Primary tabs
-
2.1 தெருக்கூத்து
இயல், இசை, நாடகம் எனத் தமிழை மூவகையாகப் பாகுபடுத்துவர் என்பதை அறிவீர்கள். இவற்றுள் நாடகம் என்பதே கூத்து எனப்பட்டது.
கூத்து, தெருக்கூத்து, தெருக்கூத்து நாடகம் என்று அழைக்கப்படுகிற நாடகக் கலைவடிவம் மிகவும் பழைமையானது. பழந்தமிழ் நூல்களில் கூத்து, கூத்தன், கூத்தியர், கூத்தியல், கூத்தாட்டவை, கூத்தப்பள்ளி எனப் பல சொற்களும் சொற்சேர்க்கைகளும் காணப்படுகின்றன. உரையாசிரியர் குறிப்பிலும் கல்வெட்டுகளிலும் கூத்து பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. பொதுமக்களுக்கு என்றும் அரசர் போன்ற பெரிய மனிதர்களுக்கு என்றும் கூத்துகள் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. அரங்கத்தில் நடத்தப்பட்ட கூத்து என்ற நாடகம் பொதுமக்களுக்காகத் தெருவில் நடத்தப்பட்ட போது தெருக்கூத்து என்று ஆகியிருக்கிறது.
தெருக்கூத்து
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
பல்லவ அரசன் பரமேசுவர வர்மன் வாதாபி மீது படையெடுத்துச் சென்ற காலத்தில் இவ்வழக்கம் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். படை திரட்டுவதற்காக மக்களிடையே போர்க்குணத்தை உருவாக்க வேண்டியிருந்தது. அதற்காகப் போர் நிகழ்ச்சிகள் நிறைந்த பாரதக் கதையைக் கோயில்களில் படித்து மக்களைக் கேட்கச் செய்யும் வழக்கம் உண்டாக்கப்பட்டது. இதற்காக மானியம் வழங்கப்பட்டதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. அதனால்தான் பல்லவர் ஆட்சி நிலவிய அப்பகுதிகளில் இவ்வழக்கம் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். பிற்காலத்தில் தேசிங்கு ராஜன் செஞ்சியை ஆண்டபோது, திரௌபதி அம்மன் கோயில்களில் பாரதக் கூத்து நடத்த வேண்டும் என்று ஏற்பாடு செய்ததாகவும் கூறுகிறார்கள். இக்காலத்தில், கிராமத் திருவிழாக்களில் கதை படிக்கிற, கூத்து நடத்துகிற பொறுப்பை ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு சாதியினர் என்று முறைவைத்து மேற்கொண்டு வருகின்றனர்.
நோய், மழையின்மை, திருட்டு முதலான கேடுகள் நீங்க வேண்டும் என்பதற்காக அம்மனை வழிபட்டுக் கூத்து நடத்தும் வழக்கமும் இருந்தது. குழந்தைப் பேற்றுக்காகவும் ஈமச்சடங்காகவும் திருப்பதி போய் வந்தமைக்கும் கூடக் கூத்து நடத்தும் வழக்கம் இருந்தது. தற்பொழுது இவ்வழக்கம் குறைந்துவிட்டது. பொதுவான நிகழ்வாக இதே கூத்துகள் அரிதாக நடத்தப்படுகின்றன.
வேண்டுதலுக்காகச் சில கூத்துகள் நடத்தப்படுகின்றன. மழை வேண்டி விராட பருவம், தபசு நாடகம் முதலான கூத்துகளை நடத்துகிறார்கள். இறந்தவர் கடனாக வீஷ்மர் சுவர்க்கம், கர்ண மோட்சம், சபரி மோட்சம், துளசி மகத்துவம், வாலி மோட்சம், இராஜசூய யாகம், இராமர் வைகுந்தம் முதலான கூத்துகளை நடத்துகிறார்கள்.
கோயில்களில் கூத்து
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
தெருக்கூத்தின் இன்றைய நிலை
ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்பட்ட கூத்து இன்று பெரும்பாலும் வட மாவட்டங்களில் மட்டும் நடத்தப்படுகிறது. மற்ற இடங்களில் நசிந்துவிட்டது. இன்று கூத்து பெரும்பான்மையாகக் கோயில் சடங்காகவும் சிறுபான்மையாகப் பொது நிகழ்வாகவும் நடத்தப்படுகிறது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் முதலான மாவட்டங்களில் கோடை காலத்தில் திரௌபதி அம்மன் கோயில்களில் கூத்து நடத்தப்படுகிறது. பாரதக் கதையைக் கேட்கிற பழக்கமும் அதே கதையைக் கூத்தாக நடத்திப் பார்க்கிற பழக்கமும் இருக்கின்றன. எந்தக் கதைப்பகுதி படிக்கவும் நடிக்கவும் படுகிறதோ அதற்குத் தகுந்தாற்போல் அம்மனுக்கு அலங்காரம் செய்வார்கள். திரௌபதி திருமண நிகழ்ச்சி கதை உரையாகச் சொல்லப்பட்டால் மாலையில் அம்மன் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்படும். இரவில் பாஞ்சாலி மாலையீடு கூத்து நடத்தப்படும்.
கூத்து கோயில் சடங்காக இருந்தாலும் பொதுவான நிகழ்வாக இருந்தாலும் சில முறைகளின்படி அது நடத்தப்படுகிறது.
தொடக்கம்
கூத்து தொடங்கும் முன் ஒப்பனை அறையில் கூத்து ஆசிரியர் தீபம் ஏற்றி இறைவணக்கம் சொல்வார். கூத்தர்கள், கூத்து நன்கு நடக்க வேண்டிக் கொள்வார்கள். கூத்து ஆசிரியரிடமும் மூத்த கூத்தர்களிடமும் மற்ற கூத்தர்கள் ஆசி பெறுவார்கள். தீப ஆராதனைத் தட்டு இசைக் கலைஞர்களுக்கும் பின்பாட்டுக்காரர்களுக்கும் காட்டப்படும். இதன் மூலம் ஆசிரியர் கூத்தைத் தொடங்க அனுமதி அளிப்பார். கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்குத் தாளம் அல்லது மிருதங்கம் தட்டப்படுகிறது. இது பார்வையாளர்களுக்குக் கூத்தின் தொடக்கத்தை அறிவிப்பதாக இருக்கிறது. பார்வையாளர்களை மனரீதியாகக் கூத்தை ரசிக்கத் தயார்படுத்துவதாகவும் இருக்கிறது. இதற்குக் களரி கட்டுதல் என்றும் மேளக் கட்டு என்றும் பெயர்கள் உண்டு.
கட்டியங்காரன் வருகை
கூத்து அரங்கில் முன்திரை அமைப்பது பெரும்பாலும் இல்லை. இருவர் துணியைத் திரையாகப் பிடித்துக் கொள்வர். முதலில் அரங்கில் நுழைகிற பாத்திரம் கட்டியங்காரன். அவன் ஒன்றிரண்டு பாடல்களைப் பாடிவிட்டு அவைக்கு வணக்கம் சொல்வான். தங்கள் நாடகக்குழு பற்றியும் ஊர்ப் பெயர், ஆசிரியர் பெயர், நடக்க இருக்கும் கூத்தின் பெயர் முதலானவற்றையும் உரக்கக் கூறுவான். இதை ஆடுகளத்தின் எல்லாப் பக்கங்களுக்கும் சென்று கூறுவான். பின்னர் அவையடக்கம் கூறுவான். தங்கள் கூத்தில் சொற்குற்றம், இசைக்குற்றம், பொருள் குற்றம் இருப்பின் பிள்ளைகளைப் போலப் பாவித்துப் பொறுத்து நாடகத்தினைக் கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்வான்.
முன்பிருந்த வழக்கம்
முன்பெல்லாம் கட்டியங்காரனை அழைத்து, கௌரவம் செய்து ஒரு கூத்தை நடத்தித் தர வேண்டும் என்று வேண்டுவார்கள். அவன், ‘என்ன கூத்து வேண்டும்’ எனக் கேட்பான். ‘இன்னது’ என்று சொல்லப் பின்னர்க் கூத்து நிகழும். இந்த மரபு இப்பொழுது இல்லை.
இதே போல முன்பிருந்த இன்னொரு வழக்கம் விநாயகர் வணக்கம். விநாயகர் வேடமிட்ட ஒருவர் அரங்கில் வந்து அமர்ந்து கொள்வார். எல்லாரும் துதிபாடுவார்கள். கட்டியங்காரன் விநாயகரைக் கேலி செய்வான். அவர் சாபமிடுவார். பின் சரஸ்வதி வேடமிட்டவர் வருவார். அதன் பின் கூத்து நடக்கும். விநாயகர் உருவத்தை வைத்து வணங்குவது இப்பொழுது பெரும்பான்மை வழக்கமாக உள்ளது.
கூத்து முடிவு
கட்டியங்காரன் இரவு பத்து மணியிலிருந்து இரண்டு மணி வரை நகைச்சுவை, கதைகள், கூத்தர்களின் பெருமை, பாடல்கள், ஆடல்கள் என்று பொழுதை ஓட்டுவான். தலைவேடதாரி (தலைமைப் பாத்திரம்) வரும்வரை கட்டியங்காரன் அவையை மகிழ்விப்பான். பின் கூத்து தொடங்கி அதிகாலை ஆறரை மணிவரை நிகழும். கதிரவனைக் கண்ட பிறகு கூத்தை முடிக்கும் வழக்கம் இருக்கிறது. இதையொட்டியே ‘கூலிக்காரன் மேற்கே பார்ப்பான், கூத்தாடி கிழக்கே பார்ப்பான்’ என்ற பழமொழி தோன்றியது எனலாம். கூத்து முடிந்தவுடன் கூத்து நடத்தப் பண உதவி செய்த உபயதாரரின் பெயரைக் கூறி வாழ்த்துவார்கள். நிகழ்வுகள் முடிந்த பின் ‘கண்டார்க்கும் கேட்டார்க்கும்’ வாழ்த்துக் கூறி மங்களம் பாடுவார்கள்.
பாரதக் கதைகள் மட்டுமன்றி இராமாயணக் கதைகள், பெரியபுராணக் கதைகள் ஆகியவையும் கூத்துகளாக நிகழ்த்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் கூத்து கோயில் சடங்காக இருக்கிறது. காரைக்குடியில் மார்க்கண்டேயர் கோயிலில் இராமாயணக் கூத்து நடைபெறுகிறது. குமரி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், நெல்லை மாவட்டம், சேலம் மாவட்டம், தஞ்சை மாவட்டம் முதலான இடங்களில் அம்மன் கோயில்களில் கூத்துகள் நடத்தப்படுகின்றன.