Primary tabs
-
2.5 கூத்துக் கலைஞர்கள்
கூத்தாடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் முன்பு இருந்தார்கள். இப்பொழுது ஒருசிலரே அவ்வாறு பாரம்பரியக் கூத்தர்களாக இருக்கிறார்கள். பலர் பிற தொழிலுடன் கூத்தையும் மேற்கொள்கிறார்கள். நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் கூடச் சில பாத்திரங்களை ஏற்று நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பணவசதி உள்ளவர்களும் கூட அவ்வாறு இருக்கிறார்கள். அந்தணர்கள் தவிர எல்லாச் சாதியினரும் கூத்துக் கலையில் ஈடுபடுகிறார்கள். அரிசனப் பிரிவு மக்கள் தங்கள் பகுதியில் கோயிலில் கூத்தாடுகிறார்கள்.
கூத்துக் கலைஞர்கள் தனித்தன்மையுடன் வாழ்கின்றார்கள். பொருளாதார நிலையிலும் மிகவும் துன்பப்படுகின்றனர்.
மன்றங்கள்
கூத்துக் கலைஞர்கள் மன்றங்கள் அமைத்துச் செயல்படுகிறார்கள். புரிசை, வந்தவாசி, வெளியம்பாக்கம் முதலான பகுதிகளில் கூத்துக் கலைஞர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
கூத்து ஆசிரியர்
கூத்துக் கலைஞர்களை ஒருங்கிணைத்து வழி நடத்துபவர் கூத்து ஆசிரியர். கூத்தர்களைக் கூத்து நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதும் திரும்ப அழைத்து வருவதும் இவர் பொறுப்பு. இவர் மற்றவர்களுக்குப் பாடல்களைக் கற்றுக் கொடுத்துக் கூத்துப் பயிற்சி தருகிறார். கூத்துக் கலைஞர்கள் பாடும் ஆற்றல் மிக்கவர்கள். கூத்தின் எல்லாப் பாடல்களுமே அவர்களுக்குத் தெரியும். இடத்திற்கு ஏற்றவாறு வசனம் பேசும் ஆற்றலும் உடையவர்கள்.
சங்கேத மொழி
கூத்து நடக்கும் பொழுது கூத்துக் கலைஞர்கள் பொது மக்கள் அறியாத வண்ணம் தங்களுக்குள் சங்கேத மொழியில் பேசிக் கொள்கிறார்கள். இச்சங்கேத மொழி பகுதிக்குப் பகுதி மாறுபடும். எடுத்துக் காட்டாக வந்தவாசிப் பகுதியில் உள்ள கலைஞர்களின் சங்கேத மொழியைப் பார்ப்போம். ‘மாய்மெசக்கிவிட்டாயா?’ என்றால் ‘சாப்பிட்டாயா?’ என்று பொருள். ‘அக்கினிபாணி’ என்றால் தேநீர் என்று பொருள். ‘முல்லைங்க கசமுறித்தல்’ என்றால் ‘பார்வையாளர் திட்டுகிறார்கள்’ என்று பொருள். ‘பிராப்போ’ என்றால் ‘திறமையாகச் செய்’ என்று பொருள். ‘கித்தான்’ என்றால் ‘பாடலை இன்னும் நீட்டு’ என்று பொருள்.
குறிப்பிடத் தக்க கலைஞர்கள்
புரிசை நடேசத் தம்பிரான், புரிசை கண்ணப்பத் தம்பிரான், பெருங்காட்டூர் பொன்னுசாமி, பெருங்காட்டூர் ராஜகோபால், பத்தரைக் கோட்டையார் எனப்படும் ராஜவேல் வாத்தியார், கொண்டையார் தண்டலம் வரதப்ப வாத்தியார் ஆகியோர் குறிப்பிடத் தக்க கூத்துக் கலைஞர்கள்.
வருமானம்
கூத்துக் கலைஞர்களுக்குப் போதிய வருமானம் கிடைப்பதில்லை. ஒரு கூத்து நடத்த 3000 ரூபாய் வரை சன்மானம் கிடைக்கிறது. அதில் பங்கீட்டின்படி தலைவேடதாரிக்கு 200 ரூபாய் தான் கிடைக்கும். கூத்து தொடங்கும்போது கிடைக்கும் தட்சணை, கூத்து முடியும்போது கிடைக்கும் மங்களப் பணம் முதலான சிறு தொகைகள் கிடைக்கும். சில கூத்தர்கள் துன்பக் காட்சியில் நடிக்கும்போது அவரைச் சார்ந்தவர் மக்களிடம் பணம் வசூலிப்பது உண்டு. சில இடங்களில் அறுவடையின்போது தரும் நெல் போன்ற வருமானங்களும் உண்டு. கோயில் கூத்துகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குலத்தார் உணவு தருவர். ஒரு குலத்தாரை விஞ்சி இன்னொரு குலத்தார் கூத்தர்களைக் கவனிப்பர். இத்தகைய போட்டியின் காரணமாகக் கூத்தர்களுக்கு வருவாய் கிடைக்கும். இதனால்தான் “ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்ற பழமொழி உருவாயிற்று. சரியாகக் கவனிக்காத குலத்தாரைக் கேலி செய்தும் கூத்தர்கள் காட்சியை அமைத்து விடுவார்கள்.