தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 4.2

  • 4.2 மதம்  
     

    E

    நம் நாட்டில் பல மதங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் தனிதனிக் கொள்கைகள் உள்ளன. அந்தக் கொள்கைகளை வலியுறுத்துவதற்காக அறிவுக்குப் பொருந்தாத பல கருத்துகளை அவை பரப்புகின்றன. மதங்களின் இந்த நிலையை - பகுத்தறிவுக்குப் பொருந்தாத நிலையைப் பாரதிதாசன் வெறுக்கிறார். எனவே, மதங்கள் வளர்வது மக்களுக்கு நல்லது அல்ல என்று கருதிய பாரதிதாசன்,
     

    மதம் வளர்ந்தால்     
    படுபாழாம் பகுத்தறிவு

    (குறிஞ்சித்திட்டு : பக். 136)
     

    என்று பாடியுள்ளார். அறிவை அழிப்பதாலேயே மதங்களை வேண்டாம் என்று எண்ணிய பாரதிதாசன், ‘குறிஞ்சித்திட்டு’ என்ற கற்பனை நாடு ஒன்றைப் படைக்கிறார் அந்நாடு நன்றாக இருப்பதற்குக் காரணம்.
     

    மதமில்லை குறிஞ்சித் திட்டில்     
    மதம் பெற்ற சாதி இல்லை

    (குறிஞ்சித்திட்டு : ப. 6)
     

    என்று பாடியுள்ளார்.
     

    4.2.1 மனிதனை அழிக்கும் மதம்
     

    மனிதனை மனிதத் தன்மையிலிருந்து கீழ் இறக்குவது மதம். இதை விளக்குவதற்குப் பாரதிதாசன்,
     

    மத ஓடத்தில் ஏறிய மாந்தரே - பலி         
    பீடத்திலே சாய்ந்தீரே

    (பாரதிதாசன் கவிதைகள், 59 பலிபீடம்)
     

    என்று பாடியுள்ளார். இப்பாடலில் மதத்தைப் பலிபீடமாக உருவகம் செய்து பாடியுள்ளார் பாரதிதாசன். மேலும் ஓடத்தின் செயலாகிய சாய்தலை, மதத்தின் பிடியில் சிக்கியுள்ள மனிதர்களுக்கு உருவகம் செய்து உள்ளார். இவ்வாறு இரண்டு வரிகளில் உருவக அழகை வெளிப்படுத்தியுள்ளார் பாரதிதாசன்.
     

    மூடத்தனத்தை முடுக்கும் மதத்தைநிர்     
    மூலப்படுத்த கை ஓங்குவீர் - பலி     
    பீடத்தை விட்டுஇனி நீங்குவீர் - செல்வ     
    நாடு நமக்கு என்று வாங்குவீர்

    (பாரதிதாசன் கவிதைகள், 59 பலிபீடம்)
     

    என்னும் வரிகளில் மூடத்தனத்தை வளர்ப்பதற்கு மதமே காரணம் என்னும் கருத்தை எடுத்துக் கூறியுள்ளார். இனிமலோவது பலிபீடத்தை விட்டு நீங்குங்கள் என்று மதத்திலிருந்து மக்களை விலக்குவதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மதம் என்பது கருங்கல் போன்றது. அதில் மல்லிகைக் கொடி வளர்ந்து மல்லிகைப் பூக்களைத் தருவது இல்லை என்ற கருத்தைப் பாரதிதாசன்,
     

    மதம் என்ற கருங்கல் பாங்கில்     
    மல்லிகை பூப்பது இல்லை

    (குறிஞ்சித்திட்டு, பக். 115)

    என்று பாடியுள்ளார்.

    மதத்தைக் கருங்கல் என்று கூறிய பாரதிதாசன் அதே பொருள் கொண்ட சமயத்தைச் சூளை என்று கூறியுள்ளார்.
     

    சமயம் எனும் சூளையிலே     
    தமிழ்நட்டால் முளையாது

    (தமிழியக்கம் : 20)
     

    என்னும் பாடலில் சமயத்தைச் செங்கல் சூளையாகப் பாடியுள்ளார். செங்கல் சூளையில் வெப்பம்தான் இருக்கும். இந்த வெப்பத்தில் தமிழாகிய பயிரை நட்டால் அது முளைக்காது என்று எடுத்துக் கூறியுள்ளார்.
     

    4.2.2 சாதி வளர்க்கும் மதங்கள்
     

    ஆயிரக்கணக்கான சாதிகள் நமது நாட்டில் தோன்றுவதற்கும் வளர்வதற்கும் மதம்தான் காரணம் என்கிறார் பாரதிதாசன். இவ்வாறு வளர்க்கப்பட்ட சாதிகளுக்கிடையே சண்டையை மூட்டி விடுவதும் மதம்தான் என்பதையும் அவர் அழகாகப் பாடியுள்ளார்.
     


     

    ஆயிரம் சாதிகள் ஒப்பி - நரி     
         அன்னவர் காலிடை வீழ்ந்து     
    நாய்களைப் போல் தமக்கு உள்ளே-சண்டை     
         நாளும் வளர்க்கும் மதங்கள்

    (பன்மணித்திரள், பக். 147)
     

    என்று சாதிச்சண்டை போடுவது, நாய்கள் தமக்குள்ளே சண்டை போடுவதுபோல் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இதில் மதத்தைச் சாதிகளின் வேராகப் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சாதிச்சண்டைக்கு வேராக விளங்கும் மதம் பொய்யானது, போலியானது என்பதைப் பெண்குழந்தைத் தாலாட்டு என்னும் பாடலில் குறிப்பிட்டு உள்ளார்.
     

    மதத்தின் பொய்ம்மையைப் பற்றி யாருக்கு எடுத்துக் கூறுவது என்று எண்ணிப்பார்த்தார் பாரதிதாசன். வளர்ந்தவர்களுக்குக் கூறிப் பயனில்லை. அவர்கள் தம்போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். எனவே குழந்தைக்குப் பாடும் தாலாட்டில் வலிமைமிக்க சீர்திருத்தக் கருத்துகளைச் சேர்த்துப் பாடியுள்ளார். அதுவும் பெண் குழந்தைக்குப் பாடும் தாலாட்டில் இக்கருத்தைக் கூறியுள்ளார்.
     

    புண்ணில் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தைக்
    கண்ணில் கனல் சிந்திக் கட்டழிக்க வந்தவளே

    (பாரதிதாசன் கவிதைகள்,42 பெண்குழந்தைத்தாலாட்டு - 10)
     

    என்று ‘மதத்தின் பேரால் கூட்டம் சேர்ப்போரைத் தம் கண்ணில் சிந்தும் கோபக்கனலால் கட்டழிக்க வந்த பெண்ணே’ என்று பெண் குழந்தையைப் பாராட்டுகிறார் பாரதிதாசன்.
     

    4.2.3 மதவாதிகள்
     

    மதங்களின் பெயரைச் சொல்லிக் கொடுமைகள் செய்பவரை மதவாதிகள் என்று பாரதிதாசன் சுட்டிக் காட்டியுள்ளார். அவர்கள், தமிழர்களின் பணத்தைப் பறிப்பதிலேயே குறிக்கோளாய் இருப்பவர்கள் என்பதை,
     

    வாதனை சொல்லி வணங்கி நின்றால் தெய்வ     
    சோதனை என்று அவர் சொல்லுவார் - பணச்     
    சாதனையால் உம்மை வெல்லுவார் - கெட்ட     
    போதனையால் தினம் கொல்லுவார்

    (பாரதிதாசன் கவிதைகள், 59 பலிபீடம் - 5)
     

    என்று பாடியுள்ளார். இந்த மதவாதிகள் ஏமாளிகளை ஏமாற்றுவார்கள்; இளைத்தவர்களை மிரட்டுவார்கள் என்னும் உண்மையை அறிந்தவர் பாரதிதாசன். எனவே,
     

    மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே

    (பாண்டியன் பரிசு இயல் 56)
     

    (மருட்டுகின்ற = மயக்குகின்ற)
     

    என்று வருத்தப்பட்டுப் பாடியுள்ளார். இத்தகைய மதவாதிகள் உண்மையைப் பொய் என்று கூறுவார்கள்; திருடரைச் சாமி என்று கூறுவார்கள்; மூடத்தனத்தைப் பரப்புபவர்களைப் பாவலர் என்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
     

    விழித்திருக்கும் போதிலேயே - நாட்டில்     
    விளையாடும் திருடரை ‘சாமி’ என்கின்றார்.     
    அழியாத மூடத்தனத்தை - ஏட்டில்     
    அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை     
    முழுது ஆய்ந்த பாவலர் என்பார் - இவர்     
    முதல் எழுத்து ஓதினும் மதி இருட்டாகும்

    (பாரதிதாசன் கவிதைகள், 49 மாண்டவன் மீண்டான் - 5)
     

    இத்தகைய மதவாதிகளிடம் தமிழர்கள் விழிப்பாய் இருக்கவேண்டும் என்று பாரதிதாசன் உணர்த்தியுள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:51:16(இந்திய நேரம்)