சிலவற்றின் வடிவத்தில் சிறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. ஒருசில வேற்றுமைகளின் பொருளை உணர்த்தப் புதிய உருபுகள் சில முதன்முதலாக வழங்க வந்துள்ளன. வினைச்சொல்லைப் பொறுத்தவரை சங்ககாலத் தமிழில் வழங்கிய வினைமுற்று விகுதிகள், வினையெச்ச, பெயரெச்ச வாய்பாடுகளே வழங்குகின்றன. சுருங்கக் கூறின் சங்கம் மருவிய காலத் தமிழ் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களைப் பெற்றிருப்பினும் பெரும்பாலும் சங்க காலத் தமிழாகவே உள்ளது ; சங்கத் தமிழில் தோன்றிய மாற்றங்கள் சங்கம் மருவிய காலத் தமிழில் மிகுந்த அளவில் வழங்கலாயின எனலாம்.

     
    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
     
    1.
    சங்கம் மருவிய காலத் தமிழில் மூவிடப்பெயர்களில் வழங்கிய புதிய வடிவங்களைக் குறிப்பிடுக.
    2.
    கோவலன் தான் போன பின்னர்- இவ்வரியில் தான் என்பது அசையாக வருகிறதா? படர்க்கை இடப்பெயராக வருகிறதா?
    3.
    அ, இ என்னும் சுட்டெழுத்துகளின் அடியாகத் தோன்றிய சுட்டுப் பெயரடைகள் யாவை?
    4.
    சங்கம் மருவிய காலத்தில் காரர் என்ற புதிய விகுதி பெற்று அமைந்த சொற்கள் மூன்றினைக் குறிப்பிடுக.
    5.
    சங்கம் மருவிய காலத் தமிழில் கள் விகுதி, பெயர்ச் சொற்களில் எத்தனை வகையாகச் செயல்படுகிறது?
    6.
    இயற்பெயர்களின் இறுதியில் உயர்வு ஒருமை விகுதியாக வழங்குவது யாது?
    7.
    ஆன் என்ற உருபு சங்கம் மருவிய காலத் தமிழில் எவ்வாறு மாறி வழங்குகின்றது?
    8.
    மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருவிப்பொருளை உணர்த்த வந்த சொல்லுருபு யாது?
    9.
    உடைய என்னும் சொல்லுருபு எந்த வேற்றுமைக்கு உரியதாக வழங்குகிறது?
    10.
    முன்னிலைப் பன்மை வினைமுற்றில் புதிதாக வந்து பயிலும் இரட்டைப் பன்மை விகுதி யாது?
    11.
    வாழ்த்துவோம் - இச்சொல்லில் இடம் பெறும் விகுதி யாது? அது எந்தக் காலத்தில் முதன்முதலாக வழக்கிற்கு வந்தது?
    12.
    புனையா ஓவியம் போல் நிற்றலும். வளையாத செங்கோலும் வளைந்தது. - இத்தொடர்களில் வரும் பெயரெச்சங்களை அவற்றிற்கு உரிய வாய்பாடுகளுடன் குறிப்பிடுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-08-2017 13:40:17(இந்திய நேரம்)