தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 4.6-கடவுள் இல்லை

  • 4.6 கடவுள் இல்லை
     

    E

    பாவேந்தர் பாரதிதாசன் கடவுள் இல்லை என்னும் கருத்துக் கொண்டவர். தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளுக்குக் கவிதை வடிவம் தந்தவர் பாரதிதாசன் ஆவார். கடவுள் இல்லை என்னும் கருத்தைத் தெரிவிக்க விரும்பிய பாரதிதாசன்,
     


     

    கடவுள் கடவுள் என்று எதற்கும்
         கதறுகின்ற மனிதர்காள்
    கடவுள் என்ற நாமதேயம்
         கழறிடாத நாளிலும்
    உடைமை யாவும் பொதுமையாக
         உலக நன்று வாழ்ந்ததாம்
    கடையர் செல்வர் என்ற தொல்லை
         கடவுள் பேர் இழைத்ததே!

    (பாரதிதாசன் கவிதைகள், 45 தளை அறு - 1)
     

    (நாமதேயம் = பெயர், கழறிடாத = சொல்லிடாத, கடையர் = இழிந்தோர்)
     

    என்று பாடியுள்ளார்.

    கடவுள் பேரைச் சொல்லித்தான் மக்களை ஏழை என்றும் செல்வர் என்றும் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார் பாரதிதாசன். மேலும், கடவுள் பேரைச் சொல்லாத பழங்காலத்தில் கூட, செல்வங்கள் எல்லாருக்கும் பொதுவாக இருந்தன. ஆனால், இன்று சமுதாயம் ஏற்றத்தாழ்வு நிறைந்தது ஆகிவிட்டது என்கிறார்.
     

    4.6.1 கடவுள் ஆணை இல்லை
     

    வயலில் காலை முதல் மாலை வரை உழைக்கின்ற ஏழை மிகக்குறைவான கூலியைப் பெறுகிறான். ஆனால், உடல் உழைப்பு இல்லாத செல்வர்கள் உலகச் செல்வங்களை எல்லாம் தங்களுடையது ஆக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு ஏழைகள் மேலும் ஏழை ஆவதும், செல்வர்கள் மேலும் செல்வர்கள் ஆவதும் கடவுளின் ஆணை இல்லை என்பதையும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
     

    நடவு செய்த தோழர் கூலி
         நாலணாவை ஏற்பதும்
    உடல் உழைப்பு இலாத செல்வர்
         உலகை ஆண்டு உலாவலும்
    கடவுள் ஆணை என்று உரைத்த
         கயவர் கூட்டம் மீதிலே
    கடவுள் என்ற கட்டறுத்துத்
         தொழிலாளரை ஏவுவோம்

    (பாரதிதாசன் கவிதைகள், 45 தளை அறு - 5)
     

    என்னும் வரிகளில் கடவுள் என்னும் கருத்துருவை இல்லாமல் ஆக்குவதற்குத் தொழிலாளர்களை ஏவுதல் வேண்டும் என்கிறார் பாரதிதாசன்.

    கடவுளை நம்பும் மக்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள். ‘உன் கடவுள் தாழ்ந்தவன்; என் கடவுள் உயர்ந்தவன்’ என்று இல்லாத கடவுளைச் சொல்லிச் சண்டை போடுகிறார்கள். இவ்வாறு தங்களுக்குள் சண்டை ஏற்படுத்தும் கடவுளை ஒழிக்க வேண்டும் என்கிறார் பாரதிதாசன்.

    பிணக்கு ஏற்படுத்தும் கடவுளைக்
    கணக்குத் தீர்த்தல் மனிதர் தம் கடமையே

    (நாள் மலர்கள், பக். 121)
     

    என்று கடவுளுக்குக் கணக்குத் தீர்ப்பது மனிதரின் கடமை என்கிறார்.
     

    4.6.2 தன்னம்பிக்கையே கடவுள்
     

    மக்கள் தொடர்ந்து கடவுளை வணங்கி வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் வறுமையால் வாடுகிறார்கள். இவர்களது வறுமையைக் கடவுள் ஏன் போக்கவில்லை என்ற கேள்வியை மக்களிடையே பாரதிதாசன் தொடுக்கின்றார்.
     

    தன்னைக் காக்கத் தெரியாக் கடவுள்
    தன்னை நம்பிய மக்களைக் காத்ததா?

    (நாள் மலர்கள், பக். 121)
     

    என்று கடவுளால் தன்னையே காத்துக் கொள்ள இயலவில்லை. அவரால் எப்படி அவரை நம்பும் மக்களைக் காப்பாற்ற முடியும்? என்று பாரதிதாசன் கேட்கிறார். இதன்மூலம் மக்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
     

    4.6.3 தமிழ் வளர்ச்சிக்குப் பகுத்தறிவு
     

    தமிழ்மொழி கரும்பைப் போல் இனிமையானது: எல்லாருக்கும் பொதுவானது. தமிழ்மொழி ஒரு மதத்திற்கு மட்டும் உரிய மொழி அல்ல. எனவே, சமயவெறிக் கருத்துகள் தமிழ்மொழிக்கு இழிவைத் தரும் என்று பாரதிதாசன் கருதியுள்ளார், இதை,
     

    கடவுள்வெறி சமயவெறி
         கன்னல் நிகர் தமிழுக்கு
              நோய்! நோய்! நோயே!

    (தமிழியக்கம் - 24)
     

    என்று பாடியுள்ளார். கடவுள் நம்பிக்கையும் சமயநெறியும் தமிழ் மொழியில் பிறமொழி கலப்பதற்குக் காரணமாய் அமைந்துவிட்டன என்ற கருத்தைப் பாரதிதாசன் இந்த வரிகளில் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:51:28(இந்திய நேரம்)