தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 4.4-சுயமரியாதை

  • 4.4 சுயமரியாதை
     

    E

    மனிதன் தனக்கு இருக்கும் மதிப்பை உணர்ந்து செயல்படுதல் சுயமரியாதை ஆகும். தன்மதிப்பை உணர்ந்த மனிதர்களின் வாழ்க்கை பகுத்தறிவை ஏற்றுக் கொள்ளும். தன்மதிப்பை உணராத மனிதர்களின் வாழ்க்கை மூடநம்பிக்கையில் மூழ்கிவிடும்.


    சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள்
         தாங்கி நடைபெற்றுவரும் சண்டை உலகிதனை
    ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்; பின்னர்
         ஒழித்திடுவோம், புதியதோர் உலகம் செய்வோம்
    பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப்
         பேசு சுயமரியாதை உலகுஎனப் பேர்வைப்போம்
    ஈதேகாண் சமூகமே யாம் சொன்னவகையில்
         ஏறு நீ! ஏறு நீ! ஏறு நீ! ஏறே

    (பாரதிதாசன் கவிதைகள், 52 முன்னேறு - 1)


    (ஊத = வாடைக்காற்று)

    என்னும் பாடலில் சுயமரியாதை உடையவர்கள் சாதியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; மதத்தை ஒதுக்கி விடுவார்கள்; மூடநம்பிக்கையில் வீழமாட்டார்கள் என்று பாரதிதாசன் பாடியுள்ளார். மேலும் இத்தகைய சுயமரியாதை கொண்டவர்கள் நிறைந்ததுதான் சமூகம் என்று இளைஞர்களுக்குச் சுட்டிக் காட்டியுள்ளார்.
     

    4.4.1 உயர்வுக்குச் சுயமரியாதை
     

    மனிதன் தனது வாழ்வில் உயர வேண்டும் என்றால் சுயமரியாதையுடன் வாழ்வது அவசியம் ஆகும்.


    சுயமரியாதை கொள் தோழா - நீ
    துயர் கெடுப்பாய் வாழ்வில் உயர்வு அடைவாயே

    (பாரதிதாசன் கவிதைகள், 48. வாழ்வில் உயர்வு கொள் - 1)


    என்னும் வரிகளில் சுயமரியாதை கொண்டவனால் தனது துன்பங்களை வெல்லமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு பிரிவுகளை மனிதர்களிடையே வளர்த்துக் கொண்டு நாம் வாழ்கிறோம். இந்தப் பிரிவுகளால் நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் பல எழுகின்றன. இக்கருத்து வேறுபாடுகளுடன் வாழும் வாழ்க்கை என்பது வாழ்வு ஆகாது. வேறு எதுதான் உயர்ந்த வாழ்க்கை? என்ற கேள்விக்கு விடையை எதிர்பார்த்து, பாரதிதாசன் நம்மிடம் கேட்கிறார்.


    சூழும் நாற்பேதம் தொடர்வது வாழ்வோ?
    சுயமரியாதையால் உயர்வது வாழ்வோ?

    (பாரதிதாசன் கவிதைகள், 50 ஆய்ந்து பார் - 10)


    (நாற்பேதம் = நால்வகைச் சாதிபேதம்)

    என்று தான் எதிர்பார்க்கும் பதிலைக் கூறச் செய்கிறார். சுயமரியாதையால் உயரமுடியும் என்று தெளிவுபடுத்துகிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:51:22(இந்திய நேரம்)